
மௌலவி .எஸ்.முஹம்மத் முஸம்மில் அல் புகாரி
நோன்புக்கான அறிவிப்பை ஏந்தி ரமலான் பிறை வந்தது. தினமும் மெள்ள வளர்ந்தது; நிறைந்தது. பின் தினமும் மெள்ளத் தேயத் தொடங்கும். தேய்ந்து மறையும். பின் மீண்டும் ஷவ்வாலின் பிறை கருமேகத்தில் சின்னதாகப் புன்முறுவலித்து, எட்டிப்பார்க்கும். பிறை தென்பட்டதும் `இறைவன் மிகப்பெரியவன்’ என்னும் புகழ்மொழி, நன்றிப்பெருக்கோடு ‘அல்லாஹு அக்பர்’ என்று விண்தொட்டு நிற்கும்.
பெருநாள் பிறை தென்பட்டதும், உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உற்சாகம் பெருவெள்ளமாகப் பெருகி, மகிழ்ச்சி நதி வீதியோடும். பசித்திருந்த வயிறுகளில் பால்சுரக்கும். விழித்திருந்த விழிகளில் ஒளி பிறக்கும். ஸதக்கதுல் பித்ர் என்னும் பெருநாள் தர்மத்தை முஸ்லிம்கள் வழங்கத் தொடங்குவார்கள்.

அதிகாலை துயிலெழுந்து வழக்கம்போல் ஃபஜ்ர் என்னும் வைகறைத் தொழுகை தொழுவார்கள். நேரமே குளித்து, புத்தாடையணிந்து, வண்ணப் பூக்களாக மக்கள் தோட்டம் மலரத் தொடங்கும். ஒரு மாதம் நோன்பிருந்தனர். இன்று பெருநாளல்லவா..? உணவருந்துவார்கள்.
நபி(ஸல்)அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்காகச் செல்லும்போது உணவருந்தாமல் செல்வார்கள். ஆனால், நோன்புப் பெருநாள் தொழுகைக்காகச் செல்வதற்கு முன்னர் உணவருந்துவார்கள். பேரீச்சம் பழங்களை ஒற்றைப்படையில் உண்பது அவர்கள் வழக்கம். பழங்களைச் சாப்பிட்டுவிட்டு தொழுகைக்காகத் திடலேகுவார்கள்.
வழக்கமாகத் தொழுகை யாவும் பள்ளிவாசல்களில்தாம் நடைபெறும். ஆனால், பெருநாள் தொழுகையை நபி(ஸல்)அவர்கள் மைதானத்தில் சென்று தொழுதார்கள். ஒவ்வொரு தொழுகைக்கும் பாங்கு எனப்படும் தொழுகை அழைப்பு விடுக்கப்படும். ஆனால், பெருநாள் தொழுகைக்கு அழைப்பு எதுவும் இல்லை. குளித்து முடித்து, புத்தாடையணிந்து காலையிலேயே மக்கள் சாரை சாரையாகத் திடலுக்கு வரத் தொடங்கிவிடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் திடலுக்குச் செல்லும்போதும், தொழுகைமுடித்து திடலிலிருந்து திரும்பும்போதும் வெவ்வேறு பாதைகளைப் பயன்படுத்துவார்கள். ஏனென்றால், போகும்போது ஒருவழியாகச் சென்றால் அப்பகுதி மக்களைச் சந்திப்பார்கள். திரும்பும்போது மறுவழியில் இன்னும் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பிருக்கும் அல்லவா…?
வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ எனும் சிறப்புத் தொழுகை பள்ளிவாசல்களில் நடைபெறும். அப்போது முதலில் சிறப்புச் சொற்பொழிவு இருக்கும். அதன் பின்னரே தொழுகை நடைபெறும். ஆனால், பெருநாள்களின்போது முதலில் தொழுகை நடைபெறும். பின்னர் மக்களுக்குத் தேவையான உபதேசங்களை வழங்குவதற்காகச் சொற்பொழிவு நடைபெறும்.
நபி (ஸல்)அவர்கள் திடலுக்குச் சென்றதும், தொழுகை நடத்துவார்கள். பின்னர் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். அதன் பிறகு தோழர் பிலாலை அழைத்துக்கொண்டு பெண்கள் பகுதிக்குச் சென்று தர்மம் செய்வதை வலியுறுத்தி, உரை நிகழ்த்துவார்கள். பெண்கள் தர்மம் செய்வார்கள். பின்னர் அவர்கள் இல்லம் திரும்புவார்கள்.
தொழுகை முடிந்ததும், ஆனந்தப்பேருவகையால் ஒருவரையொருவர் ஆரத்தழுவி அன்பையும் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்வார்கள். பெருநாள் என்பது அவ்வளவுதான்! ஆனால், அந்தப் பெரு நாள்கள் தரும் மகத்தான பாடமும் செய்தியும் என்ன தெரியுமா..?
படிப்பினை தரும் பண்டிகை!

இஸ்லாமியர்களுக்கு இரண்டே பண்டிகைகள்தாம். ஒன்று நோன்புப் பெருநாள். மற்றொன்று ஹஜ்ஜுப் பெருநாள். இஸ்லாம் கூறும் இரு பெருநாள்களும் வெறும் கொண்டாட்டத்துக்கான நாள்களல்ல. வாண வேடிக்கை,வேட்டு, ஆடல், பாடல்… என எந்த ஆரவாரமும் இல்லாத சாந்திமிக்க அமைதித் திருநாள்களே இப்பெருநாள்கள். வருடப் பிறப்பு வந்தால்கூட கோடிக்கணக்கில் குடித்துக் கும்மாளமிடும் சூழலுக்கிடையே கண்ணியம் மிளிரும் புண்ணிய நாள்களே பெருநாள்கள். இந்தத் திருநாள்களின்போது ‘இறைவன் மிகப்பெரியவன்’ எனும் புகழ்மொழியான `அல்லாஹு அக்பர்’ என்று சொல்லி அளவுக்கதிகமாக இறைவனைப் புகழ வேண்டும்.
மனிதர்கள் அனைவரும் ஒரே சமுதாயம். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லை. நிறம், குலம் என்ற வேறுபாடு இல்லை. எவ்வளவுதான் பணம் படைத்தவனாயினும் இறைவன் திருமுன் அவனும் அடிமையே! `இறைவா! நாங்கள் அடிமைகளே.நீயே மிகப்பெரியவன்’ என்று உரத்துச் சொல்ல வேண்டும்.
`இறைவா.. நீயே மிகப்பெரியவன்’ என்று கோடீஸ்வரனும் சொல்லுவான். இறைவன் பெரியவன். அவன் மட்டுமே பெரியவன். மற்றவர்கள் அடிமைகள். ஆதத்தின் பிள்ளைகள் அனைவரும் சமம். என்னதான் பளிங்குக் கற்களாலான மாட மாளிகை இருந்தாலும், கோடீஸ்வரனும் பெருநாள் தொழுகைத் திடலுக்கு வரவேண்டும். தோளோடு தோள் சேர்ந்து நிற்க வேண்டும். இறைவன் திருமுன் சிரம்பணிய வேண்டும்.
பசியறியும் பயிற்சி, தியாகத்தின் பாடம் என்ற இருபெரும் பேருண்மைகளை புரியவைத்து அதற்கு நன்றிசெலுத்தும் தருணங்களாகவே பெருநாள்கள் கொண்டாடப்படுகின்றன. பெருநாள் என்பது இறைவனை வணங்குவது, அவன் புகழ்பாடுவது, அவனுக்கு நன்றி செலுத்துவது என்ற அம்சங்கள்தாம்.
இப் பெருநாளின்போது நபி (ஸல்)அவர்கள் உரை நிகழ்த்துவார்கள். இறைவனைப் புகழ்ந்தவண்ணம் இறையச்சத்தை அடிப்படையாகக்கொண்ட அந்த உரையில் மனிதனிடம் களையப்படவேண்டிய தீமைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றைக் கண்டித்தும் நன்மைகளை அடையாளப்படுத்தி, அவற்றை ஊக்கப்படுத்தவும் செய்வார்கள்.
ஒன்று கூடினோம்; தொழுதோம்; கலைந்தோம் என்றில்லாமல் இன்றையச் சூழலில் மனிதனிடம் மிகுந்துவரும் தீமைகளை எச்சரித்தும், நன்மைகளை மேலோங்கச் செய்ய வலியுறுத்தியும் பெருநாள் தொழுகையின்போது உரை நிகழ்த்தப்படும்.
இதுவே ஈகைத்திருநாள் தரும் செய்தி…..ஈத் முபாரக் !!
Like this:
Like Loading...