தபால்காரர் நமது அன்றாட வாழ்க்கையின் மிக முக்கிய அங்கத்தினராகத் திகழ்ந்த நாட்கள் அவை…
“கிளிங் கிளிங்” என்று சைக்கிள் பெல்லின் மணியோசை அவர் வருவதை அறிவிக்கும்.
செயல் தலைவர் பாஷையில் சொன்னால் தபால்காரர் வரும் முன்னே கிளிங் கிளிங் ஓசை வரும் பின்னே …..
காலை நேர பரபரப்பு முடித்து, முந்தானையில் கை துடைத்தபடி பெண்கள் வீட்டு வாசலில் நிற்க தொடங்குவார்கள்… வெளிநாட்டில் தங்கள் மகன் அல்லது கணவர் போடும் கடிதத்தை ஆவலோடு எதிர்நோக்குவார்கள்…மாத தொடக்கத்தில் வரும் பதிவு தபால் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் (அதில் தான் செக் DD இருக்கும்)…
ஓய்வு பெற்ற திண்ணை தாத்தாக்களின் பார்வைகள் தெருக்கோடியை மொய்க்கும் ! …
பதினொரு மணி வாக்கில் பளபளக்கும் சைக்கிளில் தபால்களும், பார்சல்களும் தளும்ப, சந்தன பொட்டோடு வலம்வருவார் தபால்காரர் ஐயா ராமலிங்கம் !
ஒவ்வொருவீட்டு வாசலின் விசாரிப்புக்கும் ஒவ்வொருவிதமாய்ப் பதிலளிப்பார்… ஆனால் முகத்தின் சிரிப்பு மாறாது !
வீட்டில் இருக்கும் அணைத்து நபர்களின் பெயர்களும் அவருக்கு அத்துப்படி. வீட்டில் இல்லை என்றால் வெளியில் எங்கயாவது பார்த்தால் உங்களுக்கு லெட்டர் வந்து இருக்கு என்று கொடுத்து விட்டு செல்வார்.
தலைவாசலில் நின்று அவர் விசிறும் கடிதங்கள் மிகச் சரியாய் வீட்டினுள் விழும் !
சைக்கிளை ஸ்டாண்ட் போட்டுவிட்டுத் திண்ணையில் தபால்காரர் அமர்ந்தால் மணியார்டர்… ரெஜிஸ்டர் தபால் அல்லது பார்சல் !
மணியார்டர் பாரத்தை விரித்து, பணத்தை எண்ணுபவருக்கு உபசாரம் தூள் பறக்கும் ! வரும் தொகையின் அளவை பொறுத்து அவரின் கையில் கொஞ்சம் தினிப்பவர்களும் உண்டு ! காபியோ, டீயோ அல்லது சிறு பணமோ எதுவாக இருந்தாலும் சிரிப்புடன் பெற்றுக்கொள்வார் !
திருமணம் மற்றும் விட்டு விசேஷங்களுக்கு கூப்பிட்டால் தவறாமல் ஆஜராவார். அதுநாள் வரையிலும் காக்கி சீருடையில் மட்டுமே பார்த்த தபால்காரர் சாதாரண மனிதராக குடும்பத்துடன் வருவார்.
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவை கொண்டுவரும் தபால்காரரை தலையில் தூக்காத குறையாகக் கொண்டாடிய காலம் !
பள்ளியில் படிக்கிற இளம்பருவத்தினர் ஊருக்கு வரும் தபால்காரரின் சைக்கிள் பின்னாலேயே தபால்காரர் தபால்காரர் என சப்தமிட்டுக்கொண்டே பிள்ளைகள் ஓடுவார்கள்….
80 – 90 களில் வரும் புரொமோட்டேட் டூ தி நெக்ஸ்ட் கிளாஸ் ( PROMOTED TO THE NEXT CLASS ) என்ற பாடாவதி ரப்பர் ஸ்டாம்ப் அடித்து எச் எம் கையேழுத்து போட்டு வரும் தபால் கார்டுகளை பார்த்து வருட முடிவில் ரிசல்ட் பார்த்து குதித்து தொலைப்போம்…. சில நேரங்களில் நீ பாஸ் பண்ணிட்டே என்று தபால்காரர் கார்ட்டை பார்த்து படித்து சொல்லி விட்டு போய் விடுவார்.
Super Article
LikeLike