மூன்று ஆண்டுகளாய் தொடந்து நடைபெறும் இலவச மருத்துவ முகாம்
கோட்டகுப்பம் ஒருங்கிணைந்த பொது நல சங்கத்தின் ( KISWA ) மற்றுமொரு சிறப்பான சேவையாக, புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான் நிறுவனம் (PIMS) ஆதரவில் கோட்டகுப்பம் பழைய பட்டின பாதையில் அமைந்துள்ள மத்ரஸே ரவ்னகுல் இஸ்லாம் வளாகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாய் தொடந்து வாரம்தோறும் இலவச தொடர் மருத்துவ முகாம் நடத்தி ஏழை எளிய மக்களின் ஆரம்ப மருத்துவ உதவிகளை அயராது செய்து வருகிறார்கள்.
இன்றைய காலக் கட்டத்தில், சாதாரண காய்ச்சல், தலைவலி முதல் உடலில் ஏற்படும் சின்ன சின்ன அசவுகரியங்களுக்காக மருத்துவமனை செல்லும் போது, மருத்துவர் கட்டணம், இரத்தப் பரிசோதனை, மாத்திரை மருந்துகள் என்று குறைந்தது ரூ.500 முதல் ரூ.1000 காணமல் போய் விடுகிறது.
இந்த மாதமாவது கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் கொஞ்சத்தை, எதிர் காலத்தை கருத்தில் கொண்டு சேமித்து விட மாட்டோமா ? என்று ஏங்கும் நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு, திடீரென ஏற்படும் உடல் உபாதைகளால், அந்த மாதக் கனவும் கானல் நீராகி விடுகிறது. மேலும் கோட்டக்குப்பத்தில் ஆரம்ப சிகிச்சை செலவுகளை கூட செய்ய முடியாமல் தவிக்கும் ஏழை மக்கள் ஏராளம் உள்ளனர். இதை எல்லாம் களையும் நல்ல நோக்கோடு, இந்த இலவச தொடர் மருத்துவ முகாம் அக்டோபர் 2014 முதல் துவங்கப்பட்டு மூன்று ஆண்டுகளாய் , இன்றைய தேதி வரை இடை விடாது நடைபெற்று வருகிறது.
பிரதி வெள்ளி கிழமைகளில் நடைபெறும் இந்த முகாமில் பிரத்தியோகமாக மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.
இந்த முகாமில் சிகிச்சை பெறும் அனைவருக்கும் இலவசமாக, தரமான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏராளமான ஏழை மக்கள் இதில் பயன் பெற்று செல்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் நடைபெறும் இந்த முகாமை, அனைத்து தரப்பு மக்களும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
இன்று 19/01/2018 நடைபெற்ற முகாமில் சுமார் 240 பயனாளிகள் பயன் அடைந்தனர்.
இந்த தொடர் மருத்துவ முகாமில் வாரம்தோறும் செயலாற்றும் செயல் வீரர் சகோதரர் ரவூப் அவர்கள் , தனக்கு கிடைக்கும் ஒரே ஒரு நாள் வார விடுமுறை கூட இந்த மருத்துவ முகாமில் செலவளிக்கிறார். இவரின் தன்னலமில்லாத சேவையை பெரிதும் மதிக்கிறோம்.
இந்த இலவச தொடர் மருத்துவ சேவை செய்து வரும் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான் நிறுவனம் மருத்துவர்களுக்கும் மற்றும் கோட்டகுப்பம் ஒருங்கிணைந்த பொது நல சங்கம் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர்களுக்கு, நமது கோட்டகுப்பம் செய்திகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் சொல்வதில் பெருமிதம் கொள்கிறோம்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.