கோட்டக்குப்பம் காவல்நிலையம் சார்பில் கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரவுண்டானா பகுதியில் சாலை பாதுகாப்பு மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–
இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துக்கள் நடக்கும் மாநிலம் தமிழகம் தான். அதிலும் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 60 சதவீதம் இரு சக்கர வாகன விபத்துக்கள் தான் அதிகம். அதிலும் இரண்டு சக்கர வாகன விபத்துக்கள் தலைகவசம் அனியாதவர்கள் 80 சதவீதம் பேருக்கு விபத்து ஏற்படுகின்றன. போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற அனைவரும் வேண்டும். கடந்த ஜூன் மாதம் மட்டும் 100 விபத்துக்கள் நடந்திருக்கும். ஒரு நாளைக்கு மூன்றில் இருந்து 10 விபத்துக்கள் நடந்தது.
தற்போது பல்வேறு இடங்களில் காவல்துறை மூலம் பேரிகார்டு வைக்கப்பட்டதன் மூலம் விபத்துக்கள் குறைந்துள்ளது. அதிகமாக குடிபோதையில், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் அதிகரித்துள்ளது. காரில் பயணம் செய்யும் போது கண்டிப்பாக சீட் பெல் அனிய வேண்டும். பூமியில் பிறந்தது நாம் ஏதாவது சாதனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நம் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.
வாகனம் ஓட்டும் போது கண்டிப்பாக பெல்ட் அணிய வேண்டும். அதிவேகமாக வாகனங்களில் செல்லக்கூடாது. கடந்த மூன்று மாதங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் மட்டுமே அதிக விபத்துக்கள் பெரும்பாலும் நடைபெற்றது. எனவே இனி வரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் விபத்தில்லா பகுதியாக மாற்ற வேண்டும். இவ்வாறு விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமார் பேசினார்.
தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். முன்னதாக கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் வரவேற்று பேசினார். கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார், வானூர் இன்ஸ்பெக்டர் திருமணி, மரக்காணம் இன்ஸ்பெக்டர் வளர்மதி, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாள், சப்இன்ஸ்பெக்டர்கள் கோட்டக்குப்பம் செல்வம், வானூர் வெங்கடேசன், அருள்செல்வம், மரக்காணம் இளங்கோ, கிளியனூர் விஜயகுமார், விஜி மற்றும் மனித சங்கிலி நிகழ்ச்சியில் தனிப்பிரிவு போலீசார் தனியார், அரசு மகளிர் கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவர்கள் மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.