தமிழக அரசு புதிதாக வழங்கப்பட்டு வரும், ‘ஸ்மார்ட் கார்டில்’ பெயர், முகவரியில் உள்ள குளறுபடிகளால், பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய ரேஷன் கார்டு வழங்காமல், 10 ஆண்டுகளாக, தமிழக அரசு இழுத்தடித்ததோடு, உள்தாள் ஒட்டியே, மக்களை அவதிப்படுத்தி வந்தது. பழைய ரேஷன் கார்டு, கிழிந்து கந்தலான நிலையில், புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் வகையில், ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில், புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. கடந்த, 2015ல் துவங்கிய பணி, நீண்ட இழுபறிக்கு பின், சமீபத்தில் துவங்கி, பயனாளிகளுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.
கோட்டக்குப்பம் பகுதியில் பெரும்பான்மையான ரேஷன் கார்டுகள், ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. அந்த ஸ்மார்ட் கார்டில், தந்தையின் பெயர், விலாசம், புகைப்படம் என, அனைத்து விபரங்களும் தவறுதலாக இடம்பெற்றுள்ளன. முகவரி மாற்றம் செய்த பின்னரும், பழைய முகவரியே அச்சிடப்பட்டுள்ளது. பலர் ஆன்லைனில் அணைத்து விபரங்களையும் சரிபார்த்து சரி செய்த பிறகும் ஸ்மார்ட் கார்டு பிழையுடன் வழங்கப்பட்டுவருகிறது. புதிதாக வாங்கிய ஸ்மார்ட் கார்டுகளில் பிழைகள் கொஞ்சமல்ல. ஒவ்வொரு கார்டிலும் குறைந்தது 4 அல்லது 5 தவறுகள் உள்ளன.
அதிகாரிகளின் மெத்தன போக்கால் ஸ்மார்ட் கார்டு பணிகள் செம்மையாக நடைபெறவில்லை. ஸ்மார்ட் கார்டு தயாரிக்க நீண்ட கால அவகாசம் எடுத்து கொண்ட பிறகும் எதற்காக இவ்வளவு தவறுகள் ஏற்பட்டன என்று தெரியவில்லை. இந்த தவறுகளுக்கு காரணமாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேதனையான கருத்தாகும்
ஏற்கனவே ஸ்மார்ட் கார்டு வாங்குவதற்கு, பெரும் அவதிப்பட்ட நிலையில், அவற்றில் உள்ள தவறான தகவல்களை மாற்றவும், பயனாளிகள் பெரும்பாடுபட வேண்டி உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் பொதுமக்கள் தங்களது புதிய ஸ்மார்ட் கார்டில் பெயர் முகவரி திருத்த நியாயவிலை கடை மற்றும் பொது சேவை மையம் முன்பு நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சேவை மையங்களில் ஸ்மார்ட் கார்டு தவறுகளை திருத்தம் செய்யவே கூட்டம் அலை மோதுகிறது.
மேலும் கோட்டகுப்பதில் சிறப்பு முகாம்கள் நடத்தி ஸ்மார்ட் கார்டு பிழைகள் திருத்தம் செய்யப்படவேண்டும்.