ரேஷன் கடை முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை… நுகர்வோர்கள் புகார் அளிக்க தமிழக அரசின் ஆப்!


ரேஷன் கடைகள் முதல் பேருந்து பயணங்களின்போது உணவருந்தும் மோட்டல்கள் வரை, ஒவ்வோர் இடங்களிலும் நுகர்வோர்கள் படும்பாடு சொல்லிமாளாது. இதுதான் எடை, இவ்வளவுதான் விலை என அனைத்துப் பொருள்களுக்கும் சட்டப்படி அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு பொருள்களின் மீது அச்சடிக்கப்பட்டிருந்தாலும், தரம், விலை, அளவு என ஏதாவதொரு விதத்தில் நுகர்வோர்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றனர். இவர்களுக்குக் கைகொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது தமிழக அரசின் TN-LMCTS மொபைல் ஆப். இதனை மொபைலில் இன்ஸ்டால் செய்துகொண்டால் போதும். எந்தப் புகார்களையும் சில நிமிடங்களில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல முடியும். தமிழக அரசின் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் சட்டமுறை எடை, அளவு பிரிவுதான் இந்த மொபைல் ஆப்-ஐ நிர்வகிக்கிறது. 

TN-LMCTS நுகர்வோர் ஆப்

எப்படி பயன்படுத்துவது?

முதலில் உங்கள் போனில் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின்னர் உங்களைப் பற்றிய விவரங்கள் கேட்கப்படும். அவற்றைக் கொடுத்த பின்னர் உங்களுடைய அலைபேசி எண் OTP மூலம் சோதிக்கப்படும். சோதனை முடிந்துவிட்டால், புகார்களுக்கு உங்கள் ஆப் தயார். உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து எப்போது வேண்டுமானாலும் லாக்-இன் செய்ய முடியும். ஆப் முழுவதுமே ஆங்கிலத்தில்தான் இருக்கிறது. அதேசமயம் பயன்படுத்துவதற்கு மிக எளிமையாகவும், பயனுள்ளதாகவும் அமைந்திருக்கிறது. 

நீங்கள் செய்த புகார்களின் பட்டியல், புதிய புகார்களுக்கான ஆப்ஷன், விரைவான புகார்கள் என மூன்று மெனுக்கள் இருக்கின்றன. விரைவான புகார்களுக்கு என்ன புகார், எந்த இடம் என்பதை மட்டும் தெளிவாகக் குறிப்பிட்டு அதற்கான சாட்சிகளாகப் புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ போன்றவற்றை உடன் இணைக்க வேண்டும். புதிய புகார்கள் என்ற மெனுவில், புகார் பற்றிய குறிப்பு, புகைப்படங்கள் / வீடியோ/ ஆடியோ இணைப்பு, எது தொடர்பான புகார் என்ற விவரம், கடையின் முழு முகவரி போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். நீங்கள் புகாரைப் பதிவு செய்துவிட்டால், அதற்கு புகார் எண் கொடுக்கப்பட்டு உங்கள் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். நீங்கள் கொடுத்த புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களும் ஆப்-ல் காட்டப்படுகின்றன.

எப்படி இருக்கிறது ஆப்?

TN-LMCTS ஆப்

பொருள் வாங்கியதற்கான ரசீது, கடையின் போட்டோ, பொருள் வாங்கிய வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் போன்ற ஆதாரங்களை அனுப்புவது எளிதாக இருக்கிறது. தாமதமின்றி உடனே புகார்களைப் பதிவு செய்துவிடவும் முடிகிறது. ஆனால், புதிய புகார்களைப் பதிவு செய்யும்போது, கடைகளின் தன்மை, முகவரி போன்றவற்றைக் குறிப்பிடும்போது நிறைய ஆப்ஷன்கள் இருப்பதால் சில குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க தமிழ் மொழியையும் இதில் இணைக்கலாம்.  ஆப் மட்டுமின்றி, இணையம் மூலமாகவும் உங்களுடைய புகார்களைப் பதிவு செய்யமுடியும்.  http://tnlegalmetrology.in/ என்ற முகவரியில் உங்கள் ஆப்பில் கொடுத்த மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றைக் கொடுத்து லாக்-இன் செய்யலாம். எனவே, மக்கள் தங்கள் புகார்களை இணையம் மற்றும் மொபைல் மூலமாகப் பதிவு செய்யவும், நிர்வகிக்கவும் முடியும்.

ஆப் டவுன்லோட் செய்வதற்கான லிங்க்: 

https://play.google.com/store/apps/details?id=com.mslabs.lmctspublic&hl=en

இந்த ஆப்-ஐ உருவாக்கி, செயல்படுத்திவரும் தமிழக தொழிலாளர்துறையின் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் இதுபற்றிக் கூறும்போது,”மார்ச் மாதம் இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. இணையம் மற்றும் ஆப் இரண்டின் மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்காகத்தான் இந்தச் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் புகார் தெரிவித்தால், அடுத்த 48 மணி நேரத்துக்குள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். எடை அளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருள்களுக்கான விதிகள் என இரண்டு சட்டங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழ் வரும் புகார்கள் இதன் மூலம் பதிவு செய்யப்படும். 

கடைகளில் நீங்கள் வாங்கும் பொருள்களின் எடை, அளவு போன்றவற்றில் தவறு இருந்தாலோ அல்லது MRP விலையை விடவும் அதிகமாக விற்றாலோ இதில் புகார் செய்யலாம். பொட்டலப் பொருள்களுக்கான விதிகளைப் பொறுத்தவரை, ஒரு பொருள் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டால் அந்தப் பாக்கெட்டின் மீது, யார் அதைப் பாக்கெட்டில் அடைத்தார், யார் அதைத் தயாரித்தார், யார் அதை இறக்குமதி செய்தார், எப்போது பேக் செய்யப்பட்டது, அதன் எடை எவ்வளவு, அதன் அதிகபட்ச விலை, நுகர்வோர் புகார் செய்வதற்கான எண்கள் என விவரங்கள் அனைத்தும் இருக்க வேண்டும். ஒரு நுகர்வோர் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பொருள் ஒன்றை வாங்கும்போது, அதனைப் பிரித்துப்பார்த்து வாங்குவது இல்லை. எனவே அந்தப் பாக்கெட்டிற்குள் என்ன இருக்கிறது என்பது குறித்த தெளிவான விளக்கங்கள் பாக்கெட்டில் இருக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒரு விஷயம் இல்லை என்றாலோ அல்லது அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்களுக்கு மாற்றாக விற்பனை செய்யப்பட்டாலோ அது சட்டப்படி குற்றம். அதுமாதிரியான சமயங்களில் நுகர்வோர்கள் புகார் செய்ய வேண்டும். 

அப்படி மக்கள் பாதிக்கப்படும்போது ஆடியோ, வீடியோ, எழுத்து, ரசீதுகள் என ஏதாவதொரு வகையில் இந்த ஆப் மூலம் புகார் செய்யலாம். தகுந்த ஆதாரங்களையும் உடன் இணைக்கலாம். ஒருவேளை ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றால் கூட பிரச்னை இல்லை. நுகர்வோர் தங்கள் குறைகளைத் தெளிவாகப் பதிவு செய்தால்கூட போதும்; நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆப் மூலம் பதிவு செய்யப்படும் அனைத்து புகார்களும் அந்தந்த ஏரியாவின் எடை, அளவு சட்ட அதிகாரிகளுக்குச் சென்று சேர்ந்துவிடும். தமிழகத்தில் மொத்தம் 433 எடை, அளவு சட்ட அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் உடனே அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாக நடவடிக்கை எடுப்பார்கள். அதேபோல புகார் கொடுத்தவரின் விவரங்கள் எதுவுமே அதிகாரிகளுக்குத் தெரியாது. எனவே, புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் எதுவும் வெளியே தெரியாது. அதே சமயம் புகார் அளித்தவர்களுக்கு, புகார் பதிவான எண், எப்போது நடவடிக்கை எடுப்பார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும். இதுவரை இந்த ஆப் மூலம் வந்த அனைத்து புகார்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இதுபற்றிய விழிப்புஉணர்வு குறைவாக உள்ளதால், குறைவான புகார்களே வருகிறது. எனவே வருகின்ற ஒவ்வொரு புகார்களையும் தீவிரமாகக் கவனித்து வருகிறோம். உதாரணமாக ஒரு மார்க்கெட்டில் இருக்கும் ஒரு கடையில் விலை அதிகமாக வைக்கப்பட்டு பொருள்கள் விற்கப்படுகிறது எனப் புகார் வந்தால், அந்த ஒரு கடை மட்டுமின்றி அந்த மார்க்கெட்டில் இருக்கும் மற்ற கடைகளையும் சோதனை செய்கிறோம். நேரடியாக சென்று சோதனை செய்வதால், குற்றங்கள் குறைகின்றன. சில நாள்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மோட்டல்கள் குறித்து புகார்கள் வந்தன. உடனே தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து மோட்டல்களும் சோதனை செய்யப்பட்டு, குற்றம் செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒரு கடையில் முதலில் தவறு கண்டுபிடிக்கப்பட்டால் உடனே சட்டப்படி அபராதம் விதிக்கப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மீண்டும் அதே கடையில் தவறு நடப்பது கண்டறியப்பட்டால், குற்றம் செய்தவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்.

TN-LMCTS நுகர்வோர் புகார் அளிப்பதற்கான ஆப்

இந்த ஆப்பின் இன்னொரு சிறப்பம்சம், இதன் மூலம் ஆன்லைனில் பொருள் வாங்கினாலும் கூட புகார் செய்யலாம். எடை அளவு சட்டம் என்பது மத்திய அரசின் சட்டம். எனவே, வெளிமாநிலங்களில் பொருள்கள் வாங்கியிருந்தாலும் கூட, அந்தந்த மாநிலங்களைத் தொடர்பு கொண்டு, விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சாலையோரக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மால்கள், ரேஷன் கடைகள், மோட்டல்கள் போன்ற அனைத்துக்கும் இந்த ஆப் மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம்” என்றார். 

நுகர்வோர்கள் புகார் கொடுப்பதற்கான புகார் மையங்கள், புகார் கொடுப்பதற்கான எண்கள் போன்ற வழிகள் ஏற்கெனவே இருந்தாலும் அவையனைத்தும் தோல்வியடையக் காரணம், அவற்றைக் கண்டுகொள்ளாத அதிகாரிகளின் அலட்சிய மனோபாவம்தான். எனவே அரசு ஆப் வெளியிடுவதோடு மட்டும் நின்றுவிடாமல்,குறைகளின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதையும் உறுதிசெய்தால் நிச்சயம் இது நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும். 

 

நன்றி :  விகடன்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s