நம் உயிர் நிகர்த்த, மிகைத்த கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழி தொடர்ந்தோர், தொடர்வோர் மீதும் இறையருள் நிறைக.
அன்பார்ந்த கோட்டக்குப்பம் சொந்தங்களே, அஸ்ஸலாமு அலைக்கும். நமது இணையதளம், 2002 ஆம் ஆண்டு துவங்கி, இன்று முதல் 15 ஆம் ஆண்டில் தடம் பதிக்கின்றது, அல்ஹம்துலில்லாஹ்.
நம்மைக் கடந்து சென்ற ஆண்டில், நமது இணையதளம் முடிந்தளவு முறையோடு பயணித்திருக்கிறது என்றே நம்புகிறோம். துவங்கி 15 ஆண்டில் இன்னும் சிறப்பாகப் பயணிக்கத் திட்டமிட்டுள்ள இந்நேரத்தில், எங்கள் பணி சிறந்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உறுதுணை புரிந்தோரை நினைவு கூறுகிறோம்.
உள்ளுரில், உள்நாட்டில் மற்றும் கடல் கடந்த நிலப்பரப்பில் பொதுப்பணியாற்றும் கோட்டக்குப்பம் சார்ந்த அமைப்புகள் இதுவரை எமக்கு அனுப்பித்தந்த செய்திகளும்,
கோட்டக்குப்பம் சகோதரர்கள் பலர் தனிப்பட்டமுறையில் ஆர்வமுடன் வழங்கிய தகவல்களும், நமது இணையதள வளர்ச்சிக்கு வளமான உரமாக அமைந்தன. உளமார்ந்த நன்றி.
நேரில், தொலைப்பேசியில், கருத்துப்பதிவில், மின்னஞ்சலில் நேயர்களாகிய நீங்கள் வழங்கிய பரிந்துரைகளும், இடித்துரைகளும், பாராட்டுகளும், வாழ்த்துகளும் நினைவு கூறத்தக்கவை.
பயன்விளைவிக்கும் இவையனைத்தும், எங்களை உற்சாகப்படுத்தவும், எங்களின் குறைகளைக் கண்டறியவும் பெரிதும் துணை புரிந்தன. நெஞ்சம் நிறைந்த நன்றி.
நாங்கள் இயங்குவதில் நிறைவிருந்தால் தட்டிக்கொடுங்கள், அது எங்களை ஊக்குவிக்கும். குறைவிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். ஏற்புடையதாக இருப்பின், இதயப்பூர்வமாக ஏற்று சீர் செய்கிறோம்.
சாதித்து விட்டதாகக் கருதவில்லை. புதியவர்கள் நாங்கள். எனவே, தோன்றாத் துணையாகத் தோள் கொடுங்கள் எனத் தோழமையுணர்வோடு வேண்டுகிறோம்.
நம் கோட்டக்குப்பம் வளர்ச்சிக்கு நாமனைவரும் கரம் கோப்போம். அதன் ஓங்கு புகழை எட்டுத்திசைக்கும் எடுத்துச் செல்வோம்.
வல்ல இறைவனின் நல்லருள் நம்மனைவர் மீதும் சூழ்க! ஆமீன்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.