ஜிஎஸ்டி வரி: – மக்களுக்கு என்ன பயன்?


 

ஜிஎஸ்டி என்றால்..?

நம் நாட்டில் ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்பனைக்குக் கொண்டுவர பல்வேறு வரிகளை மத்திய, மாநில அரசுகளுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. அதாவது விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தி வரி, நுழைவு வரி, கலால் வரி போன்ற பல்வேறு வரிகள் உள்ளன. இதைத் தவிர்த்து, கல்வித் தீர்வை (Cess), சர்சார்ஜ் என்பது இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாதிரியான வரி விதிப்பு இருக்கும். இதையெல்லாம் தவிர்த்து அனைத்துக்கும் சேர்த்து ஒரு வரி என்பதுதான் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி (Goods and Services Tax). இந்த வரி விதிப்பு முறையை நடைமுறைக்குக் கொண்டுவருவதால், பல்வேறு நன்மைகள் ஏற்படும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஜிஎஸ்டி அமலுக்கு வரும்போது எந்த வகையில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பது குறித்து வரி ஆலோசகரான வைத்தீஸ்வரனிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

ஜிஎஸ்டி ஏன் தேவை?

‘‘மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல்வேறு வரிகளைச் செலுத்தும் தொகையின் அளவானது உற்பத்தி செலவைவிட அதிகமாக உள்ளது. இப்படி அதிகமாகச் செலுத்தும் வரித் தொகை உற்பத்தி பொருளின் விலையில் சேர்க்கப்படுகிறது. இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுவது நுகர்வோர்தான். இதுமட்டும் இல்லாமல் வரிக்கு வரி செலுத்த வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது.

உதாரணமாக, காரின் உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு முக்கிய மூலப்பொருள் இரும்பு ஆகும். இதை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து வாங்கும்போது சிஎஸ்டி (Central Sales Tax) வரி செலுத்த வேண்டும். உற்பத்தி செய்த பொருளை மீண்டும் வேறு மாநிலத்துக்கு அனுப்பும் போதும் சிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்கும். அந்த உதிரிப் பாகங்களை பயன்படுத்தி, கார் தயாரித்து அதை மீண்டும் தமிழகத்துக்கே அனுப்பும்போது மீண்டும் சிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். இந்த சிஎஸ்டி வரிக்கு கிரெடிட் பெற முடியாது. எனவே, இந்த வரித் தொகை முழுவதும் உற்பத்திப் பொருளின் விலையில் சேர்க்கப்படும். இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு ஜிஎஸ்டிதான். அனைவருக்கும் ஒரேவிதமான வரி விகிதம்தான் இருக்கும். ஜிஎஸ்டியில் 17 – 18% வரை வரி விதிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ச்சி எந்த வகையில் உதவும்?

தற்போது பலவிதமான வரிகள் இருப்பதால், ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அரசு துறைகள் செயல்பட வேண்டி உள்ளது. இந்த துறைகளுக்கிடையே தகவல்கள் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் நிறுவனங் களும் பல்வேறு வரி விதிப்பு இருப்பதால், பல சிக்கல்களைச் சந்திக்கிறது.

ஜிஎஸ்டி அமல் படுத்தும்போது கறுப்புப் பணம் குறையும். முறையான வரி செலுத் தாமல் சிறிய, நடுத்தர அளவில் தொழில் செய் பவர்கள் முறையாக வரி செலுத்தி தொழில் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாட்டின் வருமானம் அதிகரிக்கும். அதுவும் தவிர, முறையாக வரி செலுத்தி தொழில் செய்யும்போது அவர்களின் வருமானம் எவ்வளவு என்பது தெரிந்துவிடும். இதனால் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். வரித் தொகை அதிகரிக்கும்போது நாட்டின் வளர்ச்சிப் பணிகளை வேகமாக செய்ய முடியும். மதிப்பு கூட்டு வரி (VAT) வந்த பிறகு நிறைய நிறுவனங்கள் பல மாநிலங்களில் கிடங்குகளை திறக்கும் சூழ்நிலை உருவானது. ஜிஎஸ்டி வரும்போது இந்தக் கிடங்குகளின் தேவை இருக்காது. தொழிலுக்குத் தேவையான கிடங்குகள் மட்டுமே இருக்கும். இதனாலும் நிறுவனங்களின் செலவு வெகுவாகக் குறையும். 

யாருக்குப் பயன்?

ஒற்றை வரி விதிப்பு முறையின் காரணமாக உற்பத்தி செய்யும் பொருளின் விலைகள் வெகுவாகக் குறையும். ஆனால், அதே நேரத்தில் சேவைகளாக பெறும் வசதிகளுக்கான செலவு அதிகரிக்கும். அதாவது, செல்போன், பொழுதுபோக்கு, இன்டர்நெட், இன்ஷூரன்ஸ் பிரீமியம், ஹோட்டல், ஆலோசனை, போக்குவரத்து, ஏஎம்சி, கட்டுமானம், அழகு நிலையம், தீம் பார்க், கல்விக் கட்டணம் போன்ற சேவைகளுக்கான வரி விதிப்பு அதிகரிக்கும். தற்போது இதற்கு 14.5% செலுத்துகிறோம். ஜிஎஸ்டியில் 17 – 18% வரி இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் தனிநபரின் செலவு அதிகரிக்கும்.

பென்ஷன் வாங்குபவர்கள், ஓய்வு பெற்றவர்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் அதிகம் பாதிக்கப் படுவார்கள். ஏனெனில் இவர்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்பில்லை. இவர்களின் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கு அதிகமான சேவைகள் தேவைப்படும். அதாவது, ஹோட்டல் சாப்பாடு, இன்ஷூரன்ஸ் பிரீமியம், செல்போன் பில், போக்குவரத்துக்கு வாடகை கார்களை பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கும். இது அனைத்துமே விலை உயர வாய்ப்புள்ளது. இதனால் வருமானம் ஈட்ட முடியாத நிலையில் இருக்கும் முதியோர்களின் செலவும் அதிகரிக்கும். 

உடனடியாக விலை குறையாது!

சிஜிஎஸ்டி (Central GST), எஸ்ஜிஎஸ்டி (State GST), ஐஜிஎஸ்டி (Integrated GST) என மூன்று வகைகளில் ஜிஎஸ்டி வரி விதிப்பு பிரிக்கப்படும். இந்த வரி விதிப்பு முறையினால் உடனடியாக பொருள்களின் விலை குறைவதற்கான வாய்ப்பு குறைவு. ஜிஎஸ்டி அமல்படுத்தியபிறகு ஒரு வருடத்துக்குப் பணவீக்க விகிதம் அதிகரிக்கவே செய்யும். அதன்பிறகு கொஞ்சமாகப் பொருட்களின் விலை குறைந்து, பணவீக்க விகிதமும் குறைந்துவிடும்.

மாநில அரசுகளின் வருமானம்?

அரசின் முக்கிய வருமானம் வரி விதிப்பின் மூலமாகத்தான் கிடைக்கிறது. மாநில அரசு வரியை நம்பிதான் இருக்கிறது. தற்போது சேவை வரி 15%, விற்பனை வரி, வாட் வரியின் மூலமாக மாநில அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தும்போது இந்த வரி வருமானம் குறைய வாய்ப்புள்ளது. அதாவது, ஜிஎஸ்டியில் 18% என வரி விதிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அதில் மத்திய அரசு 10%, மாநில அரசு 8% என வருமானத்தை பிரித்துக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம். தற்போது மாநில அரசுக்கு 14.5% – 15% வரை வருமானம் கிடைக்கிறது. இந்த வருமான இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வருமான இழப்பை சரிக்கட்டும் வகையில் குறிப்பிட்ட அளவு தொகையை வழங்கும். அதே சமயத்தில், முதன் முதலாக மாநிலங்களும் சேவைக்கான ஜிஎஸ்டி மூலமாக அதிக வருமானத்தை ஈட்ட வாய்ப்புள்ளது. ஜிஎஸ்டியின் பாதிப்பு அல்லது பயன் மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசப்படும். பொதுவாக, உற்பத்தி அதிகம் இருக்கும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் குறைவாக இருக்கும். அதிக நுகர்வு இருக்கும் மாநிலங்களில் ஜிஎஸ்டி மூலமாக அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த ஜிஎஸ்டியில் மதுபானங்கள், புகையிலை ஆகிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி இருக்காது. ஆனால், இந்தப் பொருட்களுக்கு வேறு வரி விதிப்பு அதிகமாக இருக்கும். பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக் குள் இல்லை. இவற்றுக்கும் வேறு வகையான வரி விதிப்பு இருக்கும். தற்போதைய நிலையில் எந்தப் பொருட்களுக்கு எல்லாம் வரி இல்லையோ, அவற்றில் சிலவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். காய்கறிகள், பால், தயிர், பழங்கள் போன்றவற்றுக்கும் இந்த வரி விதிப்பும் இருக்காது. பெட்ரோல், டீசலுக்கான வரி விதிப்பு மாநில அரசுகளிடம்தான் இருக்கும்.’’ என்றார்.

ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தபிறகு பொருட்களின் உற்பத்தி செலவு குறையும். இதனால் நம்மால் பலவிதமான பொருட்களை வாங்கும் நிலை உருவாகும். நிறுவனங்களின் லாபம் கூடினால் அது முதலீடாக மாறும். இதனால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படக் கூடிய நிலை உருவாகும்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s