புதுவையில் இருந்து சென்னை செல்வதற்கும், சென்னையில் இருந்து புதுவை மற்றும் கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு செல்வதற்கும் முக்கிய சாலையாக கிழக்கு கடற்கரை சாலை விளங்குகிறது. இதில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்து, லாரி, கார், வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கோட்டக்குப்பம் ரவுண்டானா பகுதியை ஒட்டி, வாகன ஓட்டிகளுக்காக சாலை அகலப்படுத்தி போடப்பட்டுள்ளது. இந்த சாலையை ஆக்கிரமித்து ஏராளமான பழக்கடைகள், காய்கறி, இளநீர் கடைகள் உள்ளிட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையோர கடைகளில் பொருட்களை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்துகின்றனர்.
இதனால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் அந்த கடைக்காரர்கள் அழுகிய காய்கறி உள்ளிட்ட பொருட்களை சாலையிலேயே கொட்டுகிறார்கள. இதை தின்பதற்காக வரும் மாடுகளாலும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதனால் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. வாகனங்கள் மோதி இவ்விடத்தில் இதுவரை 9 மாடுகள் இறந்திருக்கின்றன. மேலும் அழுகிய காய்கறிகளை சாலையில் கொட்டுவதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, வானூர் ெநடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட கடைகளை அகற்றி, போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி : தினகரன்