விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே, வேன் மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தார்; பெண்கள் உள்பட 25 பேர் காயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கீழ்ப்புத்துப்பட்டில் உள்ள அய்யனார் கோயிலில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்ள புதுச்சேரி, கருவாடிக்குப்பம் பகுதியிலிருந்து 20-க்கும் மேற்பட்டோர் வேனில் புறப்பட்டனர். வேனை, அதே ஊரைச் சேர்ந்த அய்யனார் (26) ஓட்டினார்.
காலை 7 மணி அளவில் கோட்டக்குப்பம் புறவழிச்சாலையில் உள்ள ஜமீத் நகரில் சென்றபோது, குறுக்குச் சாலையிலிருந்து இ.சி.ஆர். பிரதான சாலைக்கு வேகமாக வந்த டிப்பர் லாரி, வேனின் பின்புறம் மோதியது. இதில், வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி சேதமடைந்தது.
இந்த விபத்தில், கடலூர் மாவட்டம், சி.என்.பாளையத்தைச் சேர்ந்த ராஜகுமாரன் மகன் ராகுல் (8) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ராஜகுமாரனின் மகள் ராஜஸ்ரீ (10), சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாபு மனைவி பிரியா (24), கடலூர் மாவட்டம், புவனகிரியைச் சேர்ந்த மேகநாதன் மனைவி பத்மாவதி (51), லோகநாதன் (65), புதுச்சேரி அரியாங்குப்பம் செந்தில்குமார் மனைவி பானுமதி (39), அமல்ராஜ் மனைவி இந்திரா (31), செல்வம் மனைவி முத்துலட்சுமி (47), வேன் ஓட்டுநர் அய்யனார் உள்பட 25 பேர் காயமடைந்தனர்.
அவர்களை கோட்டக்குப்பம் போலீஸார் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.