கோட்டக்குப்பம் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கழுப்பெரும்பாக்கம், திருச்சிற்றம்பலம், கோட்டக்குப்பம், வானூர், புளிச்சம்பள்ளம், உப்புவேலூர், கிளியனூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.வானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எந்த பகுதியிலும் அரசு கலைக்கல்லூரி இல்லை. இதனால் பள்ளி கல்வி முடித்து கல்லூரி செல்ல விரும்பும் ஏழை மாணவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திண்டிவனம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கல்லூரி படிப்பை தொடர வேண்டிய அவலம் உள்ளது. இதனால் பணம் விரயம் ஆவதோடு, மாணவர்கள் அலைச்சலுக்கு ஆளாகின்றனர். அருகில் உள்ள புதுச்சேரி பகுதிகளில் அரசு கல்லூரிகள் இருந்தாலும் அந்த பிராந்தியத்தை சேர்ந்த மாணவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மதிப்பெண் அடிப்படையில் மிக சொற்பமான தமிழக மாணவர்களுக்கே சேர்க்கை வழங்கப்படுகிறது. வானூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏக்கள் கணபதி, ஜானகிராமன் ஆகியோர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கல்லூரி அமைத்து தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தனர்.
தற்போதைய எம்எல்ஏ சக்கரபாணியும் அதே வாக்குறுதியை அளித்துள்ளார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விழுப்புரம் மாவட்டம் ஏற்கனவே கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் அரசு கல்லூரி இல்லாததால் பல ஏழை மாணவர்கள் கல்லூரி கல்வி கற்க சிரமப்படுகின்றனர்.எனவே கோட்டக்குப்பம், வானூர் உள்ளிட்ட பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என மாணவர்கள், பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி : தினகரன்