கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுவை அடுத்த தமிழக பகுதியில் கோட்டக்குப்பம் பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன முதலியார்சாவடி, சின்ன கோட்டக்குப்பம், பெரிய முதலியார்சாவடி, கோவில்மேடு, கோட்டைமேடு, பொம்மையார்பாளையம், பிள்ளைச்சாவடி, குயிலாப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிசை வீடுகள் அதிகளவில் உள்ளன.
இந்நிலையில், இப்பகுதியில் தீயணைப்பு நிலையம் இல்லாமல் உள்ளது. தீ விபத்து ஏற்பட்டால் வானூரில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வர வேண்டிய நிலை உள்ளது. அதுபோன்ற சூழலில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வானூரில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருவதால் தீ பரவி, பொருட்கள் பெருமளவு எரிந்து சேதமாகி விடுகிறது. இதனால் மக்கள் அதிக இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.