
கோட்டக்குப்பம் – பிள்ளைச்சாவடி வரை உள்ள இசிஆர் சாலை பல ஆண்டுகளாக விரிவாக்கம் செய்யாமலும், மின் விளக்கு வசதி அமைத்து தரப்படாமலும் உள்ளது. இதனால் அப்பகுதியில் சாலை விபத்துகள் அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். புதுவையிலிருந்து சென்னை செல்வதற்கு முக்கிய வழித்தடமாக கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்) உள்ளது. இவ்வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்து, கார், லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. அதேபோல் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து கனகசெட்டிகுளம் வரை 15 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுவை எல்லையான கனகசெட்டிகுளத்தில் இருந்து பிள்ளைச்சாவடி (ஒரு பகுதி) வரை ரூ.1 கோடி மதிப்பில் சாலையின் நடுவில் சோடியம் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சாலையும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழக பகுதியான பிள்ளைச்சாவடியில் இருந்து கோட்டக்குப்பம் வரை சாலை விரிவாக்கம் செய்யப்படாமலும், தெருவிளக்கு வசதி அமைத்து தரப்படாமலும் உள்ளது. இதனால் அப்பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்தபடியே பயணிக்க வேண்டிய அவலநிலை உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கோட்டக்குப்பத்தில் இருந்து பிள்ளைச்சாவடி வரை உள்ள இசிஆர் சாலையை விரிபடுத்த வேண்டும். மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பலமுறை விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், இவ்வழியாக வாகனங்கள் அதிக வேகத்தில் செல்கின்றன. இதுபோன்ற காரணங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களிலேயே அதிகமான விபத்துகள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் கோட்டக்குப்பத்தில் இருந்து பிள்ளைச்சாவடி வரை சாலையை விரிவாக்கம் செய்யவும், மின்விளக்கு அமைத்துதரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நன்றி : தினகரன்