புகையிலைப் பொருள்கள் பதுக்கல் – கோட்டக்குப்பம் நபர் புதுச்சேரி போலீசாரால் கைது
புதுச்சேரியில் போலீஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ரூ.10.75 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி வடக்கு எஸ்.பி. சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கல்வி நிலையங்கள் அருகிலேயே 100 மீ தொலைவுக்குள் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து வடக்கு எஸ்.பி. ரட்சனா சிங் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, கண்ணன், தனசேகரன், எஸ்.ஐக்கள் வெற்றிவேல், குமார், கலையரசன், வீரபத்திரன், தயாளன், பிரதாபன் ஆகியோர் கொண்ட தனிப்படை பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு அதிரடி சோதனை மேற்கொண்டது.
மேலும் ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள கிடங்கிலும் இரவு நேரத்தில் சோதனை செய்யப்பட்டது. அது மொத்த விற்பனையாளர் கோட்டக்குப்பம் ரஹ்மத் நகர், மிலாது தெருவைச் சேர்ந்த அமீர் அம்சா (61) என்பவரது கிடங்கு எனத் தெரிந்தது. அங்கிருந்த புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சீனியர் எஸ்.பி. ராஜிவ் ரஞ்சன் கூறியதாவது: காவல்துறை பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ரூ.10.75 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை கல்வி நிலையங்களில் இருந்து 100 மீ தூரத்துக்குள்ளேயே தடையை மீறி விற்கப்பட்டன.
காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரத்தின ஜெய்சங்கர் (41) என்பவரிடம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக டி நகர், மேட்டுப்பாளையம், லாஸ்பேட்டை காவல் நிலையங்களில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 7 பேர் மீது புகையிலைப் பொருள்கள் விற்பனை தடுப்புச் சட்டத்தின் கீழ் (COPTA) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகள் அருகே 100 மீட்டருக்குள் புகையிலைப் பொருள்களை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் போதை மருந்துகள் விற்பனை தொடர்பாக தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 1 மாதத்தில் மட்டும் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போதைப் பொருள்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராஜிவ் ரஞ்சன்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.