புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் மழைநீரை தேக்கும் வகையில் வெள்ளவாரி வாய்க்காலில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதன்மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக பகுதியான ஆரோவில், இடையஞ்சாவடி, கோட்டக்குப்பம் உள்ளிட்ட மேடான பகுதியில் இருந்து உற்பத்தியாகும் வெள்ளவாரி வாய்க்கால் கருவடிக்குப்பம், சாமிப்பிள்ளை தோட்டம், கென்னடி கார்டன், சங்கரதாஸ் சுவாமிகள் நகர், ரெயின்போ நகர், டிவி நகர் வழியாக சென்று வைத்திக்குப்பத்தில் கடலில் கலக்கிறது. தமிழக பகுதியில் பெய்யும் மழைநீர், புதுவை பகுதிகளில் குடியிருப்பு வழியாக வரும்போது கழிவுநீராக மாறி கடலில் கலக்கிறது. மழைக்காலங்களில் இந்த வாய்க்காலில் வரும் நீர் சில நேரங்களில் வெள்ளமாக மாறுவதுண்டு. அவ்வாறு மாறாவிட்டாலும் இந்த நீர் எப்போதும் வீணாக கடலில்தான் கலக்கிறது. வெள்ளவாரி வாய்க்கால் நீரை தேக்கி வைக்கும் வகையில் கடந்த ஆண்டு வாய்க்காலில் 2 தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டது.அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.32 லட்சத்து 42 ஆயிரம் செலவில் பணிகள் துவங்கப்பட்டது. அதற்கு முன்னதாக வாய்க்காலில் குப்பை, சேறு நிரம்பி கிடந்ததுடன், புற்களும் மண்டி கிடந்தது. இதையெல்லாம் அகற்றி சுமார் 350 மீட்டர் தூரத்திற்கு, நீரை உறிஞ்சும் தன்மை கொண்ட தொகுப்பு கற்களால் ஆன தரைப்பகுதி அமைக்கப்பட்டது. தரையின் கீழ் பகுதியில் ஆற்று மணல் கொட்டப்பட்டது. இதன் மூலம் நீர் வீணாக வடிந்து செல்லாமல், நிலத்தடிக்குள் செல்ல வழிசெய்யப்பட்டது. அதன் மீது இந்த தடுப்பணை கட்டப்பட்டது.புதுச்சேரிக்குள் வெள்ளவாரி வாய்க்கால் நுழையும் பகுதி ஜீரோ பாயிண்ட் என அழைக்கப்படுகிறது. இது சரியாக கருவடிக்குப்பம் பொன்னியம்மன் கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது. ஜீரோ பாயிண்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் சார்பில் முதல் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து அடுத்த 250 மீட்டர் தூரத்தில் 2வது தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 350 மீட்டர் தூரத்துக்குள் நீர் தேங்கி நிற்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த 350 மீட்டர் தூரத்துக்கு இடையில் 1200 கிலோ லிட்டர் தண்ணீர் தேக்கி வைக்க முடியும். 1000 லிட்டர் அடங்கியது 1 கிலோ லிட்டர். ஒவ்வொரு தடுப்பணையும் 1.30 மீட்டர் உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளது. தடுப்பணை அருகில் 10 மீட்டர் தூரத்துக்கு கான்கிரீட் தரை அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீரால் தடுப்பணை சேதமாவது தடுக்கப்படும். வாய்க்காலை ஒட்டிய பகுதியில் குடியிருப்புகள் அமைந்திருப்பதால் குழந்தைகள் தவறி விழ வாய்ப்புள்ளது என எண்ணி இப்பகுதியினர் அச்சம் அடைந்தனர். அச்சத்தை போக்கும் வகையில் வாய்க்காலில் தடுப்புசுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் கடந்த ஜனவரி மாதத்தில் நிறைவடைந்துள்ளது.சமீபத்தில் தடுப்பணைகளை பார்வையிட்ட கவர்னர் கிரண்பேடி, பொதுப்பணித்துறையினரை வெகுவாக பாராட்டினார். புதுச்சேரியில் இதுபோல் இன்னும் தடுப்பணைகள் உள்ளிட்ட அணைகளை கூடுதலாக கட்டி நீர்வளத்தை பெருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதே போல் கோட்டகுப்பதில் பெய்யும் மழை நீர் வீணாக கடலில் போய் கலக்கிறது, அதை தடுக்கும் வகையில் தண்ணீரை பள்ளிவாசல் குளம் மற்றும் சக்கில் வாய்க்காலில் தடுப்பணை கட்டி கடலில் கலக்காமல் தடுக்கலாம். புதுவை அரசு போல் தமிழக அரசு முயற்சி எடுத்து மழை நீர் வீணாகாமல் தடுக்கவேண்டும்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.