புதுவையில் ஆட்டோ கட்டணம் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை கூடுதலாக வசூலித்தால் பெர்மிட் ரத்துசெய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை போக்குவரத்து ஆணையர் சுந்தரேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
புதிய கட்டணம்
புதுச்சேரியில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான புதிய கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டோக்களுக்கான புதிய கட்டண விகிதங்கள் வருகிற 15–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி காலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரை முதல் 1.8 கி.மீட்டருக்கு ரூ.35–ம், கூடுதல் ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ.18–ம், காத்திருப்பு கட்டணமாக ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ரூ.5–ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணிவரை பகல்நேர சேவை கட்டணத்துடன் 50 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டும்.
முன்கட்டண சேவை
உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு பயன்படும் வகையில் முன்கட்டண ஆட்டோ சேவை புதியதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் முன்கட்டண ஆட்டோ சேவை மையங்கள் தொடங்கப்படும். முன்கட்டண ஆட்டோ சேவைக்கு 20 சதவீதம் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.
தற்போது அமலுக்கு வரும் புதிய கட்டண விகித பட்டியலை ஒவ்வொரு ஆட்டோவிலும் பயணிகள் பார்வையில் தெரியும்படி வைத்திருக்கவேண்டும். பட்டியலில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தை மட்டுமே பயணிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
15–ந்தேதி முதல்…
புதிய ஆட்டோ கட்டணம் வருகிற 15–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் அனைத்து ஆட்டோ டிரைவர்களும் தமது கட்டண மீட்டர்களை வருகிற 15–ந்தேதி முதல் பிப்ரவரி 15–ந்தேதிகள் சரிசெய்து புதியதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்களுக்கு ஏற்ப அவை இயங்குவதை உறுதி செய்தல் அவசியம். ஆட்டோ மீட்டர்களை புதிய கட்டணத்திற்கேற்ப திருத்தி அமைத்ததற்கான சான்றிதழை உரிய முறையில் சட்டமிட்டு பயணிகள் காணும்படியாக ஆட்டோக்களில் வைத்திருக்கவேண்டும்.
பெர்மிட் ரத்து
வருகிற 15–ந்தேதிக்குப்பின் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக ஆட்டோ கட்டணம் வசூலிப்போர் மீது மோட்டார் வாகன சட்டம் விதிகளின்படி காவல்துறை மற்றும் போக்குவரத்து துறைகளின் மூலம் டிரைவிங் லைசென்சு மற்றும் பெர்மிட்டுகளை ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பழைய கட்டணமாக முன்பு 1.8 கி.மீட்டருக்கு ரூ.25தான் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த கட்டணம் ரூ.10 உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கூடுதலாக ஒவ்வொரு கி.மீட்டருக்கும் முன்பு ரூ.15 உயர்த்தி வசூலிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது அது ரூ.18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டணம் கோட்டக்குப்பம் ஆட்டோ ஓட்டுனர்கள் ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் பார்வையில் படும் வகையில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே புதிய கட்டண விபரத்தை எழுதி வைக்க வேண்டும்.