கோட்டக்குப்பத்தில் நள்ளிரவில் பழைய மர சாமான்கள் விற்பனைக் கடையில் ஒரு வாலிபர் தீயில் எரிந்து மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் யார், எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்பதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தீப்பிடித்து எரிவதாக தகவல்
கோட்டக்குப்பத்தில் நேற்று நள்ளிரவு கோட்டக்குப்பம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரவுண்டானா அருகே மரத்தால் செய்யப்பட்ட பழைய கட்டில்கள், பீரோ உள்ளிட்ட பழைய மர சாமான்கள் விற்பனை செய்யும் கடையில் தீப்பிடித்து எரிவதாக அந்த வழியே சென்ற ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக ரோந்து போலீசார் அந்த மரக்கடைக்கு விரைந்து சென்றனர்.
எரிந்தநிலையில் வாலிபர்
அப்போது கடையின் ஒரு பகுதியில் திறந்தவெளியில் பழைய மர சாமான்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் தீப்பிடித்து எரிவதை பார்த்தனர். அருகில் சென்று பார்த்தபோது அந்த மர சாமான்களுக்கு இடையே ஒரு வாலிபரின் உடல் தீப்பிடித்து எரிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக போலீசார் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். வானூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி பாபு தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து அங்கு எரிந்து கிடந்த மர சாமான்களை அகற்றினார்கள்.
அங்கு முழுவதும் கருகிக்கிடந்த வாலிபரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் உடல் கருகிக்கிடந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எரித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வீடியோ வடிவில் இந்த செய்தியை காண கீழே அழுத்தவும்
http://www.dinamalar.com/video_main.asp?news_id=77823&cat=33