கட்டுரை நன்றி : நாணயம் விகடன்
கறுப்புப் பண ஒழிப்பின் ஓர் அங்கமாக ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வங்கியில் ரொக்கமாக டெபாசிட் செய்தால் வருமான வரி (10%, 20%, 30%), அபராதம் 200% கட்ட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு தனிநபர் ஒருவர் வங்கியில், ஒரு நிதி ஆண்டில் ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் கேள்வி கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சென்னை வருமான வரி அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ரூபாய் 2.5 லட்சம் வரை ரொக்கமாக டெபாசிட் செய்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை. அதற்கு மேல் செலுத்தப்படும் கணக்கில் காட்டப்படாத பணத்துக்கு வருமான வரி, அபராதம், வட்டி செலுத்த வேண்டியது வரும். வங்கிக் கணக்கில் ரொக்கமாகச் செலுத்தப்படும் உயர் மதிப்பு தொகைக்கு (ரூ.10 லட்சத்துக்கு மேல்) சரியான விளக்கம் அளிக்க முடியாத நிலையில், அந்தத் தொகைக்கு 30% வரி, இந்த வரியின் மீது பிரிவு 270(ஏ)-ன் கீழ் 200% அபராதம் (மொத்த தொகையின் மீது 60%) அபராதம் விதிக்கப்படும். தொகை அதிகரிக்க அதிகரிக்கக் கட்டும் மொத்த வரி அதிகரித்துக் கொண்டுவரும். உதாரணத்துக்கு, 5 லட்சம் ரூபாய் வங்கியில் ரொக்கமாக டெபாசிட்டாகக் கட்டினால் அபராதத்தையும் சேர்த்து 15% வரி கட்ட வேண்டி வரும்.
வங்கியில் ரூ.15 லட்சம் ரொக்கமாக கட்டினால் மொத்தம் 55% வரி கட்ட வேண்டி வரும். மேலும், பிரிவு 234பி மற்றும் 234சி ஆகியவற்றின் கீழ் முன்வரி (அட்வான்ஸ் டாக்ஸ்) கட்டவில்லை என்றால் அதற்கான வட்டியும் வசூலிக்கப்படும். இது மாதத்துக்கு 1 சதவிகிதமாக இருக்கும்’’ என்றவர், மேலும் சில விஷயங்களையும் சொன்னார்.
‘‘ஒருவர் கணக்கில் காட்டப்படாத தொகை ரூ.1 கோடியை வங்கிக் கணக்கில் ரொக்கமாகக் கட்டினால் மொத்தம் 85% அபராதம் விதிக்கப்படும். தாமதமாகக் கட்டுவதாக இருந்தால், வட்டி சுமார் 10% என்ற கணக்கையும் சேர்த்து கிட்டத்தட்ட 95%, அதாவது ஒரு கோடி ரூபாய் கட்டினால், அதில் ரூ.95 லட்சம் கழிக்கப்பட்டு, மீதி 5 லட்சம் ரூபாய்தான் கிடைக்கும். இதில் குறிப்பிட வேண்டியது, கடந்த நிதி ஆண்டு 2015-16-க்குதான் இந்தக் கணக்கீடு. அதற்கு முந்தைய ஆண்டு என்றால் கூடுதலாக 12% வட்டியாக கட்ட வேண்டி வரும். அதாவது, கிட்டத்தட்ட எதுவும் கிடைக்காது. அதேநேரத்தில், வங்கியில் ரொக்கமாக கட்டப்பட்ட தொகை வருமானமாக இருந்து, அது வரிக்கு உட்பட்டதாக இருந்தால் வரி, வட்டி, அபராதம் எதுவும் கட்ட வேண்டி வராது.
இப்படி அதிக வரி, வட்டி, அபராதம் விதிக்கப்படுவதால், பலரும் கணக்கில் காட்ட முடியாத பணத்தை அழித்து விடத்தான் முன் வருவார்கள்” என்றார் அவர்.
‘‘வீட்டில் சேமித்து வைத்திருந்த பணத்தை வங்கியில் செலுத்தும் சிறு வணிகர்கள், குடும்பத் தலைவிகள், கைவினைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் வருமான வரியை நினைத்து பயப்படத் தேவை யில்லை. அவர்கள் ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்தால், வருமான வரி எதுவும் வராது. குடும்பத் தலைவர்கள் தங்கள் சேமிப்புப் பணத்தை ரொக்கமாக தங்களது வங்கிக் கணக்கில் கட்டும் போது, ‘இது குடும்பச் செலவில் மிச்சப்படுத்திய தொகை’ என வங்கி சலானில் எழுதினால் நல்லது’’ என ஓய்வு பெற்ற வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்படி செய்யும் போது வருமான வரித் துறையின் விசாரணைக்கும் ஆளாக வேண்டி இருக்காது.
அந்த ஓய்வு பெற்ற அதிகாரி மேலும் கூறும் போது, ‘‘புதிதாக கணக்கு ஆரம்பித்து அதில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்யும்போது, ‘பண மதிப்பு நீக்கம் திட்டத்தின் காரணமாக இந்தப் பணத்தை டெபாசிட் செய்கிறேன்’ என்று குறிப்பிட வேண்டும். சிறுவர்கள் தங்கள் வசம் இருக்கும் அதிக ரொக்கப் பணத்தை வங்கியில் டெபாசிட் ஆக போடும்போது, அது தங்களுக்கு, ‘நண்பர்கள், உறவினர்கள் மூலம் கிடைத்த அன்பளிப்பு’ என வங்கி சலானில் குறிப்பிடுவது
அவசியம்” என்றார்.
ஏதோ ஒரு காலத்தில் லட்சக் கணக்கில் உறவினர் அல்லது நண்பருக்கு கொடுத்தக் கடன் தொகை இப்போது செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளாக ரொக்கமாக திரும்பக் கிடைத்து, அதனை வங்கியில் டெபாசிட் செய்தால், ஏதாவது பிரச்னை ஏற்படுமா என சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கே.ஆர்.சத்திய நாராயணனிடம் கேட்டோம்.
‘‘ரூ.20,000-க்கு மேல் கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. அப்படி செய்தால் அது சட்டப்படி தவறு. தொகை 20,000 ரூபாயை தாண்டும்போது காசோலை மூலமாகதான் பணபரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். வாங்கிய கடனை நண்பர், உறவினர் இப்போது கொடுத்தார் என்றால், அதற்கான பணப்பரிமாற்றம் காசோலை அல்லது ஆன்லைன் மூலம் நடந்திருந்தால் மட்டுமே வருமான வரி அதிகாரி ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. கடன் கொடுத்தற்கான ஆதாரங்களை இப்போதே திரட்டி வைத்துக்கொள்வது நல்லது. இந்த ஆதாரங்கள் இல்லை என்றால், இந்தத் தொகையை இதர வருமானமாக எடுத்துக்கொண்டு வரி விதிக்கப்படும். மேலும், கணக்கில் காட்டாத, சட்ட விரோதமாகச் சம்பாதித்த பணம் என்றால் சிறைத் தண்டனைகூட விதிக்கப்படலாம்” என்றார்.
கணக்கில் காட்டாத பணத்தை வைத்திருப்பவர்கள், இனியாவது உரிய நடவடிக்கையை உடனடியாக எடுப்பதன் மூலம் பணத்தையும் இழக்கத் தேவையில்லை. தேவை இல்லாத தொல்லைகளில் சிக்கித் தவிக்க வேண்டியதும் இல்லை.
வரி ஏய்ப்பு..!
மத்திய வருவாய்த் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா, ‘‘2016 டிசம்பர் 30–ம் வரை வங்கிகளில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் யார் யார் டெபாசிட் செய்கிறார்களோ, அவர்களின் விவரங்களை கேட்டுப் பெற இருக்கிறோம். அவர்கள் டெபாசிட் செய்த தொகையை, அவர்கள் ஏற்கனவே தாக்கல் செய்த வருமான வரிக் கணக்குடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
அவர்கள் டெபாசிட் செய்த தொகை, அவர்களின் வருமான அளவுக்கு பொருந்தாத வகையில் இருந்தால், அது வரி ஏய்ப்பாக கருதப்படும். அவர்களுக்கு வருமான வரி சட்டம் 270(ஏ) பிரிவின் கீழ், வருமான வரியுடன் 200 சதவிகித அபராதமும் விதிக்கப்படும். நகைக்கடைகளில் தங்க நகை வாங்குபவர்கள், வருமான வரி ‘பான்’ எண்ணை அளிக்க வேண்டும். அதை உறுதி செய்யுமாறு கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். பான் எண் வாங்காத நகைக்கடை அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.