கோட்டக்குப்பத்தில் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை வழிமறித்து பணம் பறிப்பு 6 வாலிபர்கள் கைது
கோட்டக்குப்பம் ECR கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பத்தில் ECR கிழக்கு கடற்கரை சாலை ரவுண்டானா அருகே 6 பேர் கொண்ட கும்பல், இருட்டான பகுதியில் நின்றுகொண்டு அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்களை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பதாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகரன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் ஒரு கும்பல் தப்பி ஓட முயன்றது. உடனே போலீசார் அவர்களை தப்பிச் சென்று விடாமல் மடக்கிப் பிடித்தனர். அந்த கும்பல் வைத்து இருந்த கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்ததில் கோட்டக்குப்பம் காலனியைச் சேர்ந்த ராகவன் (21), சரத் (19), சக்திவேலு (21), மணிகண்டன் (20) மற்றும் வீரமணி, இன்னொரு ராகவன் என்பதும், அவர்கள் கத்தியைக்காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீது ஏற்கனவே சின்ன முதலியார்சாவடி, பெரிய முதலியார் சாவடி ஆகிய பகுதிகளில் விடுதி உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்தது தொடர்பான வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.