விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட வானூர் ஒன்றியம், கோட்டக்குப்பம் பேரூராட்சி, கண்டமங்கலம் ஒன்றிய பகுதி கிராமங்கள், புதுவை மாநில எல்லையில் அமைந்துள்ளன. எல்லைப் பகுதியில் வசித்து வரும் பலர், தமிழக பகுதியிலும், புதுவை மாநில பகுதியிலும் இரட்டை குடியுரிமை பெற்றவர்களாக உள்ளனர்.
தமிழக பகுதிகளை பூர்வீகமாக கொண்ட இவர்கள், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்காக புதுவை பகுதியில் குடியேறுவது வழக்கம். இவ்வாறு செல்லும் பலர், இங்கும் குடியுரிமையை தொடர்வதோடு, புதுவை மாநிலத்திலும் குடிமைப்பொருள் வழங்கல் அட்டை, வாக்குரிமை, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளைப் பெற்று வந்தனர்.
இதுதொடர்பாக புகார்கள் எழும்போது, தேர்தல் வாக்காளர் பட்டியல் தயார்படுத்தும் நேரங்களில் மேலோட்டமான ஆய்வு மேற்கொள்வதும், சிலரது பட்டியலை நீக்குவதும், பின்னர் சேர்ப்பதும் தொடர்கிறது.
இந்த வகையில், கோட்டக்குப்பம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதுவை மற்றும் தமிழக பகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்களும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது, தமிழக பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, இவர்கள் தமிழக வாக்குரிமையை பயன்படுத்த உள்ளனர். பெரும்பாலும் சட்டப் பேரவைத் தேர்தலின்போது, கடும் நெருக்கடி காரணமாக இவர்கள் புதுவையில் வாக்களிக்கின்றனர்.
இதுகுறித்து, வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அண்மையில் புகார் தெரிவித்துள்ள கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் இளங்கோ கூறுகையில், தற்போது, புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் இல்லாத நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால், இங்குள்ள வாக்குரிமையை பயன்படுத்த உள்ளனர்.
இதற்கான வாக்காளர் பட்டியல் ஆவணங்களுடன புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்பதால், அரசியல் கட்சியினரும் அது பற்றி புகார் தெரிவிப்பதுமில்லை, கண்டுகொள்வதுமில்லை என்றார்.
இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டபோது, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் போது, இவை கண்டறியப்பட்டு நீக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆதார் எண்கள் இணைக்கப்படுவதால், போலியான நபர்கள் படிப்படியாக நீக்கப்பட்டுவிடுவார்கள். உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியல் அவசர காலத்தில் தயாராகிவிட்டது. தொடர்ந்து, வரும் ஜனவரி வெளியாகவுள்ள வாக்காளர் இறுதிப் பட்டியல் தயாரிப்பின்போது இந்தக் குறைபாடுகள் நீக்கப்படும் என்றனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.