புதுவைக்கு கோட்டக்குப்பம் வழியாக மணல் கடத்தல் – வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை
நன்றி : தினமலர்
தேசிய நெடுஞ்சாலை டோல் பிளாசாவில் ஓவர் லோடு அபராத கட்டணத்திற்கு டிமிக்கி கொடுக்கும் மணல் லாரிகளை மாவட்ட வருவாய்த் துறையினர் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.
கடலுார் மற்றும் விழுப்பும் மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ள புதுச்சேரி மாநிலத்தில் அதிகளவில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அதற்கேற்ப மணல் அந்த மாநிலத்தில் இல்லாத காரணத்தினால், தமிழகப் பகுதிகளில் இருந்தே மணல் ஏற்றிச் செல்லப்படுகிறது. ஆனால், அதற்கு தமிழக சுரங்கத்துறை அனுமதி அளிப்பதில்லை.
அதனையொட்டி புதுச்சேரி மாநிலத்திற்கு இடையே உள்ள தமிழக கிராமங்களை குறிப்பிட்டு புதுச்சேரி மாநிலத்திற்கு மணல் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது கடலுார் மாவட்டத்தில் கண்டரக்கோட்டை பெண்ணையாற்று குவாரி மூடப்பட்டதால், விழுப்புரம் மாவட்டம், பிடாகத்தில் பெண்ணையாற்றில் இயங்கும் குவாரியில் இருந்து புதுச்சேரிக்கு மணல் கொண்டு செல்லப்படுகிறது.
பிடாகம் குவாரியில் மணல் ஏற்றும் லாரிகள் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், கிளியனுார் வழியாக கோட்டக்குப்பம் செல்ல அனுமதி பெற்று, புதுச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் அடிக்கடி பழுதாவது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதற்கு பதில் அளித்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், மணல் லாரிகள் அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றி வருவதால் சாலை அடிக்கடி சேதமடைவதாக விளக்கம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசா (சுங்கச் சாவடிகளில்) எடைமேடை அமைத்து, ஓவர் லோடு எற்றி வரும் லாரிகளுக்கு, 10 மடங்கு சுங்க கட்டணம் வசூலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி திருச்சி – சென்னை சாலையில் விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அபராத கட்டணம் வசூலிக்கும் பணி கடந்த 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நான்கு சக்கரம் கொண்ட மணல் லாரிகள் 4,100 ரூபாயும், 6 சக்கம் கொண்ட மணல் லாரிகள் 6,100 ரூபாய் அபராதமாக செலுத்தும் நிலை ஏற்பட்டது.
அதனால், புதுச்சேரிக்கு மணல் ஏற்றிச் செல்லும் லாரி டிரைவர்கள் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தாமல், பிடாகம் மணல் குவாரியில் இருந்து பண்ருட்டி, கடலுார் வழியாக புதுச்சேரிக்கு செல்லத் துவங்கினர். விழுப்புரம் வழியாகச் செல்லும் மணல் லாரிகளும் தேசிய நெடுஞ்சாலையை தவிர்த்து கிராமச் சாலை வழியாக டோல் பிளாசாவைக் கடந்து சென்று வருகின்றன.
இதுபற்றி வந்த தொடர் புகாரைத் தொடர்ந்து கடலுார் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில், விழுப்புரம் மாவட்ட மணல் குவாரியில் இருந்து கடலுார் வழியாக அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 13 லாரிகளை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த 13 லாரிகளின் உரிமையாளர்கள் மீது மேல் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிப்பதற்காக கடலுார் ஆர்.டி.ஓ.,விற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த கிடுக்கிப்பிடி நடவடிக்கையால், கடலுார் வழியாக புதுச்சேரிக்கு மணல் கடத்தப்படுவது தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.