புதுவை ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் அம்ரித் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை இயக்குநர் சுபாஷ் சந்திர பரிஜா தெரிவித்தார்.
உயிர்காக்கும் மருந்துகளை குறைந்த விலையில் வழங்கும் வகையில் அம்ரித் மருந்தகம் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த மருந்தகங்களில் புற்றுநோய், நீரிழிவு நோய், இதயநோய் போன்ற நோய்களுக்கான மருந்துகள் 60 முதல் 80 சதவீத தள்ளுபடி விலையில் விற்கப்படும்.
இந்த மருந்தகம் ஏற்கெனவே தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டது. ரிஷிகேஷ் எய்ம்ஸ், ராய்ப்பூர் எய்ம்ஸ், புதுவை ஜிப்மர் ஆகிய இடங்களில் கடந்த மே 30-ஆம் தேதி மருந்தகங்கள் திறக்கப்பட்டன.
இந்த மருந்தகம் குறித்து ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் சுபாஷ் சந்திர பரிஜா செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
புற்றுநோய், இதயநோய் போன்ற நோய்களுக்கான மருந்துகளின் விலை அதிகமாக உள்ளது. இதனால் பலரால் மருந்துகளை வாங்கி பயன்படுத்த முடியவில்லை.
ஜிப்மர் மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு இந்த மருந்தகம் பயனுள்ளதாக இருக்கும். இங்கு வெளியில் விற்கப்படும் விலையை விட மருந்துகள் 60 முதல் 80 சதவீத தள்ளுபடி விலையில் விற்கப்படும். ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மட்டுமல்லாமல் பிற மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரும் இங்கு மருந்துகளை வாங்கலாம். இதற்கு முறையான மருத்துவரின் மருந்து பரிந்துரை சீட்டு அவசியம்.
தற்போது ஏற்கெனவே ஏழை மக்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. அமிர்தம் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதால், அனைத்துத் தரப்பினரும் குறைந்த விலையில் மருந்துகளைப் பெறலாம் என்றார் அவர்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலச்சந்தர், ஜிப்மர் நுழைவுத் தேர்வு பொறுப்பாளர் டாக்டர் சாமிநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
புகார் தெரிவிக்க வசதி
ஜிப்மர் மருத்துவமனையில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புகார் பிரிவு செயல்படும். மாலை 4 முதல் 5 மணி வரை இப்பிரிவுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
அப்புகார்களை மருத்துவமனை கண்காணிப்பாளர், தொழில்நுட்ப ஆலோசகர், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கேட்டு நிவர்த்தி செய்வர். இந்த புதிய பிரிவு ஜூன் 15 முதல் தொடங்கப்படும் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலச்சந்தர் தெரிவித்தார்.