நன்றி : விகடன்
100 யூனிட் இலவச மின்சாரம்
‘‘மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால், தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம், கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும். இதன்மூலம் அனைவரும் பயனடைவதுடன், தற்போது 100 யூனிட் வரை பயன்படுத்தும் 78 லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை’’ – அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதி இது.
2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மே 23-ம் தேதி, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா, தன்னுடைய முதல் கையெழுத்தில் இந்த வாக்குறுதியை நிறைவேற்றி உத்தரவிட்டார். இந்த உத்தரவு அனைத்து வீடுகளுக்கும் பொருந்துமா அல்லது 100 யூனிட் மின்சாரத்தை மட்டும் பயன்படுத்தும் 78 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் உதவுமா என்பதில் பெரும் குழப்பம் நீடித்தது. பொதுமக்களுக்கு மட்டுமல்ல… மின்வாரிய அதிகாரிகளுக்கும் குழப்பம் இருந்தது.
மேலிடத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டதும், ‘அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ… அதற்கேற்றவாறு திட்டத்தை உருவாக்குங்கள்’ என்று உத்தரவு வந்தது. அதன்பிறகுதான், தற்போது வழக்கத்தில் உள்ள மின்கட்டண கணக்கீட்டில் சில மாற்றங்களைச் செய்து, புதிய மின்கட்டணத்தை அறிவித்தனர்.
100 யூனிட் இலவசமா?
புதிய கட்டண அறிவிப்பின்படி, 100 யூனிட் மின்சாரம் இலவசமாக்கப்படவில்லை. மாறாக, 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இன்னும் விளக்கமாகச் சொன்னால், ஒரு நுகர்வோர் 550 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தினால், அவருக்கு 100 யூனிட்டைக் கழித்துவிட்டு மீதமுள்ள 450 யூனிட்டுக்கு கட்டணம் வசூல் செய்யப்படும் என்பது தவறு. மாறாக, 550 யூனிட் மின்சாரத்துக்கான விலையை, பழைய மின்கட்டண அடிப்படையில் கணக்கிட்டு, அதில் 100 யூனிட்டுக்கான கட்டணத்தைக் கழித்து, மீதமுள்ள 450 யூனிட்டுக்கான கட்டணத்தை வசூலிப்பார்கள்.
இரண்டும் ஒன்றல்ல…
100 யூனிட்டை இலவசமாகக் கொடுப்பதும், 100 யூனிட்டுக்கான கட்டணத்தை மட்டும் கழித்துக்கொள்வதும் ஒன்றல்ல… இரண்டுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.
உதாரணம்…
550 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒருவருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்றால், அவர் 450 யூனிட்டுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால், தற்போது அரசாங்கம் வெளியிட்டுள்ள கட்டணப் பட்டியலில் 2110 ரூபாய் கட்டணம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அது எப்படி? 550 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஒருவருக்கு, பழைய விலையின்படி 550 யூனிட்களுக்கு கட்டணத்தைக் கணக்கீடு செய்கின்றனர். அதன்படி, இதில் முதல் 100 யூனிட்களுக்கான கட்டணம் 350 ரூபாய் கழிக்கப்படுகிறது. அப்படிக் கழித்தால், 2,060 ரூபாய் வரும். அதோடு மீட்டர் சார்ஜ் 50 ரூபாய் சேர்த்து, 2,110 ரூபாய் இனி வசூலிக்கப்படும். ஆக, அரசாங்கம் பொதுமக்களுக்குக் கொடுத்துள்ள சலுகை என்பது 100 யூனிட் மின்சாரம் இலவசம் அல்ல… 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணம் இலவசம்.
எப்போது நடைமுறைக்கு வருகிறது?
முதலமைச்சர் ஜெயலலிதா இந்தக் கோப்பில் மே 23-ம் தேதி கையெழுத்திட்டார். அன்றைய தேதியிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்தத் திட்டம் அன்றில் இருந்தே நடைமுறைக்கு வருகிறது. ஆனால், இந்தக் கணக்கீட்டுக்குத் தற்போது மின்வாரியத்திடம் உள்ள சாப்ஃட்வேரில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. அதனால், ஒரு நுகர்வோர் ஒரு நாளைக்கு சராசரியாக எவ்வளவு யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தி உள்ளார் என்பதைக் கணக்கிட்டு, 23-ம் தேதியில் இருந்து மொத்தம் 9 நாட்களுக்கான மின்கட்டணத்தில் விலை குறைப்பு செய்யப்படும். ஆனால், இந்த மாற்றங்களைச் செய்வதற்கான சாப்ஃட்வேர் இன்னும் தயாராகவில்லை. அதனால், இந்த மாதம் கடும் குளறுபடிகள் இருக்கும். அடுத்த ஜூன் மாதத்தில் இருந்து எடுக்கப்படும் கணக்கீட்டில்தான் முழுப்பலனை பொதுமக்கள் அடைய முடியும்.
உயர்த்தியது 65 சதவிகிதம்…
குறைத்தது 10 சதவிகிதம்!
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்புத் தலைவர் விஜயனிடம் இதுபற்றிப் பேசினோம். “2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது ஒரு யூனிட் மின்சாரம் 65 காசுகள். அந்தக் கட்டணம் கடந்த ஆட்சியில் இரண்டு முறை உயர்த்தப்பட்டு, ஒரு யூனிட் மின்சாரம் 120 காசுகளானது. முதல்முறை மின்கட்டணத்தை உயர்த்தியபோது, அதற்குப் பொறுப்பேற்றுக்கொண்ட அன்றைய அ.தி.மு.க அரசு, இரண்டாவது முறை கட்டணத்தை உயர்த்தியபோது, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தைக் குற்றம்சாட்டியது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவில் தமிழக அரசு தலையிட முடியாது என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இப்படி தொடர்ந்து மின்கட்டணம் உயர்த்தப்பட்டதால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
அதையடுத்து, அந்த மின்கட்டண உயர்வினை நிறுத்திவைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் மொத்தமாக 16 ஆயிரம் கோடி ரூபாய், அதாவது 65 சதவிகிதம் மின்கட்டணத்தை உயர்த்திவிட்டு, தற்போது அதில் 10 சதவிகிதத்தைக் குறைத்துள்ளது. மக்கள் தலையில் மின்கட்டணச் சுமையை ஏற்றியவர்களே, சுமையின் பளு அறிந்து அதைக் கொஞ்சம் குறைத்துள்ளார்கள். ஆனால், ஆட்சியில் உள்ள இந்த 5 ஆண்டுகளில் மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை’’ என்றார்.
மின்கட்டண வித்தையா… கண்கட்டு வித்தையா?
– ஜோ.ஸ்டாலின்
ஒரு டோர் நம்பருக்கு ஓர் இணைப்பு!
1 முதல் 200 யூனிட் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தினால், ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் 50 பைசா கட்டணம். 201 முதல் 500 யூனிட் பயன்படுத்தினால், யூனிட் ஒன்றுக்கு 4 ரூபாய் 60 பைசா கட்டணம். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால், ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் 60 பைசா கட்டணம் செலுத்த வேண்டும் என்பது தற்போதைய நடைமுறை. இதில் இருந்து தப்பிக்க பல நுகர்வோர்கள், ஒரே வீட்டை மூன்று வீடுகளாகக் காட்டி, 2 அல்லது 3 இணைப்புகளை வாங்குகின்றனர். இதனால், மின்வாரியத்துக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, இனிமேல் ஒரு கதவிலக்கத்துக்கு (டோர் நம்பருக்கு) ஓர் இணைப்பு கொடுக்கலாமா என்று மின்வாரியம் ஆலோசித்துக்கொண்டிருக்கிறது.