புதுச்சேரியில் பாஸ்போர்ட் சேவை மையம் இன்று தொடக்கம்
புதுச்சேரியில் புதிய பாஸ்போர்ட் சேவை மைய அலுவலகம் திங்கள்கிழமை காலை திறக்கப்படுகிறது.
கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை மண்டல அலுவலகத்தின் பாஸ்போர்ட் விண்ணப்ப மைய புதுச்சேரி கிளை அமைக்கப்பட்டது. இந்த மையம் மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடைத்துறை வளாகத்தில் உள்ள கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பப்படும்.
பின்னர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர் சென்னை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு நேர்க்காணல் நடத்தப்படும்.
இந்நிலையில் புதுச்சேரியில் பாஸ்போர்ட் சேவை மைய அலுவலகம் அமைக்க புதுச்சேரி அரசு கோரியது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்ததையடுத்து ரூ. 60 லட்சம் மதிப்பில் பழைய கட்டடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
அலுவலகம் அமைக்கும் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில் அலுவலகத்துக்கான வாடகை நிர்ணயம் செய்வதில் பிரச்னை எழுந்தது. பிரச்னைகள் தீர்க்கப்பட்டதையடுத்து அலுவலகம் திறக்கப்படுகிறது.
புதுவை பாஸ்போர்ட் சேவை மையம் திங்கள்கிழமை திறக்கப்படுகிறது. இந்த அலுவலகத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைக்கிறார். இனி புதுச்சேரி, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட புதுவைக்கு அருகாமையில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் தொடர்பான நேர்காணலுக்கு சென்னை செல்ல வேண்டியதில்லை.
இந்த தொடக்க நிகழ்ச்சியில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே. பாலமுருகன், வெளியுறவுத்துறை அமைச்சக இணை செயலாளர் முக்டேஷ் கே பர்தேஷி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.