விலையில்லாப் பொருள்கள் கோரி கோட்டக்குப்பம் மக்கள் போராட்டம்
கோட்டக்குப்பத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விலையில்லாப் பொருள்கள் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டக்குப்பம் பேரூராட்சிப் பகுதியில் உள்ள 18 வார்டுகளுக்கும், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வைத்து மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட விலையில்லாப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை 3 மற்றும் 4 ஆவது வார்டுகளுக்கு இப்பொருள்கள் வழங்கும் பணி நடைபெற்றது.
இதனால், காலை முதலே வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்று, விலையில்லாப் பொருள்களை வாங்கிச் சென்று கொண்டிருந்தனர். பயனாளிகளுக்கு பொருள்கள் வழங்கும் பணியில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திடீரென 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஆதார் அட்டை இணைக்காதவர்களுக்கும் விலையில்லாப் பொருள்கள் வழங்க அதிகாரிகள் மறுப்பு தெரிவிப்பதாகவும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருள்கள் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அங்கிருந்த வருவாய்த் துறை அதிகாரிகள் விலையில்லாப் பொருள்கள் வழங்குவதை நிறுத்திவிட்டு புறப்பட்டுச் சென்றனர். இருப்பினும், பொதுமக்கள் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து கோட்டக்குப்பம் போலீஸார் அங்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர், அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.