விலையில்லாப் பொருள்கள் கோரி இ.சி.ஆரில் சாலை மறியல்
விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்படாததை கண்டித்து, கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் இ.சி.ஆரில் மறியலில் ஈடுபட்டனர்.
கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 8,000 ரேஷன் கார்டுகள் உள்ளன. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இவர்களில் 6,336 பேருக்கு மட்டுமே, தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன், விலையில்லா பொருட்களை வழங்கும் பணியை, விழுப்புரம் எம்.பி., லட்சுமணன் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில், கட்சி பாகுபாடு பார்க்கப்பட்டு, அ.தி.மு.க.,வினருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக கூறி, கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட கிராம மக்கள், கிழக்கு கடற்கரை சாலையில், இந்தியன் வங்கி எதிரில், காலை 11:15 மணிக்கு, திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
பல்வேறு கட்சியினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர். இதனால், போக்குவரத்து ஸ்தம்பித்து வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
வானுார் வருவாய் அதிகாரி மாறன், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் அரிகரன் ஆகியோர், மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். இ.சி.ஆரில் நடந்த மறியலால், 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வருவாய் அதிகாரிகள் கூறும்போது, ‘கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிக்கு மின்விசிறி-6,300, கிரைண்டர்-6,300 ஒதுக்கப்பட்டது. ஆனால், மிக்ஸி 1224 மட்டுமே முதற்கட்டமாக வந்தது. சட்டசபை தேர்தலுக்கு முன்பாக வழங்கும் பணியை துவக்க வேண்டும் என்பதற்காக, சில நாட்களுக்கு முன் 275 பேருக்கு மட்டுமே, மூன்று விலையில்லா பொருட்களும் வினியோகிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மிக்ஸி தட்டுப்பாடு காரணமாக, மின்விசிறி, கிரைண்டர் கொடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மின்விசிறி, கிரைண்டரை தற்போது கொடுத்துவிட்டு, பிறகு மிக்ஸி தர முடிவெடுத்தாலும் ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். இதுதொடர்பாக, கவுன்சிலர்களுக்குள் ஒருமித்த முடிவு மேற்கொள்ளப்பட்டு, ஒரிரு தினங்களில் விலையில்லா பொருட்கள் வினியோகிக்கப்படும்’ என்றனர்.
தகவல் அறிந்து வந்த கோட்டக்குப்பம் ஆய்வாளர் ஹரிகரன் மற்றும் வருவாய் அதிகாரிகள், விரைவில் விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து பொது மக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.
இதனால் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.