கோடையை சமாளிப்பது எளிது


பாலைவனத்தைப் பார்க்க சுற்றுலா செல்லத் தேவை இல்லாத அளவுக்கு, வெயில் வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டது. கோடையின் தொடக்கமே இப்படி என்றால், அக்னி வெயிலை எப்படிச் சமாளிப்பது என்கிற பதற்றம் வரும். அதிக வியர்வை, வியர்க்குரு, கட்டிகள், அம்மை, சோர்வு, மயக்கம் என வெயில் தரும் தொல்லைகள் அநேகம். கூடவே, வெயில் காலத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் அலுவலகத்தில் சக ஊழியர்கள் வரை எரிந்துவிழுவார்கள். வெயில், நம் மனதின் ஈரத்தையும் உறிஞ்சி, நம்மைச் சிடுசிடுப்பாக்கிவிடுவதே இதற்குக் காரணம். கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக, தயாராக இருந்தால் சம்மரை கூலாக எதிர்கொள்ளலாம்.

நீர் வறட்சி

அதிகப்படியான வெப்பத்தால் உடலில் உள்ள நீரின் அளவு குறைந்து, நீர் வறட்சிப் பிரச்னை (Dehydration) வருகிறது. நீரிழப்பு ஏற்படும்போது, உடலில் உள்ள சத்துக்களும் வெளியேறி விடும். வியர்வை வராத நபர்களுக்குக்கூட நீர்ச்சத்து, சிறுநீர் மூலமாக வெளியேறும். இதனால், மயக்கம், வயிற்றுப்போக்கு, சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படலாம். சுற்றுலா செல்வோர் பல மணி நேரத்துக்குச் சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பதால், கிருமிகள் பல்கிப் பெருகி தொற்று ஏற்பட்டு, எரிச்சல் உணர்வைத் தருகிறது. சிறுநீர் தொடர்ச்சியாக வெளியேறும் அளவுக்கு உடலில் நீர்த்்தன்மையைப் பராமரித்துக்கொள்வது அவசியம்.

உடல் வெப்பம்

உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு, வெயில் காலத்தில் இன்னும் சூடு அதிகரிக்கும். நீர்ச்சத்து குறைவதால், வயிறு இழுத்துப் பிடித்தல், அடிவயிற்று வலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். உடலின் வெப்பத்தை முதலில் கண்கள்தான் வெளிப்படுத்தும். கண்கள் சூடாக இருப்பது போன்ற உணர்வு, எரிச்சல், சிவந்துபோதல், கண்கள் பொங்கி அழுக்கு வெளியேறுதல் போன்ற பிரச்னைகள் உருவாகும். நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், இளநீர், நீர்மோர் நிறைய எடுத்துக்கொள்வதன் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வெளியில் வெயில்தகித்துக்கொண்டிருக்கையில், அறையில், ஏ.ஸியில் 16 டிகிரி அளவுக்கு அதிகக் குளிருடன் இருக்கக் கூடாது. வெளியே வரும்போது, வெப்ப நிலை வேறுபாடு உடலைப் பாதிக்கும். கண்களின் வெப்பத்தைப் போக்க, குளிர்ந்த நீரால் அடிக்கடி கண்களைக் கழுவலாம்.

சன் ஸ்ட்ரோக்

வயதானவர்கள், இதயப் பிரச்னை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், எதிர்ப்புத் திறன் குறைந்தவர்கள் வெயிலில் போகக் கூடாது. அவசியம் எனில், அதற்குரிய பாதுகாப்புடன் செல்ல வேண்டும். உடலில் நீர் சரியான அளவில் இருந்தால்தான், ரத்த ஓட்டம் சீராக நடைபெறும். ரத்த ஒட்டம் மூளைக்குச் சரியாக செல்லாதபோது, சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, மயக்கம் வரலாம். சுய நினைவு இருப்பவர்களுக்கு, வாய் வழியாகத் திரவ உணவுகளைக் கொடுத்து எழுப்பலாம். சுயநினைவு இல்லாதவர்களை, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் நேரடியாக உடலில் படுவதைத் தவிர்ப்பதே நல்லது.

வயிற்றுப்போக்கு

வெளியில் சாப்பிடுபவர்களுக்கு, வெப்பச் சூழலில், அடிக்கடி ஃபுட் பாய்சன் ஏற்படும். இதனால், தொடர் வயிற்றுப்போக்கால் அவதிப்பட நேரிடும். உணவகங்களில், நீர் பற்றாக்குறையால் சுகாதார மற்ற நீரைக்கொண்டு, உணவு தயாரிக்கப்படும். வெளியில் குடிக்கும் தண்ணீர்கூட சுகாதாரமானதா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நீரை நன்றாகக் கொதிக்கவைத்து, ஆறி வடிகட்டிய பிறகு, குடிப்பதே நல்லது.

டைபாய்டு

கோடையில் இந்தக் காய்ச்சல் அதிகம் தாக்கும். தண்ணீர் முலம் பரவும் நோய் என்பதால், 21 நாட்கள் வரை இதன் தீவிரம் இருக்கும். அவரவர் உடல் எதிர்ப்புத் திறனைப் பொறுத்து, காய்ச்சலின் வீரியம் மாறுபடும். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டில் தயாரித்த உணவுகளை உண்பது நல்லது. சுகாதாரமற்ற உணவு, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்த்தாலே, இந்தக் காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம்.

அம்மை நோய்கள்

வெயில் காலத்தில் அம்மை நோய்கள் அதிகம் தாக்கும். குழந்தைகளுக்கு அம்மைவந்தால், அதிகம் சிரமப்படுவார்கள் என்பதால், டாக்டர் ஆலோசனைப்படி தடுப்பூசிகள் போடுவதே சிறந்தது. இளநீர், பழங்கள், காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்வதன் மூலம், நீர்ச்சத்தைச் சரியாகப் பராமரித்தாலே, அம்மை நோய்களைத் தவிர்க்கலாம்.


உணவை மாற்றுங்கள்

மூன்று வேளையும் திட உணவு எடுத்துக் கொள்வதைவிட கஞ்சி, கூழ், மோர், இளநீர் என திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அலுவலகங்களுக்கு கொண்டு போகும் லஞ்ச் பாக்ஸ்களில் சோறு, சாம்பார், ரசம், பொரியல் என வழக்கமான உணவுகளுக்குப் பதிலாக நீர்ச்சத்துள்ள காய், பழங்களின் சாலட்கள், மோர் ஆகியவை நிரம்பியிருக்கட்டும். சாலட்கள் அதிகம் எடுத்துக்கொள்வதால் சமையலறை வெப்பத்தில் வியர்க்க, விறுவிறுக்க அதிக நேரம் நிற்பதில் இருந்தும் தப்பிக்கலாம். உணவில் அதிகக் காரம், மசாலா, பொரித்த உணவுகள் வேண்டவே வேண்டாம். வியர்வையால் குழந்தைகள் சீக்கிரம் சோர்ந்து போவார்கள் என்பதால் அவர்களுக்கு நீர் உணவுகள் அடிக்கடி தருவது அவசியம்.

வீட்டை கூல் ஆக்குங்கள்

மாநகர்களில் ஒரே ஒரு அறையில் மட்டும் ஏ.ஸி இருக்கும் வீடுகளில் கோடைக்காலத்தில் திண்டாட்டம்தான். இரண்டு பெட்ரூம்களிலும் ஏ.ஸி வைத்திருப்பவர்கள்கூட எகிறும் மின் கட்டணத்துக்குப் பயந்து, ஒரே அறைக்குள் தஞ்சம் புகுந்துவிடுகிறார்கள். கணவன், மனைவி, குழந்தைகள், தாத்தா, பாட்டி என, எல்லோரும் ஒரே அறையில் நெரிசலை அதிகப்படுத்தினால் இடநெருக்கடியோடு, மனநெருக்கடியும் சேர்ந்துவிடும். வெயிலுக்குப் பயந்து ஒரே அறைக்குள் ஒடுங்குவதைவிட, குடியிருக்கும் வீட்டை குளிர்ச்சியாக்குவது பற்றி யோசிக்கலாம். கிடைக்கிற இடங்களில் எல்லாம் செடிகள் வளர்ப்பது, கூரைக்குக் கீழே தெர்மோகோல் அமைப்பது, மாடியில் தோட்டங்கள் அமைப்பது, இளநிற பெயிண்டுகள் அடிப்பது என, வீட்டை வெயிலில் இருந்து பாதுகாத்து, செயற்கைக் குளிரூட்டிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்தும் தப்பித்துவிடலாம்.

நோ ஃப்ரிட்ஜ்

வெயிலில் இருந்து வீட்டுக்குள் நுழைந்ததும், நம் கைகள் திறப்பது ஃப்ரிட்ஜைத்தான். சில்லென தண்ணீரோ, ஜூஸோ குடித்தால்தான் நமக்கு உயிர் வரும். இதைவிட தொண்டைக்கு ஆபத்து தருவது வேறொன்று இல்லை. அதிக வெப்பநிலை, அடுத்த நொடியே அதிகக் குளிர் என்கிற வெப்பநிலை மாற்றங்களை நம் உடல் ஏற்றுக்கொள்ளாது. ‘‘வெயில் காலத்துலகூட ஏன் ஜலதோஷம் பிடிக்குது?’’ என்று சந்தேகக் கேள்வி கேட்பவர்களுக்குப் பதில் இந்த ஃப்ரிட்ஜ் தண்ணீர்தான். அறை வெப்பநிலையில் தண்ணீர் குடிப்பதே எப்போதும் சிறந்தது. சில்லென்ற தண்ணீர்தான் வேண்டும் என்பவர்கள், மண்பானைத் தண்ணீரைப் பயன்படுத்தலாம். சாலை ஓரங்களில் குவித்துவைக்கப்பட்டிருக்கும் மண்பானைகளில், சிவப்பு நிறத்துக்காக ரெட் ஆக்ஸைட் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் உடலுக்குக் கெடுதல்தான் என்பதால், மண்பானை வாங்கும் முன் பானையின் தரத்தை உறுதிப்படுத்துவது நல்லது.

வெப்ப காலத்தில் உணவுப்பொருட்கள் சீக்கிரம் கெட்டுப்போய்விடும் என்பதால், ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப்பொருட்களைச் சூடுபடுத்தி உண்ணாமல், அவ்வப்போது சமைத்துப் பயன்படுத்தலாம். ஆஸ்பெஸ்டாஸ் அபாயம்கோடையில் நிழலுக்காக வீட்டின் முன்புறமோ, பால்கனியிலோ, மொட்டை மாடியிலோ ஆஸ்பெஸ்டாஸ் மூலம் தற்காலிகக் கூரைகள் அமைப்பது வழக்கம். அந்த ஷீட் மெலிதாக இருப்பதால், சூரிய வைப்பத்தை அப்படியே உள்வாங்கி, நமக்கு அனுப்பிக்கொண்டிருக்கும். சூரிய வெப்பத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகளைவிட, பல மடங்கு பாதிப்புகளை இந்த ஷீட்கள் நமக்கு ஏற்படுத்திவிடும். பலவகைப் புற்றுநோய்கள் இதனால் வரும் வாய்ப்பு இருப்பதால், உலகில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஷீட்களைத் தடை செய்துள்ளன. வெயிலுக்குப் பயந்து மேற்கூரை போட திட்டமிடுபவர்கள் ஒலைக் கூரை, ஒடுகளால் செய்த மேற்கூரை போடலாம். ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட வேண்டுமெனில், நான்கு புறமும் காற்றோட்டமான இடைவெளியுடன், மேற்பரப்பில் படரும் செடிகளை வளர்த்து, சூட்டை குறைத்துக்கொள்ளலாம்.

சாலையோர ஜூஸ் கவனம்

பயணங்களில் சூரியன் ஸ்ட்ரா போட்டு நீரை உறிஞ்ச, நாம் தஞ்சமடைவது சாலையோரங்களில் இருக்கும் சாத்துக்குடி, கரும்பு ஜூஸ் கடைகளில்தான். சாத்துக்குடியும், கரும்பும் வெயிலுக்கு நல்லது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதோடு கலக்கும் தண்ணீர் எந்த அளவுக்குச் சுத்தமானது என்பதற்கு யாரும் உத்தரவாதம் தர முடியாது. கூடவே, அதில் கலக்கும் ஐஸ் கட்டிகள் எந்தத் தண்ணீரில் தயாரிக்கப்படுகின்றன என்பதும் தெரியாது. இந்தத் தண்ணீர் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி, உடலில் நீர் இழப்பை ஏற்படுத்திவிடும். அவசியம் ஜூஸ் வேண்டும் எனில் ஐஸ் கட்டியையாவதுத் தவிர்க்கலாம். சுத்தமான தண்ணீர் பாட்டில் ஒன்றை எப்போதும்  உடன் வைத்திருப்பது பலவிதங்களில் நன்மை தரும்.

வியர்க்க வியர்க்கக் குளிக்காதீர்கள்!

தலை அதிகம் வியர்த்தால் அடிக்கடி துடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். வியர்வையை அப்படியே விட்டுவிட்டால், உடலில் சளி பிடித்துக்கொள்ளும். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள், தலை வியர்க்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். குழந்தைகள் விளையாடிவிட்டு வந்ததும், டவலால் துடைத்து வியர்வையை அகற்றுங்கள். சில நிமிடங்கள் கழித்துக் குளிக்கவைக்கலாம். வியர்வையோடு குளிப்பது, வியர்வை வழிய, வழிய முகம் கழுவுவது இரண்டுமே தவறு.


இயற்கையான முறையில் வெப்ப காலத்தை எப்படி எதிர்கொள்வது?

வெயிலால் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட் (Electrolyte) சமன் இல்லாமல் போகிறது. அதை ஈடுசெய்ய இளநீர் அதிகம் குடிக்கலாம். இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட், உடனடியாக உடலின் நீர்ச்சத்தை சமன்செய்யும். கூடவே, மூன்று நான்கு லிட்டர் தண்ணீர், நீர்மோர், பழங்கஞ்சி, உப்பும் சர்க்கரையும் சேர்த்த நீர் ஆகாரங்களைச் சாப்பிடலாம். சாதாரணமாக நம் உடலின் வெப்ப நிலை 98.6 டிகிரி இருக்கும். இது, அந்தந்தப் பருவ காலத்திற்கு ஏற்றவாறு சிறிது மாறும். எதிர்ப்புத் திறனைப் பொறுத்துப் பிரச்னைகளை ஏற்படுத்தும். இது, பொதுவாகக் காணப்படும் வெப்ப காலப் பிரச்னை என்றாலும் சிலருக்கு உள்ளுறுப்புப் பாதிப்புகள்,  பிடிப்புகள், சருமப் பாதிப்புகள், பருக்கள், மயக்கம், குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உடலை சமமாக வைத்துக்கொள்ளவும், தண்ணீரைவிட சிறந்தது எதுவும் இல்லை.வாரத்துக்கு இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்து, அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். வயிறு, கண் பகுதிகளில் ஈரத்துணி அல்லது நீரில் நனைத்த பஞ்சை, 20 நிமிடங்கள் போட்டு, உலரவிடலாம். மருதாணி இலைகளை அரைத்து, உள்ளங்கை, பாதத்தின் அடிப்பகுதியில்  வைத்துக்கொள்ளலாம்.

உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால், சருமத்தில் பருக்கள், கட்டிகள், சிவப்புத் திட்டுகள், வியர்க்குரு, தொடை இடுக்குகளில் அரிப்பு  போன்றவை உருவாகின்றன. அதிகமாக வியர்வை வரும் நபர்களுக்கு, எண்ணெய்ப் பசை பிரச்னையும் இருந்தால், அவர்களுக்கு வெயில் காலப் பருக்களும் வரும். இதற்குக் கற்றாழையின் சதைப்பகுதி, தேன், வெள்ளரிக்காய் சாறு, வேப்பிலை விழுது, தேங்காய் எண்ணெய், தேங்காய் வழுக்கை விழுது போன்றவற்றை உடல் முழுவதும் பூசலாம். அரசு சித்தா மருந்தகங்களில் ‘மட் பேக்’ (Mud pack)கிடைக்கும், அதை நீரில் கலந்து, உடல் முழுவதும் தடவலாம். வயிறு, கண் பகுதிகளில் ‘மட் பேக்’ போட்டுக்கொள்ளலாம்.

அடர்ந்த நிறத்தில் சிறுநீர் கழித்தாலே, உடலில் நீரின் அளவு குறைந்துள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். சிறுநீர் கழிக்கையில் வலி, எரிச்சல் ஏற்படுவது சிறுநீர்ப் பாதைத் தொற்றின் அறிகுறி. முந்தைய இரவு ஊறவைத்த வெந்தயத்தை, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அடிவயிற்றில் ஈரத்துணியை வைத்து உலரவிடலாம். தொட்டியில் இடுப்பளவு வரை நீர் நிறைத்து 20 நிமிடங்கள் வரை உட்கார்ந்திருப்பதன் மூலமும் இந்தப் பிரச்னையை சரிசெய்யலாம்.

கோடைக்கேற்ற உணவுகள்

நீர்ச்சத்துள்ள கிர்ணி, தர்பூசணி, வெள்ளரி, முள்ளங்கி, நூல்கோல், பீர்க்கங்காய், புடலங்காய், மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, நுங்கு, வாழை, கீரைகள் என நீர்ச்சத்துள்ள காய்கறிகளை நிறைய எடுத்துக்கொள்ளலாம். உணவில் புதினா, கொத்தமல்லி, எள்ளு, சீரகம், நன்னாரி விதை, வெந்தயம், எலுமிச்சை போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

எலுமிச்சை, புதினா, இஞ்சி, தேன் கலந்த சாறு அல்லது டீயை தினமும் ஒருவேளை குடிக்கலாம். புதினா இலைகளும், இஞ்சியும் கலந்த மூலிகை டீ எடுத்துக்கொள்ளலாம்.

நீர்மோர், இளநீர், பதநீர், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் போன்ற நீர் ஆகாரங்களை சாப்பிட்டுவர, உடல் வறட்சியாகாது. அருகம்புல் சாறு, நெல்லிச் சாறு, தர்பூசணி சாறு, வெள்ளரிச் சாறு,  சிட்ரஸ் வகை பழச்சாறுகள் போன்றவை இழந்த நீரை சமன் செய்யும். வெப்பத்தை அதிகரிக்கும் கோதுமை, மைதா, சிக்கன், ஊறுகாய், பாக்கெட் உணவுகளைத் தவிர்க்கலாம்.

கட்டுரை நன்றி : விகடன்

 

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s