மினி கைடுலைன் பஞ்சாயத்து அப்ரூவல்..


நகரங்களில் வீட்டு மனைகளின் விலை கோடியிலும், சிறுநகரங்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டும் இருக்கிறது. இந்த நிலையில் அதிகமானவர்கள் விலை குறைவாக இருக்கிறது என்கிற காரணத்தினால், கிராமப்பஞ்சாயத்து எல்லைக்குள் வரும் வீட்டு மனைகளை  வாங்கி வருகிறார்கள். நடுத்தர வர்த்தகத்தின் சொந்த வீடு ஆசையை நிறைவேற்றுகிற மாதிரி ரியல் எஸ்டேட் புரமோட்டர்களும் 600 சதுர அடி, 800 சதுர அடி அளவில் மனைகளைப்போட்டு வருகின்றனர். இதில் அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவெனில், இவற்றில் பல புராஜெக்ட்கள் முறையாக அரசிடம் அனுமதி பெறப்படாதவை என்பதே!  

 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), நகர ஊரமைப்பு இயக்குநரகம் (டிடிசிபி) ஆகிய இரண்டு அமைப்புகள்தான் வீட்டு மனை லே-அவுட்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் பெற்றிருக்கின்றன.

 

பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு எந்த லே-அவுட்டுக்கும் நேரடியாக அனுமதி வழங்க அதிகாரம் இல்லை. பலரும் இந்த விவரம் தெரியாமல் பஞ்சாயத்து அப்ரூவல் என்று  சொல்லி சிஎம்டிஏ / டிடிசிபி அனுமதி பெறாமல் விற்கப்படும் மனைகளை வாங்கிவிடுகிறார்கள். வீடு கட்ட அனுமதிவேண்டி விண்ணப்பிக்கும்போதுதான் சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். கட்டட அனுமதி கிடைக்காமல், வங்கிக் கடன் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதுபோன்ற  கேள்விகளுக்கு இதோ, பதில். தமிழக அரசு 18.08-1997-ல்  ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. இந்த உத்தரவு குறித்து தருமபுரி மாவட்டம் வெங்கடசமுத்திரம் முதல்நிலை ஊராட்சியின் செயலர் பி.கோவிந்தராஜு நம்மிடம் விரிவாக விளக்கிச் சொன்னார்.  

 

”அரசு ஆணையின்படி மனைகளைப் பிரித்து லே-அவுட் போட்டு விற்பனை செய்பவர்கள், பிரதான சாலைகளைக் குறைந்தபட்சம் 30 அடி அகலத்திலும், குறுக்குச் சாலைகளை குறைந்தபட்சம் 21 அடி அகலத்திலும் அமைக்க வேண்டும். மேலும், வடிகால் வசதி, தெருவிளக்கு அமைத்து கொடுக்க வேண்டும். தவிர, 10% இடத்தைப் பொதுப்பயன்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்துகொடுக்க வேண்டும். இதன்பிறகு அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உள்ள நகர ஊரமைப்பு இயக்குநரக அலுவலகத்தில் உரிய கட்டணங்கள் செலுத்தி அனுமதி பெறப்பட வேண்டும். இந்த அனுமதி பெறப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட மனைகள் அமைந்த  பஞ்சாயத்து அலுவலகத்தில் அங்கீகாரம் கோரி விண்ணப்பம் செய்யவேண்டும். கிராமப் பஞ்சாயத்து தலைவர் இந்த விண்ணப்பத்தினைப் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட வீட்டு மனையினை ஆய்வு செய்வார்.

 

இந்த வீட்டு மனைகளில் தெருக்களின் சாலை வசதி, வடிகால் வசதி, தெருவிளக்குகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய வசதிகளை, விற்பனை செய்பவர்கள் அமைக்காமல் இருந்தால், இவற்றை அமைக்கச் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இதற்கான அபிவிருத்திக் கட்டணத்தை மனை விற்பனை செய்பவர்களைச் செலுத்த சொல்வார். இதற்கான தொகை விவரத்தினை ஊராட்சி ஒன்றிய பொறியாளர் மூலம் ஊராட்சி நிர்வாகம் தெரிவிக்கும்.

 

மொத்த மனைப்பிரிவில் 10 சதவிகித நிலத்தைக் கிராம ஊராட்சிக்கு, சம்பந்தப்பட்ட மனை விற்பனையாளர் தான பத்திரம் மூலம் எழுதி பதிந்து கொடுக்கவேண்டும். அவ்வாறு பத்திரம் பதியும்போது பொது வழிப்பாதை மற்றும் 10 சதவிகித மனைக்கும் லே-அவுட் போட்டு விற்பவருக்கும் இனி எந்தவிதமான சம்பந்தமும் இல்லை எனவும், இந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு கிராம ஊராட்சி நிர்வாகம் பயன்படுத்தவும் பத்திரம் பதிந்து கொடுக்க வேண்டும்.

 

சம்பந்தப்பட்ட வீட்டு மனைகள் எதிர்காலத்தில் வளர்ச்சி அடையும் போது அந்தப் பகுதியில் அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடம், நியாய விலை கடை மற்றும் அரசு துறையின் கீழ்வரும் இதரவகையான கட்டடங்கள் கட்ட இந்த 10% இடத்தினை ஊராட்சி நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ளும். இதனால் அந்தப் பகுதிகளில் வீட்டு மனை வாங்குபவர்கள் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்” என்றவர், இந்த மனைகளில் வீடு கட்ட அனுமதிகோரி விண்ணப்பிக்கும் முறை குறித்தும்  விளக்கிச் சொன்னார்.

 

”டிடிசிபி மற்றும் ஊராட்சியின் அனுமதி பெறப்பட்ட வீட்டுமனைப் பிரிவினை வாங்கியவர்கள் வீடு கட்ட வரைபடம் நகல் 5, சம்பந்தப்பட்ட வீட்டு மனையின் பத்திர நகல் (அல்லது) பட்டா நகல், கட்டடத்தின் மொத்த மதிப்பீடு, சார்பதிவாளர் அலுவலகத்தில் பெறப்பட்ட சொத்து தொடர்பான வில்லங்கச் சான்றின் நகல், கையினால் வெள்ளைத்தாளில் எழுதிய விண்ணப்பம் ஆகியவற்றுடன் மனை அமைந்த  பஞ்சாயத்து  அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

பஞ்சாயத்து தலைவர் இதனை ஆய்வு செய்து,  தீர்மானம் வாயிலாகச் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்குக் கட்டடம் கட்ட உரிமம் வழங்குவார். இதற்கான குறைந்தபட்ச கட்டணமாகக் கட்டுமானப் பரப்பளவுக்கு சதுர அடி ஒன்றுக்கு ரூ.3 முதல் அதிகபட்சமாக ரூ.10 வரை வசூல் செய்வார்கள்.

 

உதாரணமாக, ஒருவர் 1,000 சதுர அடி பரப்பளவு வீடு கட்டுகிறார். இந்தக் கட்டடத்தின் மதிப்பீடு ரூ.10 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். 1,000 சதுர அடிக்கு ரூ.3 வீதம் ரூ.3,000  தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல ஆணையத்துக்கு ரூ.10,000 (1 லட்ச ரூபாய்க்கு ரூ.1,000 வீதம்), இதனோடு ஆய்வுக் கட்டணம் ரூ.50 என ஆகமொத்தம் ரூ.13,050 ஊராட்சி நிர்வாகத்துக்குக் கட்டவேண்டும்.  இதன்பிறகு வங்கியில் விண்ணப்பம் செய்தால் வங்கிக் கடன் கிடைக்கும்” என்றார்.

 

ஊராட்சியில் மனை வாங்கியவர்கள், கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது கவனிக்கவேண்டிய விவரங்கள் குறித்து அரசு அதிகாரிகள் தரப்பில் விசாரித்தோம். அவர்கள் சொன்ன விவரங்கள் வருமாறு: ”பஞ்சாயத்து எல்லைக்குள் 4,000 சதுர அடிக்குள், மொத்தம் 4 வீடுகளை ஓர் இடத்தில் கட்டும்போது சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அமைப்பே கட்டட அனுமதி வழங்கிவிடும். மொத்தம் 4,000 ச.அடியில் தரைதளம் மற்றும் இரண்டு தளம் கட்டிக்கொள்ள கிராம பஞ்சாயத்து அனுமதியே போதும். இதற்குமேல் எனில், டிடிசிபி-க்கு விண்ணப்பித்து அவர்களின் அனுமதி பெற்றபிறகே ஊராட்சியிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

 

தற்போதைய நிலையில் லே-அவுட்க்கு டிடிசிபி அனுமதி பெற்று, அதன்பிறகு சம்பந்தப்பட்ட பஞ்சாயத்திடம் அனுமதி பெறவில்லை, லே-அவுட்டில் 10% இடத்தை ஊராட்சிக்குத் தானமாக எழுதித்தரவில்லை எனில், அந்தக் குறிப்பிட்ட இடம் புஞ்சை நிலம் என்றே இருக்கும். இந்த இடத்துக்குத்  தனிப் பட்டா வாங்குவது, வீடு கட்ட அனுமதி வாங்குவது, வீட்டுக் கடன் வாங்குவது கடினமாகவே இருக்கும்.

 

பஞ்சாயத்துகளில் வீடு கட்ட பிளான் அப்ரூவல் வாங்க, வீட்டின் முன் மற்றும் பின்புறங்களில் 5 – 15 அடி வரை காலி இடம் விடவேண்டும். இது மனை அமைந்திருக்கும் சாலையின் அகலம் மற்றும் மனையின் முன்பக்க அகலம் ஆகியவற்றைப் பொறுத்தது.

 

இதேபோல், பக்கவாட்டில் மூன்றேகால் முதல் 5 அடி வரை காலி இடம் விடவேண்டிவரும். விரும்பினால் இரண்டு பக்கவாட்டிலும் இந்த அளவுக்கு இடம்விட்டுக்கொள்ளலாம் அல்லது  ஒரு பக்கத்தில் இடம்விடாமல் வீட்டைக் கட்டிக்கொள்ள அனுமதி அளிக்கிறார்கள்” என்கின்றனர் அரசு அதிகாரிகள்.

 

நடைமுறையில் கட்டடப் பிளான் என்பது அந்தந்த பஞ்சாயத்து தலைவர்களின் முடிவை பொறுத்து இருக்கிறது. அந்தவகையில் பஞ்சாயத்துகளில் வீட்டுமனை வாங்குபவர்கள், அது டிடிசிபி லே-அவுட்டாக இருந்தாலும், இல்லை என்றாலும் குறைந்தபட்சம் 30 அடிக்கு 40 அடி என்கிற அளவில் 1,200 சதுர அடி மனை வாங்கும்பட்சத்தில் மட்டுமே, அங்கீகரிக்கப்பட்ட பிளான் வாங்கி முறையாக வீடு கட்ட முடியும்.

 

இனி புதிதாக வீட்டுமனை வாங்குபவர்கள் இதை மனதில் கொண்டு செயல்பட்டால் பிற்பாடு வருந்தவேண்டிய அவசியமே இல்லை!

 

Thanks : Info Credit / Vikatan

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s