உயிர் பயத்தைப் பணமாக்கும் மருந்து கம்பெனிகள்!


நன்றாகப் படிக்கிறோம்; கடுமையாக வேலை பார்க்கிறோம்; நாளைக்கு வேண்டும் என முடிந்த அளவு சிக்கனமான வாழ்க்கை நடத்தி ஓய்வுக்காலத்துக்குப் பணம் சேர்க்கிறோம். அப்புறம், ஏதாவது ஒரு நோய் வந்து உடம்புக்கு முடியாமல் போய், சேமித்து வைத்த மொத்தப் பணத்தையும் மருத்துவமனைக்கும், மருந்து நிறுவனங்களுக்கும் தந்து விட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறோம்.

 

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை இப்படிதான் போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் சில நோய்கள் வந்தால், வாழ்நாள் சேமிப்பே கரைந்துவிடும். அப்படிப்பட்ட கொடிய நோய்களில் ஒன்றுதான் கேன்சர். இந்த நோயினால் இதுவரை சொல்லமுடியாத கஷ்டத்துக்குள்ளானவர்கள் சமீபத்தில் வந்திருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கேட்டு சந்தோஷப்படலாம். அது என்ன தீர்ப்பு?

 

மகிழ்ச்சி தந்த தீர்ப்பு!

 

சுவிட்சர்லாந்து நாட்டின் மருந்து தயாரிக்கும் நிறுவனம் நொவார்டிஸ் (novartis). இந்நிறுவனம் கேன்சர் நோய்களுக்கான க்ளிவெக் (Glivec) என்ற மருந்தை விற்று வந்தது. ஆனால், இது அத்தியாவசியமான மருந்து என்பதால், இந்த மருந்தின் ஃபார்முலாவை வைத்து மற்ற நிறுவனங்களும் அதேபோன்ற மருந்தைத் தயாரிக்க மத்திய அரசு அனுமதி தந்தது.

 

இந்த மருந்தை தான் மட்டுமே தயாரிக்கும் காப்புரிமையை நொவார்டிஸ் நிறுவனம் கேட்டபோது, தரமுடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் 2005-ம் ஆண்டே தீர்ப்பு தந்தது. அதன்பிறகு இந்நிறுவனம் 2009-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. கடந்த நான்கு வருடங்களாக நடந்து வந்த வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சொன்னது இந்திய உச்ச நீதிமன்றம்.

 

‘இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பு அல்ல. ஏற்கெனவே இருக்கும் மருந்தின் ஒரு சிறிய மாறுபட்ட வடிவம்தான். அதனால், இந்த மருந்துக்கு காப்புரிமை (பேடன்ட்) தரமுடியாது’ என்று சொல்லி ஏழு வருட போராட்டத்துக்கு முற்றுபுள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்.

 

இந்தத் தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நொவார்டிஸ் நிறுவனம், இனி இந்தியாவில் ஆராய்ச்சிக்காக செலவிட மாட்டோம் என்று சொல்லி இருக்கிறது. இதுவரை விற்ற மருந்துகளில் 95 சதவிகித மருந்துகள் இந்நிறுவனத்தின் அறக்கட்டளை மூலமாக ஏழைகளுக்கு இலவசமாகத் தந்திருப்பதாகவும், கிட்டத்தட்ட 16,000 பேர் இதனால் பயன் அடைந்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறது. ஆனால், இதன் ஜெனரிக் வகை (அதாவது, ஒரு மருந்தின் காப்புரிமை முடிந்தபிறகு அந்த மருந்துக்கான ஃபார்முலாவை வைத்து வேறு நிறுவனங்கள் அதே நோய்க்கு மருந்து தயாரிப்பதுதான் ஜெனரிக்) மருந்துகளை 3 லட்சம்பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு காரணம், நொவார்டிஸ் நிறுவனம் தயாரிக்கும் மருந்தின் விலை மாதத்திற்கு சுமார் 1.4 லட்சம் ரூபாய். ஆனால், மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் அதே மருந்தின் விலை சுமார் 8,500 ரூபாய் மட்டுமே.

 

இவ்வளவு விலை உயர்ந்த மருந்தினை 95 சதவிகித மக்களுக்கு இலவசமாகக் கொடுத்ததாகச் சொல்லும் இந்த மருந்து நிறுவனம், ஏன் இந்தத் தீர்ப்புக்காக கவலைப்படவேண்டும்?

 

”அங்குதான் இந்நிறுவனத்தின் பிஸினஸ் இருக்கிறது. ஒருவேளை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்நிறுவனத்துக்குச் சாதகமாக வந்திருந்தால், இந்த மருந்தினை வேறு யாரும் தயாரிக்க முடியாது. அப்போது, இந்நிறுவனம் வைத்ததுதான் விலை என்றாகி இருக்கும். அதன்பிறகு சேவையாவது, மண்ணாவது! ஒரு மாதத்துக்கான மருந்து 1.4 லட்சம் ரூபாய்க்கு விற்க ஆரம்பித்திருக்கும். பணமிருப்பவர்கள் வாங்கிச் சாப்பிட்டிருப்பார்கள். ஆனால், பணமில்லாத ஏழைகள்தானே நம் நாட்டில் அதிகம். மருந்து வாங்க வழி இல்லாமல் பலரும் மடிந்துதான் போயிருப்பார்கள்” என்கிறார், பெயர் சொல்ல விரும்பாத மருத்துவர் ஒருவர்.

 

உணவே மருந்து என்கிற காலம் போய், இப்போது மருந்தே உணவு என்ற நிலைமைக்குப் பலரும் வந்துவிட்டோம். வெளியூர்களுக்குச் செல்லும் போது துணிமணிகளை எடுத்துக்கொள் கிறோமோ இல்லையோ, அனைவரிடமும் ஒரு மருந்துப்பை இருக்கிறது. மருந்துகள் இல்லாவிட்டால் நாம் உயிர் வாழவே முடியாது என்கிற நிலைக்கு நாம் வந்திருப்பதை நம்மைவிட மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றன. நம் உயிர் பயத்தையே அடிப்படையாக வைத்து மருந்து கம்பெனிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றன.

 

இப்படி லாபம் சம்பாதிக்கும் மருந்து நிறுவனங்களுக்கு பெரிய அளவில் செலவு இல்லை. உதாரணமாக, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விளம்பரச் செலவு கிடையாது. அதற்கு பதிலாக, மருத்துவர்களுக்குச் ‘செலவு’ செய்வதன் மூலம் தங்கள் மார்க்கெட்டிங்கை கனகச்சிதமாகச் செய்துவிடுகின்றன மருந்து கம்பெனிகள்.  

 

மருத்துவர்களின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு குளிர்சாதன வசதி, குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றை வாங்கித் தருவது, சேர்கள் வாங்கித் தருவது, வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வது என மருந்து கம்பெனிகள் செய்யும் செலவு ஏராளம். அதற்கு கைமாறாக டாக்டர்களும் அதிகளவு மருந்துகளை எழுதித் தள்ளி, தங்கள் நன்றிக்கடனை மருந்து கம்பெனிகளிடம் காட்டிவிடுகிறார்கள். மருந்துகளில் மட்டுமல்ல, பரிசோதனை லேப்களிலும் நடக்கிறது.

 

நண்பர் ஒருவருக்கு நடந்த சம்பவம் இது. கால் வலி பிரச்னைக்காக டாக்டர் ஒருவரை அணுக, முதலில் ஸ்கேன் எடுத்துக்கொண்டு வாருங்கள் என்று சொல்லி இருக்கிறார் டாக்டர். கூடவே ஒரு சீட்டையும் எழுதித் தந்தார். ‘அருகில் இருக்கும் ஸ்கேன் சென்டருக்குப் போங்க. ஒரு ஸ்கேன் எடுக்க 8,000 ரூபாய் கேப்பாங்க. நான் தந்த சீட்டில் கொக்கி வடிவில் ஒரு அம்புகுறி போட்டிருக்கேன். அந்தக் கொக்கி இருந்தால் 6,000 ரூபாய் மட்டுமே வாங்குவாங்க. ஒருவேளை அதிகம் கேட்டா, கொக்கியைக் காட்டுங்க!’ என்றார் டாக்டர். நண்பர், டாக்டருக்கு தெரிந்தவர் என்பதால் அவருக்கு சேரவேண்டிய 2,000 ரூபாய் வேண்டாம் என்று சொன்னதால், 2,000 ரூபாய் மிச்சம். ஆனால், நோயாளிகள் எல்லோரும் டாக்டரின் நண்பர்கள் அல்ல. எனவே, எல்லோரும் 8,000 ரூபாய் கட்டிதான் ஆகவேண்டும்.  

 

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாகவும், மருத்துவத் துறை பற்றியும் சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் பேசினோம். ”இந்த மருந்து கம்பெனிகள் மருத்துவ ஆராய்ச்சிக்காக பெரும் செலவு செய்வதாகச் சொல்லி, மருந்தின் விலையை உயர்த்தி விற்கின்றன.  உண்மையில் மொத்த லாபத்தில் 2 சதவிகிதம் மட்டுமே மருந்து ஆராய்ச்சிக்காக செலவு செய்கின்றன.  

 

இந்த நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்வது பெரும்பாலும் அதிக லாபம் தரும் மருந்துகளுக்குத் தான். உதாரணத்துக்கு, காசநோயால் இந்தியாவில் அதிகம்பேர் உயிர் இழக்கிறார்கள். அதற்கான ஆராய்ச்சியை இவர்கள் செய்வ தில்லை. யானைக்கால் நோய், மனநலம் போன்றவற்றில் இவர்கள் கவனம் செலுத்துவதில்லை. அதேபோல, ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளில் இவர்கள் கவனம் செலுத்துவதில்லை. சில வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்தின் சக்தி இப்போது குறைந்திருக்கும். (அதாவது, இந்த மருந்துகளுக்கு பாக்டீரியாக்கள் பழகி இருக்கும். அப்போது இதைவிட அதிக வீரியம் இருக்கும் மருந்துகள் தேவைப்படும்). புதிய, இன்னும் சக்தி வாய்ந்த ஆன்டிபயாட்டிக் மருந்து உருவாக்கத்தில் இவர்கள் கவனம் செலுத்துவதில்லை. காரணம், இதிலெல்லாம் இவர்களுக்கு லாபமில்லை.

 

புதிய புதிய தடுப்பூசி மருந்துகளை உருவாக்கு வதில் இவர்கள் கவனம் செலுத்துவதில்லை. உதாரணத்துக்கு, பெண்களுக்கு அதிகமாக கர்ப்பப்பை புற்றுநோய் வருகிறது. இதைத் தடுப்பதற்கு அமெரிக்காவில் தடுப்பு ஊசி இருக்கிறது. இந்தியாவிலும் இதேபோல தடுப்பூசி இருக்கிறது. ஆனால், விலை அதிகம். மருந்து நிறுவனங்கள் இதில் ஆராய்ச்சி செய்வதன் மூலம் இன்னும் குறைவான விலைக்கு மருந்து தரலாம். ஆனால், சேவை செய்வதற்காக மருந்து நிறுவனங்கள் இல்லை. அவர்களின் ஒரே நோக்கம் லாபம் மட்டுமே.

 

அரசாங்கமும் சில நடவடிக்கைகளை எடுக்கலாம். மேலே சொன்ன தடுப்பூசியை அனைத்து பெண் குழந்தைகளுக்கும் தர முயற்சிக்கலாம். இதன்மூலம் கர்ப்பப்பை புற்றுநோய் வருவதைத் தடுக்க முடியும். தவிர, ஆராய்ச்சிக்கு இன்னும் அதிக நிதியை அரசு செலவிடலாம். செலவிடுவதோடு, மருந்துகளையும் உற்பத்தி செய்து ஏழை மக்களுக்கு இன்னும் தரமான மருந்தை குறைந்த விலையில் கிடைக்கச் செய்யலாம்.

 

இதைவிட முக்கியமான விஷயம், அத்தியாவசிய மருந்துகளுக்கான காப்புரிமையை மத்திய அரசு நீக்கி மற்றவர்களும் தயாரிக்க வழி வகுத்தால், மக்களுக்கான மருத்துவச் செலவு இன்னும் குறையும். காப்புரிமையை ரத்து செய்வதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரம் இருக்கும்போது, இன்னும் முக்கியமான மருந்துகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கலாம்.

 

டாக்டர்கள் மருந்து நிறுவனங்களிடம் சலுகை பெறுகிறார்கள். இதனால்தான் தேவை இல்லாமல் பல மருந்துகளை வாங்கவேண்டி இருக்கிறது. தவிர, ஒரு மருந்தை வாங்குவதற்கு கடை கடையாய் ஏறியிறங்கவேண்டியிருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள் பலர். இந்தப் பிரச்னைகளை சமாளிக்க ஒரே வழி, அந்த நிறுவனங்களின் பிராண்ட் பெயர்களை நீக்கிவிட்டு, மருந்து பெயர் மட்டும் இருக்கும்பட்சத்தில் டாக்டர்களுக்கு நிறுவனங்கள் எதுவும் கொடுக்கத் தேவை இருக்காது. டாக்டர்களும் என்ன தேவையோ, அவற்றை மட்டுமே எழுதுவார்கள். மத்திய அரசு இதை செய்யும்பட்சத்தில் மக்களுக்குப் பேருதவியாக இருக்கும்” என்று முடித்தார்.

 

45 வயதுக்கு மேல் மருந்து மாத்திரை யோடுதான் நம்மில் பலர் வாழ்கிற சூழ்நிலையில், மருந்துகளுக்கு லாப உச்சவரம்பு நிர்ணயம் செய்தால் மட்டுமே இனி பலரும் நோயிலிருந்து தப்பிக்க முடியும் என்கிற நிலை உருவாகி இருக்கிறது. தரமான கல்வியும், சுகாதார வசதியும் ஒவ்வொருவருக்கும் அளிக்கவேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உண்டு. இந்த இரண்டையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு, தப்பிக்கப் பார்க்கிறது மத்திய அரசாங்கம். மருந்து கம்பெனிகள் அரசாங்கத்தின் வாயையும் அடைத்துவிடுகிறதோ என்னவோ!

 


 கொள்ளை லாபம் கூடாது!

 

 டாக்டர் புகழேந்தி, உறுப்பினர்,

சூழல் பாதுகாப்புக்கான மருத்துவர் குழு ”பேடன்ட் என்கிற விஷயத்தை நாம் ஏற்றுக்கொண்டால், மருந்துகளின் விலை உயரவே செய்யும். டாக்டர் வாக்ஸ்மேன் என்பவர் காசநோயைக் குணப்படுத்தும் செப்டோமைசின் என்னும் ஊசி மருந்தைக் கண்டுபிடித்தார். அந்த மருந்துக்கு பேடன்ட் உரிமையை வாங்க அவர் மறுத்துவிட்டார். மக்கள் நலனுக்குக் கண்டுபிடிக்கப்பட்ட அந்த மருந்தை உலகில் யார் வேண்டுமானாலும் தயாரித்து, அளிக்கலாம் என்பதற்காகவே அவர் அப்படி செய்தார்.

ஆனால், மருந்து கம்பெனிகள் ஆர் அண்ட் டி-க்கும் பேடன்ட் வாங்குவதற்கும் கோடி கோடியாகச் செலவு செய்கின்றன. காரணம், பல மடங்கு லாபம் பார்க்கலாம் என்கிற ஆசைதான். ஒரு மருந்து தயாரிக்க ஆகும் செலவை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். உற்பத்திச் செலவுக்கு மேல் இவ்வளவு லாபம் மட்டுமே வைத்து விற்க மருந்து நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கவேண்டும். குறைந்தபட்சம் உயிர் காக்கும் மருந்துகளுக்காவது இந்தக் கட்டுப்பாடு கட்டாயம் கொண்டுவரவேண்டும்!”


 

வளரும் பார்மா துறை !

கடந்த சில ஆண்டுகளாகவே இரட்டை இலக்கத்தில்  வளர்ந்து வரும் பார்மா துறை வரும் சில ஆண்டுகளிலும் 14 முதல் 17 சதவிகிதம் வரை சராசரியாக வளரும் என்றே முக்கியமான ஏஜென்சிகள் சொல்கிறது. இப்போதைக்கு இந்த பார்மா துறை 11 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக இருக்கிறது. 2015-ம் ஆண்டு 20 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பார்மா துறை, 2020-ம் ஆண்டு 55 பில்லியன் டாலர் மதிப்புள்ள துறையாக மாறும். ஆனால், 70 பில்லியன் டாலரைத் தொடுவதற்குகூட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி இருக்கிறது முன்னணி ஆய்வு நிறுவனமான மெக்கென்ஸி. உலக பார்மா சந்தையில் இந்தியாவின் பங்கு சுமார் 1.4%.


 

லாபம் 300 மடங்கு!

 மருந்து கம்பெனியின் உயரதிகாரி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தோம். ”மருந்து உற்பத்தியில் நிறைய லாபம் கிடைக்கும் என்கிறார்களே, எவ்வளவுதான் கிடைக்கும்?” என்று கேட்டோம். ”என் பெயர் வெளியே சொல்லமாட்டேன் என்று உறுதி அளித்தால் சொல்கிறேன்” என்றார். சரி என்றோம். ”சாதாரணமாக 10 மடங்கு. சில மருந்துகளில் 300 மடங்கு” என்று நம்மை அதிர வைத்தார். 1 ரூபாய் மருந்து 300 ரூபாய்க்கு விற்றால் சும்மா அதிராதா பின்னே!

Credit / vikatan

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s