கோட்டக்குப்பத்தில் கண்டக்டர், டிரைவர் தாக்கப்பட்டதை கண்டித்து தனியார் பஸ் ஊழியர்கள் இன்று ஸ்டிரக்கில் ஈடுபட்டனர். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு முத்தியால்பேட்டை வழியாக கனகசெட்டிகுளத்துக்கு தனியார் பஸ் சென்றது. வில்லியனூரை சேர்ந்த டிரைவர் ராஜேஷ் பஸ்சை ஓட்டி சென்றார். முத்தியால்பேட்டை மார்க்கெட் பஸ் நிறுத்தத்தில் 3 பேர் ஏறினர். அவர்களிடம் கண்டக்டர் நாமதேவன் டிக்கெட் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த 3 பேரும் நாமதேவனை சரமாரியாக தாக்கினர். அவர்களை தடுக்க வந்த டிரைவர் ராஜேசும் தாக்கப்பட்டார்.
இந்நிலையில் டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோட்டக்குப்பத்தில் தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கோட்டக்குப்பம், கனகசெட்டிக்குளம் வழியாக மரக்காணம் வழித்தடத்தில் செல்லும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ் ஊழியர்கள் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, கண்டக்டர், டிரைவரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் பஸ்கள் இயக்கப் படாததை பயன்படுத்தி கோட்டக்குப்பம் வரை இயக்கப்பட்ட ஷேர் ஆட்டோக்களை மறித்து கண்டக்டர், டிரைவர்கள் வாக்குவாதம் செய்தனர்.