சூரியனைப் பார்த்து டைம் சொன்னது அந்தக் காலம்; கரன்ட் கட்டாவதைப் பார்த்து டைம் சொல்வது இந்தக் காலம்– இது சமீபத்தில் எஸ்.எம்.எஸ். மூலம் மொபைல் போனில் பரவிய ஜோக்.
நிமிஷத்திற்கு நிமிஷம் கரன்ட் கட்டாவதால் இன்றைக்குத் தமிழகமே இருளில் சிக்கித் தவிக்கிறது. இருளை விரட்டியடிக்க பல ஆயிரம் ரூபாயை செலவழித்து இன்வெர்ட்டரை வாங்கித் தள்ளுகிறார்கள் மக்கள். ஆனால், அந்த இன்வெர்ட்டர் இயங்கத் தேவையான மின்சாரம் இல்லாமல், பல வீடுகளில் அது வீணாகக் கிடக்கிறது.
இந்நிலையில் அண்மைக் காலமாக எல்லோர் கவனமும் சூரியஒளி மின்சாரம் மீது குவிய ஆரம்பித்திருக்கிறது. பலரும் சூரியஒளி மின்சாரத்தை நோக்கி செல்லத் தொடங்கி இருப்பது ஆச்சரியமூட்டும் வளர்ச்சி. சூரியஒளி மின்சார உற்பத்தியில் தமிழக அரசாங்கமும் விரைவில் இறங்கப் போவது ஆரோக்கியமான விஷயம்.
”மின் தட்டுப்பாடு அதிகரித்து வரும் இந்நேரத்தில் நமக்கான மின்சாரத்தை நம் வீடுகளிலேயே தயாரித்துக் கொள்ள வாய்ப்பு உருவாகி இருக்கிறது. மின் தட்டுப்பாட்டிற்கான நிரந்தரத் தீர்வாக சோலார் பவர் நிச்சயமாக இருக்கும்” என்கிறார் மாற்று எரிசக்தி குறித்து ஆய்வு செய்துவரும் பேராசிரியர் பாலசுப்ரமணியம்.
சோலார் பவர் மூலம் நமது அன்றாட மின் தேவைகளை நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் உண்டா? என்கிற கேள்வியை ஏ அண்ட் டி சோலார்ஸ் இயக்குநர் டி.விஜயேந்திரனிடம் கேட்டோம். ஏன் இல்லை என்று ஆரம்பித்தவர், அதுபற்றிய பல்வேறு விஷயங்களை எடுத்துச் சொன்னார்.
”சோலார் பவர் மூலம் தொழிற்சாலைகளுக்கான மின் தேவைகளை மட்டுமல்ல, வீடுகளுக்கான மின் தேவை களையும் தீர்க்க முடியும். இதற்கான ஆரம்பச் செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், ஒருமுறை செலவு செய்தால் அது இருபது, இருபத்தைந்து ஆண்டுகள் வரை வரும். சில சின்னச் சின்ன பராமரிப்புச் செலவுகள் தவிர வேறு பெரிய செலவு எதுவும் கிடையாது. வீடு கட்டும்போதே இதற்கான செலவையும் செய்துவிட்டால், ஆயுசு முழுக்க மின் தட்டுப்பாடும் இருக்காது. மின் கட்டணம் கட்ட வேண்டிய அவசியமும் இருக்காது.
நாளன்றுக்கு மூன்று முதல் நான்கு யூனிட்கள் வரை மின்சாரத்தைச் செலவழிக்கிற வீடுகளுக்கு ஒரு கிலோவாட் திறன் கொண்ட ஒரு யூனிட் சோலார் பேனல் போதும். அதைவிட அதிகமாகப் பயன்படுத்தும் வீடுகளில் இரண்டு கிலோவாட் அல்லது அதற்கு மேலும் யூனிட்களை அமைத்துக் கொள்ளலாம். ஐந்து கிலோவாட் வரை யூனிட் அமைத்துக் கொண்டால், மோட்டார்கள், ஏசி, மிக்ஸி, கிரைண்டர் என அனைத்து சாதனங்களையும் இயக்க முடியும்.
சூரியஒளி மின்சாரத்தை இரண்டு விதங்களில் பயன்படுத்தலாம். ஒன்று, சோலார் பேனலிலிருந்து நேரடியாக மின்சாரத்தை எடுத்து பயன் படுத்துவது. மற்றொன்று, பேட்டரியில் சேமித்து பயன்படுத்துவது. பகல் நேரங்களில் நேரடியாகவே பயன்படுத்திக்கொண்டு, இரவு நேரங்களில் பேட்டரி மூலம் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சோலார் பவரை இன்னும் அதிகமானவர்கள் பயன்படுத்தும்போது அதற்கான செலவு கணிசமாக குறைய வாய்ப்புண்டு” என்றார் அவர்.
இதில் முக்கியமான விஷயம், சூரியஒளி மின்சாரம் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு மத்திய அரசின் மரபு சாரா எரிசக்தி துறை மானியம் அளிக்கிறது. வீடுகள், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு கிலோவாட் யூனிட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கிறது. அதிகபட்சமாக 200 கிலோவாட் வரை அனுமதிக்கப்படுகிறது.
கர்நாடக மாநில அரசாங்கம் தற்போது சூரியஒளி மின்சாரத்தைக் கிட்டத்தட்ட கட்டாயமாக்கி வருகிறது. அங்கு புதிதாக வீடு கட்ட பிளான் அப்ரூவல் கேட்டுப் போனால், சூரியஒளி மூலம் மின்சாரம் பெறுவதற்கான வசதி இருந்தால் மட்டுமே அனுமதி தருகிறார்களாம்.
உதயா எனர்ஜி போட்டோவோல்டைக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உதயகுமாரிடம் பேசினோம்.
”மின் தட்டுப்பாடு பிரச்னையை சமாளிக்க எல்லோரும் இன்வெர்ட்டர் வாங்குகிறார்கள். இன்வெர்ட்டர் என்பது ஒரு மின் கடத்திதான். மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மாற்று எரிசக்தி கிடையாது. மின்சாரம் இருக்கும்போது சார்ஜ் ஏற்றிக் கொண்டு பவர்கட் ஆனதும் அந்த சார்ஜ் மூலம் இயங்குகிறது. ஆனால், சோலார் சிஸ்டம் என்பது மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சாதனம். இந்த தொழில்நுட்பம் 25 வருடமாக இருக்கிறது. இதற்கான உற்பத்தி செலவு முன்பு அதிகமாக இருந்தது.
இப்போது இரண்டு மடங்கு குறைந்துவிட்டது. இதைவிட விலை குறைவு என்பதாலேயே இன்வெர்ட்டரை வாங்கித் தள்ளுகிறார்கள் மக்கள். வாங்கிய பிறகு பிரயோஜனம் இல்லையே என்று அவதிப்படுகிறார்கள்.
மழைக் காலத்தில் சூரிய வெளிச்சம் இல்லாதபோது எப்படி மின்சாரம் தயாரிப்பது என்கிற சந்தேகம் மக்களிடம் இருக்கிறது. வெயில் அடித்தால் தான் சோலார் கருவி மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பது தவறு. மைனஸ் 35 டிகிரியிலும் மின்சாரம் பெற முடியும். இந்த பேனல் மீது மழைத் தண்ணீர் விழுந்தாலும் எந்தவித பாதிப்பும் இருக்காது.
500 வாட்ஸ் மூலம் இரண்டரை யூனிட் மின்சாரம் பெற முடியும். இதன் மூலம் அத்தியாவசிய வீட்டுத் தேவைகளை எளிதில் சமாளிக்க முடியும். இதற்கு 50,000 ரூபாய் செலவாகும்” என்றார் அவர்.
மின்சாரப் பிரச்னைக்கு அரசாங்கம் தீர்வு காணும் வரை காத்திருக்காமல் நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயார் செய்து கொள்ள பெஸ்ட் வழி, சோலார் பவர்தான்!
செலவு மற்றும் பராமரிப்பு!
* ஒரு கிலோவாட் மின்சாரம் தயாரிக்க குறைந்தபட்சமாக 1 லட்சம் முதல் அதிகபட்சமாக சுமார் 3.5 லட்சம் வரை செலவாகும். ஆனால், ஐந்து கிலோவாட் யூனிட் அமைக்க அதிகபட்சமாக 12.5 லட்சத்துக்குள் முடித்துவிடலாம். இதற்கும் அரசு மானியம் உண்டு.
* ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பேட்டரி மாற்ற வேண்டும். பேனல்களை துடைத்து சுத்தப்படுத்துவது, பேட்டரிக்குரிய டிஸ்டில்டு வாட்டர் மாற்றுவது தவிர வேறு செலவு இல்லை.
மின் சாதனங்களின் மின் பயன்பாடு!
டியூப் லைட்: 20 – 40 வாட்ஸ், சீலிங் ஃபேன்: 75 வாட்ஸ், டேபிள் ஃபேன்: 100 வாட்ஸ், டி.வி: 130 வாட்ஸ், எல்.சி.டி. டி.வி: 210 வாட்ஸ், டி.வி.டி: 20 வாட்ஸ், கம்ப்யூட்டர் சி.பி.யூ: 120 வாட்ஸ், மானிட்டர்: 150 வாட்ஸ், லேப்டாப்: 50 வாட்ஸ், செல்போன் சார்ஜர்: 4 வாட்ஸ், மியூசிக் சிஸ்டம்: 60 வாட்ஸ். சாதாரணமாக வீடுகளில் கரன்ட் மூலம் பயன்படுத்தப்படும் மின் பொருட்கள் எடுத்துக் கொள்ளும் மின் அளவு இது. இதில் நீங்கள் பயன்படுத்துவது எத்தனை வாட்ஸ் என கணக்கிட்டு அதற்கு தகுந்த சோலார் பேனல்களை அமைத்துக் கொள்ளலாம்.
Credit : The vikatan
i have a taken solar and ups dealarchip..contact T.Nehru biran B.E., cell :8760886546
LikeLike
It is very useful article. But i will expect more information regarding Solar Panel manufacture address, well branded company of battery etc.,,
LikeLike
இதை எனது வீட்டில் அமைக்க முடியுமா ?
எனது வீட்டில் 3 A/C , 4 பேன், 6 tube light , mixie , grinder , fridge உள்ளது
இதற்க்கு எத்தனை KW பொறுத்த வேண்டும் ?
அதற்க்கு ஆகும் செலவு என்ன ?
இதற்க்கு சீனியர் சிட்டிசன் போன்றவர்களுக்கு வங்கி கடன் உதவி கிடைக்குமா ?
மத்திய அரசு மாநில அரசு மானியம் எவ்வளவு கிடைக்கும் ?
தனி தனியாக கிடைக்குமா அல்லது ஒரு மானியம் தான் கிடைக்குமா ?
அப்படி என்றால் நான் இதை வீட்டில் நிறுவுவதற்கும் மானியம் பெறுவதற்கும் எங்கே விண்ணப்பிக்க வேண்டும் ?
இதை வாங்குவதற்கு எந்த நிறுவனம் சிறந்தது ?
அவர்களே இதை செய்து கொடுப்பார்களா ?
அதற்க்கு தனியாக பணம் எதுவும் செலுத்த வேண்டுமா ?
இதை நிறுவிய பிறகு TNEB மின் இணைப்பை துண்டித்து விடலாமா ?
சோலார் மற்றும் காற்றலை மின் உற்பத்திக்கு அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்குமா ?
அப்படி என்றால் எப்பொழுது எவ்வளவு செலுத்த வேண்டும் ?
கேள்விகள் அதிகமாக இருந்தால் தயவு செய்து கோபித்து கொள்ள வேண்டாம்.
மின் கட்டணம் அதிகமாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல்
இதை செய்வதால் என்னால் உலகம் மாசு அடைவதையும் தேவையற்ற பொருள்கள் விரயமாவதையும் ஓர் அளவுக்கு குறைக்கலாம் என்றும் ஒரு எடுத்துகாட்டாக இருக்கலாம் என்றும் இதை மற்றவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது,
இதற்க்கு நல்ல விடை கிடைத்தால்
என் குடும்பம் மற்றும் நண்பர்களிடம் சொல்ல வசதியாக இருக்கும்,
இதை அவர்களும் செய்ய ஒரு முயற்சியாக இருக்கும்.
LikeLike