இன்ஷூரன்ஸ்: எதை தேர்ந்தெடுப்பது லாபம்?


ன்ஷூரன்ஸ்… இது எப்போதும் பலருக்கு புரியாத புதிர்தான்! மோட்டார் வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுக்க வேண்டும் என்றால், முன்பு சில அரசு நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இப்போதோ, ஏராளமான தனியார் நிறுவனங்கள் களத்தில் இருக்கின்றன. அதேபோல், பாலிஸி புதுப்பிக்க அலைந்த காலம் மாறி, ஒரு போன் செய்தால் போதும்; வீடு தேடி வந்து பாலிஸி புதுப்பித்துத் தரும் நிலை வந்துவிட்டது. ஆனால், நம் தேவைக்கான மோட்டார் பாலிஸி எது என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த பாலிஸியை எடுத்திருக்கிறோமா? 

 

புதிதாக கார் ஒன்றை வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். இன்ஷூரன்ஸ் விற்பனைப் பிரதிநிதி, உங்களை குறைந்த பிரீமியம் கொண்ட ஒரு மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைப்பார். முதலில் நாம், பாலிஸி தொகை எவ்வளவு குறைவாக இருக்கிறதுஎன்றுதான் பார்ப்போம். சந்தையில் கிடைக்கும் மற்ற மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிஸிகளின் விவரங்களும் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல், பாலிஸியில் உள்ள விபரங்களை முழுமையாகப் படிக்கவும் மாட்டோம். விற்பனையாளர் பரிந்துரைக்கும் குறைவான பாலிஸியையே எடுத்து விடுவோம். சில மாதங்கள் கழித்து, கார் ஏதாவது விபத்துக்குள்ளானாலோ அல்லது திருடு போனாலோ நூறு சதவிகிதம் இழப்பீட்டுத் தொகை வேண்டி, இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் விண்ணப்பித்தால் அவர்கள், ‘விண்ணப்பித்த தொகையில் இருந்து 70 சதவிகிதம் மட்டுமே கிடைக்கும்’ என்பார்கள்.

 

இதுதான், அறியாமையிலிருக்கும் பல வாடிக்கையாளர்களின் நிலைமை. இன்ஷூரன்ஸ் விபரங்களை முழுமையாகப் படிக்காததினால், சந்தையில் கிடைக்கும் வேறு பாலிஸிகள் பற்றி அறியாததினால் வந்த பிரச்னை இது. ஆனால் இப்போது, நம் தேவைக்கு ஏற்ப மோட்டார் வாகன இன்ஷூரன்ஸை நாமே தீர்மானிக்கலாம். இது பற்றிய விபரங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் ‘பாரதி ஆக்ஸா ஜெனரல் இன்ஷூரன்ஸ்’ நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கே.என்.முரளி.

 

”மழைக் காலங்களில் தேங்கிய நீரில், வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் வாகனங்களைச் சரி செய்ய வேண்டுமென்றால், நிறைய செலவு வைக்கும். அதேபோல், திடீரென என்ன காரணம் என்றுதெரியாமலேயே தீப்பிடித்துக் கொள்ளும் வாகனங்களும் உள்ளன. இது போன்ற அசாதரண சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும் வாடிக்கையாளருக்கு, இன்ஷூரன்ஸில் நிவாரணம் பெற வழி இருக்கிறதா?” என்று இவரிடம் கேட்டபோது, ”நம் நாட்டின் ‘இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம்’ (IRDA)பொதுவான மோட்டார் பாலிஸிகளை வழங்க அனுமதிக்கிறது. இதன்படி அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் ஒரே விதமான அடிப்படை பாலிஸிகளை மட்டுமே விற்பனை செய்ய முடியும். இந்த அடிப்படை பாலிஸியிலேயே உங்கள் கேள்விகளுக்கான நிவாரணம் உள்ளன. உதாரணமாக, உங்கள் காரை வீட்டின் தரைத் தளத்தில் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மழை வெள்ளத்தில் கார் மூழ்கி விடுகிறது. நீர் புகுந்ததால் காரின் இருக்கைகள், இன்ஜின் உட்பட பல பாகங்கள் நீரால் பாதிக்கப்படுகின்றன. இதற்கு, அடிப்படை பாலிஸிலேயே நிவாரணம் கிடைக்கும். ஆனால், நீரில் மூழ்கிய வாகனத்தை, நீங்கள் ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்து, அதனால் இன்ஜினில் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு மட்டும் நிவாரணம் கிடைக்காது.

 

அதேபோல், நல்ல நிலையில் ஓடிக்கொண்டு இருக்கும் வாகனம் அல்லது நிறுத்தி வைத்திருந்தவாகனம் தீப்பிடித்து எரிந்துவிட்டால்… எதனால் தீப்பிடித்தது என்பதை ஆராய்ந்து, குறிப்பிட்ட பாகத்தில் ஏற்பட்ட பிரச்னையால் தீப்பிடித்தது என்றால், அந்த பாகத்துக்கு மட்டும் நிவாரணம் கிடைக்காது. தீயால் பாதிக்கப்பட்ட மற்ற பாகங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். ஆனால், வாகன தயாரிப்பாளர் பயன்படுத்தாத, நீங்களாகவே வேறு பாகங்களையோ அல்லது கூடுதல் ஒயரிங் வேலைகள் செய்திருந்து, அதனால் தீப்பிடித்தது என்றால், உங்களுக்கான நிவாரணம் மறுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.  

 

அடிப்படை பாலிஸி உடன், சில கூடுதல் திட்டங்களைச் சேர்த்துக் கொடுக்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதித்துள்ளது. இவை ‘கூடுதல் பாதுகாப்பு திட்டங்கள்’ (Add On Covers) என அழைக்கப்படுகிறது. இந்த பாலிஸியை தேர்ந்தெடுத்தால், வாடிக்கையாளர்கள் இன்ஷூரன்ஸ் செய்த முழுத் தொகையையும் பெற வழி கிடைக்கும்.

 

இந்த கூடுதல் பாதுகாப்புத் திட்டங்கள்தான் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் திட்டங்களை வேறுபடுத்திக் காட்டுபவை. இந்த கூடுதல் திட்டங்களின் பயன்கள் வாடிக்கையாளர்களுக்குச் சென்று சேர, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஆவண செய்ய வேண்டும். இதற்குக் கட்டணமாக சிறிய தொகையே வாடிக்கையாளர் செலுத்த நேரிடும். ஒரு மோட்டார் இன்ஷூரன்ஸ் வாங்கும் வாடிக்கையாளருக்கு, இந்தக் கூடுதல் பாதுகாப்புத் திட்டங்களைப் பற்றி எடுத்துக் கூறுவது அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், முகவர்களின் கடமை.

 

கூடுதல் பாதுகாப்புத் திட்டம், சந்தையில் கிடைக்கும் மற்ற திட்டங்களைப் போல் எளிதாக விற்கப்படுவதில்லை. உதாரணமாக, வாகன விபத்தில் காயம் பட்ட பயணிகளுக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் தேவைப்படும். அதற்கு உண்டான கட்டணத்தை சாதாரண பாலிஸிகள் வழங்குவதில்லை. ஆனால், இந்த ‘கூடுதல் பாதுகாப்புத் திட்டம்’ எடுத்திருத்தால், வாடிக்கையாளருக்கு இந்தக் கட்டணம் கிடைக்கும். இதுதான் இந்தத் திட்டத்தின் பயன்.

 

தற்போது சந்தையில் கிடைக்கும் சில கூடுதல் பாதுகாப்புத் திட்டங்கள்: (Add On Covers)

 

தேய்மானப் பாதுகாப்பு

(Depreciation Cover)

பொதுவாக, மோட்டார் பாலிஸியில் ‘தேய்மான விதிமுறை’ என ஒன்று உண்டு. இதன்படி, மோட்டார் வாகன உதிரி பாகங்கள் மாற்ற வேண்டி விண்ணப்பிக்கும் ஒவ்வொரு இழப்பீட்டுத் தொகையிலும், ஒரு பகுதி செலவை வாடிக்கையாளர் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த தேய்மான விதி, விபத்துக்கு உண்டான பாகங்களைப் பொறுத்து மாறுபடும். அவை…

 

உலோக பாகங்கள் (Metallic Parts) : வாகனங்களின் வயதுக்கு ஏற்ப ஒரு செலவை வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பாகங்கள் (Plastic & Rubber Parts)): பாகங்களின் விலையில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர் ஏற்க வேண்டும்.

 

ஃபைபர் பாகங்கள் (Fibre Parts) 30 % வாடிக்கையாளர் ஏற்க வேண்டும். ஆனால், இதுவே கூடுதல் பாதுகாப்புத் திட்டத்தில் நீங்கள் பாலிஸி எடுத்திருந்தால், 100 % செலவு திரும்பக் கிடைக்கும்!

 

இன்வாய்ஸ் விலை பாதுகாப்பு  (Invoice Price Cover):

 

இந்தத் திட்டம், வாகனத்தின் பாலிஸித் தொகைக்கும் (Sum insured)வாங்கும் இன்வாய்ஸ் விலைக்கும் (Invoice Price) உள்ள வித்தியாசத்தை ஈடு செய்யும். அதாவது, வாகனம் வாங்கி வருடங்கள் ஆக ஆக வாகனத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வரும். அந்தக் குறைக்கப்பட்ட மதிப்புக்குத்தான் பொதுவான பாலிஸிகள் ஈடு செய்யும். வாகனத்தின் முழு சேதங்களுக்கு அல்லது திருடு போனால், வாடிக்கையாளர் இன்வாய்ஸில் உள்ள விலையைவிட குறைவான தொகையையே பெற இயலும். ஆனால், இந்தக் கூடுதல் பாதுகாப்புத் திட்டம், இந்தக் குறையை நிவர்த்தி செய்யும். இதைத் தவிர, வாகனத்துகாகச் செலுத்தப்படும் ஆயுட் கால சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணமும் கொடுக்கப்படும்.

 

சாலையோரப் பாதுகாப்பு (Road side Assistance)

 

வாகனங்கள் செயலிழந்துவிட்ட நிலையில், அருகிலுள்ள சர்வீஸ் சென்டருக்கு இழுத்துச் செல்லவும், புதிய வீல்களைப் பொருத்தவும், பயணிகளைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லவும், மாற்றுப் பயண ஏற்பாடுகளை செய்யவும் (பெரிய செயலிழப்பின் போது), வாகனங்கள் பூட்டிய நிலையில் வாகனத்தின் சாவி தொலைந்து விட்டால் மாற்றுச் சாவி செய்யவும் அல்லது வாகனத்தைத் திறக்கும் உதவிகளைச் செய்யவும், எரிபொருள் தீர்ந்து விட்ட நிலையில், எரிபொருளை சம்பந்தப்பட்ட இடத்துக்குக் கொண்டு வரவும் இந்த கூடுதல் பாதுகாப்புத் திட்டம் உதவி செய்யும்.

 

மருத்துவப் பாதுகாப்பு

 (Hospital Cash Cover)

இந்தத் திட்டம், விபத்து ஏற்படும்போது ஆகும் மருத்துவச் செலவுகளுக்கு ஈடு செய்யும். வாகனத்தில் உள்ள பயணிகள் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும், ஒரு குறிப்பிட்ட தொகையை வாகன உரிமையாளருக்கு வழங்கும். தனியாக மெடிக்ளைம் பாலிஸி எடுக்க வேண்டிய அவசியமில்லை.

 

ஆம்புலன்ஸ்

(Ambulance)

பயணிகள், வாகனத்தில் பயணம் செய்யும்போது, விபத்தின் காரணமாக காயம்பட்டால், அந்த இடத்திலிருந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்படும் செலவை ஈடு செய்யும்.

 

மருத்துவச் செலவு

(Medical Expenses Cover)

மருத்துவச் செலவுக் காப்பீடு, வாகன விபத்தின் காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளை ஈடு செய்யும். வாகன உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

 

வாடிக்கையாளர்கள், பொதுவான இன்ஷூரன்ஸ் திட்டத்துடன், இந்த கூடுதல் திட்டங்களை வாங்குவதால், குறைந்த கட்டணத்தில் பெருத்த லாபம் அடையலாம். உண்மையான, தேவையான சமயங்களில் மிகுந்த உதவியாக இந்த திட்டங்கள் கைக்கொடுக்கும்” என்று முடித்தார் கே.என்.முரளி.

 

 

Nandri : vikatan

2 comments

  1. Insurance is against Islam, since it is based on Interest. Some Medical Insurance Policies are allowed, since it does not return any money.

    Like

  2. நங்கள் அதை ஒத்து கொள்கிறோம், ஆனால் நாம் நமது வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்க வில்லை என்றல் நம்மால் அதை உபயோகிக்க முடியாது, சட்ட விரோதம். நாம் மேலே சொல்லி இருப்பது வாகனங்களுக்கு உண்டான விஷயம்

    Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s