15 ஆண்டுகளுக்கு பின்னால் ஷஹீத் பழனிபாபா


ஆக்கம் : எம்.தமிமுன் அன்சாரி

ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் போர் குரலாய் சுமார் 25 ஆண்டுகாலம் சுழன்ற போராளி இன்று நமது நினைவுகளில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புது ஆயக்குடியில் பிறந்த அஹ்மது அலி; பின்னாளில் பழனிபாபாவாக மக்களிடம் அறிமுகமானார். வசதயான குடும்ப பின்னனியும், பிறவி போராட்ட குணமும் அவரை இளமையிலேயே தலைவராக வார்த்தெடுத்தது.

புது ஆயக்குடியில் நடைபெற்ற ஒரு வகுப்பு கலவரத்தின் தாக்கம்தான் அவரை மதவெறிக்கு எதிராக போராட தூண்டியது என்கிறார் அவரது ஊரை சேர்ந்த ஆசிக் உசேன். இவரும் பாபாவும் பழனி அரசு கலைக்கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.

ஊட்டி லேடவுல் என்ற புகழ்பெற்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால். தேசிய புகழ்பெற்ற பல தலைவர்களின் பிள்ளைகளோடு அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

இளம் வயதில் தனது தாய் மாமாவின் அரவணைப்பால் வளர்ந்திருக்கிறார். இடையில் குடும்பத்துடன் மனக்கசப்பு. அதை தொடர்ந்து சில காலம் கேரளாவில் முகாம் என, திசையற்ற ஒரு பயணத்தை தொடர்ந்திருக்கிறார்.

காலச்சூழல் அவரை திமுகவின் முக்கிய தலைவர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்தியது. கலைஞர், எம்-.ஜி.ஆர்., வை.கோ, வீரமணி உள்ளிட்ட பலருடன் நெருக்கம் ஏற்பட்டது. 1980களில் இவரது பொதுவாழ்வு பயணம் இப்படித்தான் தொடங்கியிருக்கிறது.

எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட மனக்கசப்பில் கலைஞருடன் நெருக்கமாகி திமுகவின் தவிர்க்க முடியாத பிரச்சாரரானர் பாப. பாபாவின் உரைகள் எம்.ஜி.ஆரை மிரட்டியது.

அதேகால கட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் மீனாட்சிபுரத்தில் நடைபெற்ற சமூக புரட்சியின் விளைவாக இந்து முன்னணி உருவாகியது. ராமகோபால ஐயரின் வன்முறை பேச்சுகளால் பல இடங்களில் வன்முறைகளும், கலவரங்களும் நடைபெற்றன.

ராமகோபல ஐயரின் மதவெறி பேச்சுக்கு, பாபா பதிலடி கொடுக்கலானார். அதுவே அவரை சிறுபான்மை மக்களிடம் பிரபலமாக்கியது.

அதே சமயம்; அவரது உரை பல இடங்களில் சர்சையானது அவரது கருத்துக்கள் ஏற்கப்பட்டாலும், சில வார்த்தைகள் எதிர்க்கப்பட்டன என்பது உண்மை.

1989ல் திமுக ஆட்சிக்கு வந்த நேரம். ராமகோபால ஐயரால் நாகூரில் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் கலைஞர் அரசு பாபாவை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையிலடைத்தது.

திமுக காரராகவே வலம் வந்த பாப; ஒரு தலைவராக உருவாவதற்கு இச்சம்பவம் ஒரு முக்கிய காரணமாகும். அகில இந்திய ஜிஹாத் கமிட்டியை உருவாக்கிய பாபாவுக்கு பெரும் ஆதரவு திரண்டது.

அன்றைய பிரபல முஸ்லிம் தலைவர்களான அப்துல் சமது சாஹிப், அப்துல் லத்தீப் சாஹிப் ஆகியோர் தங்களது களத்தை பற்றி கவலைப்படும் அளவுக்கு அவரது வளர்ச்சி இருந்தது.

அப்போது தான் பாட்டாளி மக்கள் கட்சி உருவாகியிருந்தது. டாக்டர்.ராமதாஸ் தமிழினப் போராளி என அறிமுகமானார். சிறையிலிருந்து பாபாவை அவர் சந்தித்து பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர். ஒடுக்கப்பட்டோர் ஓரணியாக திரளவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

அக்கால சூழலில் உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாரில் ஜனததளத்தின் கீழ் யாதவர்கள், முஸ்லிம்கள், தலித்துகள் உள்ளிட்டோர். ஓரணியாக திரண்டு ஆட்சியை கைப்பற்றியிருந்தனர்.

அதே போன்ற சூழலை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என இருவரும் விரும்பினர். அதன் எதிரொளியாகவே பாமகவின் தலைவர் பொறுப்பு வன்னியருக்கும், பொதுச் செயலாளர் பொறுப்பு தலித்துக்கும், பொருளாளர் பொறுப்பு முஸ்லிமுக்கும் பிரித்தளிக்கப்பட்டது.

அந்த வகையில் தீரன், தலித் எழில்மலை, குணங்குடி ஹனீபா ஆகியோர் முறையே அப்பொறுப்புகளை ஏற்றனர்.

கலைஞர் தனக்கு செய்த துரோகத்தை மறக்காத பாபா, முஸ்லிம் சமுதாயம் திமுகவின் மந்திரபோதையில் மயங்கி கிடப்தை இனியும் அனுமதிக்கக் கூடாது என முடிவெடுத்து களமிறங்கினார்.

ஜிஹாத் கமிட்டி சார்பில் நடைபெற்ற அனல் பறக்கும் பொதுக்கூட்டங்களில் திமுகவையும் , கலைஞரையும் தோலுரித்தார். திமுகவின் முஸ்லிம் ஓட்டு வங்கி கலையத் தொடங்கியது.

ஜிஹாத் கமிட்டியின் சார்பில் பொதுக்கூட்டங்கள் போட முடியாத இடங்களில் பாமகவின் சார்பில் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

பாபாவின் சில கருத்துக்கள் முக்கியமாக இருப்பதாக கூறுவோரும் உண்டு. அது எதிரிகளை மிரளவைக்கவும், சொந்த சமூகத்திற்கு நம்பிக்கையூட்டவும் அவர் அவ்வாறு பேசியதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

வன்னியர்களுக்கும், தலித்துகளுக்கும் மத்தியில் அவரது செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது. பாமாகவில் அப்போது பேரா. தீரனை தவிர வேறு யாரும் பேச்சாளர்கள் இல்லை. பாபாவின் வன்னியர் தலித் முஸ்லிம் ஒருங்கிணைப்பை வலியுறுத்தும் உரைகளை வன்னியர்களும், தலித்துகளும் வரவேற்றனர். அது சமூக நல்லிணக்கத்திற்கும் வழிகோலியது. அவரது உரையும் எதிரிகள் யார்? என்பதையும் மற்றவர்கள் நமது நண்பர்கள் என்பதயும் விளக்கும் விதமாக பக்குவமடைந்தது.

அதே நேரம் பாபாவை ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவெறி பயங்கரவாத சக்திகள் கண்காணித்துக் கொண்டே இருந்தனர்.

1992 டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து தமிழகமெங்கும் ஜிஹாத் கமிட்டிதான் கண்டன சுவரொட்டிகளை தமிழகத்தில் துணிந்து ஒட்டியது.

அப்போது RSS, VHP போன்ற இயக்கங்கள் தடை செய்யப்பட்டபோது அதை சமன் செய்யும் உவிதமாக சிறுபான்மையினர் தரப்பிலிருந்து தேவையின்றி ஜமாத்தே இஸ்லாமியும் ISS-ம் தடை செய்யப்பட்டன.

உடனே பாபா பாபர் மஸ்ஜித்தை இடிப்பதை கண்டித்தும், காரணமின்றி ஜமாஅத்தே இஸ்லாமியும், ISS-ம் தடைசெய்யப்பட்டதை கண்டித்தும் சென்னையில் மேடை போட்டு கண்டித்தனர். அந்த துணிச்சல் பாபாவுக்கு மட்டுமே இருந்தது.

மயிலாடுதுறையில் பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டித்து ஜிஹாத் கமிட்டி சார்பாக நடைபெறவிருந்த மாநாடு தடை செய்யப்பட்டது. பிறகு வோறாரு தேதியில் மீண்டும் நடைபெற்றது.

அம்மாநாட்டிற்கு வருவதாக வாக்களித்த கீ.வீரமணியும், வைரா முத்துவும் வரவில்லை. ஆனால் டாக்டர். ராமதாஸ், டாக்டர் சேப்பன், கிருஷ்ணசார் யாதவ் உள்ளிட்டோர் இருந்தனர்.

கூரைநாடு பாலத்திலிருந்து மாலை 5 மணிக்கு தொடங்கிய பேரணி இரவு 8 மணிக்கு மாநாடு நடைபெறுமிடத்திற்கு வந்து சேர்ந்தது.

வழியில்  ஓரிடத்தில் பாபா அவர்கள் பேரணியை வரவேற்றுக் கொண்டிருந்தார். டாக்டர்.ராமதாஸ் மற்றொரு இடத்தில் வரவேற்றுக் கொண்டிருந்தார்.

இதுதான் ஜிஹாத் கமிட்டியின் முதலும், கடைசியுமான பேரணி & மாநாடகும். பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

அப்போது நானும், எனது ஊரை சேந்தவர்களும் 4 வேன்களில் கலந்துக் கொண்டோம். எங்களை சுற்றியுள்ள வன்னிய கிராமங்களிலிருந்து எங்களை விட அதிக வேன்களில் வன்னியர்கள் திரண்டு வந்தனர்.

பாபாவை முதன் முதலாக நான் அப்போதுதான் பார்க்கிறேன். மேடையில் எல்லோரும் இருக்கும்போது, வேதாரய்ணம் ஒன்றிய பாமக செயலாளர் ராஜேந்திரன் என்னை மேடையில் வைத்து பாபாவிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

அவரது கரங்கள் மிகவும் மென்மையாக இருந்தது. இதுவே எனது முதலும், கடைசியுமான நேரடி சந்திப்பாகும்.

பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு பின்னால் தமிழக சிறுபான்மையினர் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். ஆனால், ஜிஹாத் கமிட்டியால் உரிய அளவில் எதிர்வினை ஆற்ற முடியவில்லை என்ற குறையும் எழுந்தது.

ஆயினும் பாபாவின் செல்வாக்கு குறையவில்லை. வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து உழைக்கும் தமிழக மக்களின் ஆதரவு அவருக்கு வலுவாக இருந்தது.

அன்றைய ஜெயலலிதா அரசின் அடக்குமுறைகள் மற்றும் தடா சட்ட பாதிப்புகளின் எதிர்வினைவால் 1995&ல் தமுமுக உருவாகியது.

ஜனநாயக போரட்டங்களின் வழியாக உரிமைகளையும், பாதுகாப்பையும் பெற வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு தரப்பு சிந்தனையாளர்களும் ஒருங்கிணைந்த வேளையில்; புதிய அமைப்பை தொடங்குவதை விட தற்போது தான் நடத்திக் கொண்டிருக்கும் தமுமுகவையே எடுத்துக் கொள்ளுங்கள் என்று அன்றைய பாமக பொருளாளர் குணங்குடி ஹனீபா அவர்கள் கூறியதை அனைவரும் ஏற்றனர்.

ஆர்ப்பாட்டம், பேரணி, முற்றுகை, பத்திரிகையாளர் சந்திப்பு என தமுமுகவின் பரபரப்பு நடவடிக்கைகளால் சமுதாயத்தின் கவனம் தமுமுக பக்கம் திரும்பியது.

அப்போது பாபாவின் செயல்பாடுகளும், பிரச்சாரங்களும் சற்று குறையத் தொடங்கின. அவர் மீது சிலர் அவதூறுகளையும், பழிகளையும் கூறியது அவரை பாதித்தது. அவர் சென்னையில் தங்குவதை விட கோபிச்சட்டிபாளையம், பொள்ளாட்சி என கொங்கு பகுதியில் அதிகமாக முகாமிட்டார்.

இந்நிலையில் தான் டாக்டர்.ராமதாஸ் சென்னையில் ஈழத்தமிழர்களுக்கான மாநாட்டை அறிவித்தார். அதில் பால்தாக்ரேயும கலந்துக் கொள்வார் என்றதும், பாபா கொந்தளித்தார்.

ராமதாசுடனான அவரது உறவு முற்றுப்புள்ளிக்கு வந்தது.

இனி அடுத்தவர்களுக்கு ஏணியாக இருப்பதை விட நாமே ஜிஹாத் கமிட்டியின் சார்பாக ஓர் அரசியல் கட்சியை ஏன் தொடங்கக் கூடாது? என்ற சிந்தனைக்கு அவரை தள்ளியது. இது தொடர்பாக அவர் நிறைய ஆலோசித்தாக அவரோடு நெருக்கமாக இருந்த தாம்பரம் காமில் என்னிடம் ஒருமுறை கூறினார்.

ஆனால் மதவெறி சக்திகள் அவரது உயிருக்கு குறி வைத்து சுற்றிக் கொண்டிருந்ததை ஏனோ அலட்சியப்படுத்திவிட்டார்.

1997 ஜனவரில் 28 ஆம் தேதி அப்போது ரமலான் மாதம். இஃப்தார் முடிந்த நேரம். பொள்ளாசியில் தனது கவுண்டர் சமுதாய நண்பரின் வீட்டிலில் தொலைக்காட்சி செய்திகளை பார்த்துவிட்டு வெளியே வந்து தனது ஜீப்பில் ஏறிய போது 6 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் அவர் மீது வெடிகுண்டை வீசி சரமாரியாக வெட்டித் தள்ளியது.

எதிரியின் கையால் நான் வெட்டப்பட்டு சாக வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என பல மேடைகளில் அவர் முழங்கியவாரே அவர் ஷஹீதானார்.

தமிழகம் கொந்தளிப்பு

பாபா கொல்லப்பட்ட செய்தி இரவு 9 மணிக்கெல்லாம் பரவத் தொடங்கியது. தமிழகமெங்கும் மக்கள் தராவீஹ் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இப்போதிருப்பது போல் எல்லோரிடமும் செல்போன் வதிகள், ஈமெயில், குறுஞ்செய்தி வசதிகள் எதுவும் இல்லை.

பல ஊர்களுக்கு ஷஹர் நேரத்தில்தான் செய்தி போய் சேர்ந்தது. பலரும் பதறினார்கள். பெண்கள் எல்லாம் கூட அழுதார்கள்.

ஆங்காங்கே கல்வீச்சுகளும், பேருந்து உடைப்புகளும், கடை அடைப்புகளும் நடைபெற்றன. வன்னிய மக்களும், தலித்துகளும், முஸ்லிம்களும் மற்ற சமூகங்களும் கொந்தளித்து பாபாவுக்காக ஆங்காங்கே மவுன பேரணிகளை நடத்தினார்கள்.

தாம்பரம் உள்ளிட்ட பல ஊர்களில் கலவரம் 6 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள் காவல்துறை அராஜகம் செய்தது.

வைகோ, அப்துல் சமது, லத்தீப், ராமதாஸ் போன்ற தலைவர்கள் இரங்கள் அறிக்கை வெளியிட்டார். ஆனால், கலைஞர் சட்டமன்றத்தில் பாபாவை குற்றவாளி போல பதிவு செய்தார்.

அவர் MGR-க்கும் பின்னர் தனக்கும் நெருக்கமாக இருந்தவர். என்றும் பிறகு கடுமையாக விமர்சித்தவர் என்றும் பேசினார். பழைய நட்புக்காக கூட இரங்கள் அறிக்கை வெளியிடவில்லை.

வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்கள் பெரும் வேதனையில் ……..

தமுமுக சார்பில் பாபாவின் படுகொலையை கண்டித்து சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. தமுமுகவின் ஆர்ப்பாட்டத்திற்கு அப்போதுதான் பல தரப்பு மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

பாபாவின் உடல் அவரது சொந்த ஊரான புது ஆயக்குடிக்கு எடுத்து செல்லபபட்டது. பல்வேறு சமூகங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். தமுமுக சார்பில் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி, இந்திய தேசிய லீக் சார்பில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் நிஜாமுதீன் டாக்டர.ராமதாஸ், டாக்டர் சேப்பன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹாரூண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அவரது படுகொலையை கண்டித்து சென்னை புதுக்கல்லூரியில் படித்து கொண்டிருந்த நாங்கள் எங்கள் எதிர்ப்புகளை ஜனநாயக வழியில் வெளிப்படுத்தினோம்.

பாபாவும் – சீர்த்திருத்த சிந்தனைகளும்…

பாபாவை சலர் வன்முறையாளர் போன்றே ஆரம்பத்தில் பலர் பிரச்சாரம் செய்தார். அதற்கு அவரது சில பேச்சுகளை உதராணம் காட்டினர்.

1989&க்கு பின்னால் பேசிய அவரது உரைகள் எல்லா சமூகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவரும் தனது உரையின் போக்குகளை கால சூழலுக்கேற்ப மாற்றிக் கொண்டனர். குறிப்பாக அவர் மரணமடைவதற்கு சில வாரங்களுக்கு முன்னால் பேசிய மூன்று பேச்சுகள் முக்கியமானவை.

திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் பேசிய உரையில் இணைவைப்புக்கு (ஷிர்க்) எதிராக கடுமையாக பேசினார். ராமநாதபுரம் தேவிப்பட்டினத்தில் பேசிய உரையில் அழைப்புபணி (தாவா) குறித்த அக்கரையை வெளிப்படுத்தினார். நாகை மாவட்டம் திட்டச்சேரியில் பேசிய உரையில் வரதட்சனையை கண்டித்து பேசினார்.

இதுதான் அவரது கடைசி உரைகள். மூன்றுமே அவரது கடைசி கால என்ன ஓட்டங்களையம், ஈடுபாடுகளையும் உணர்த்துவதாக உள்ளன. ஒரு மனிதனின் கடைசிகால வாழ்க்கையின் நகர்வுகள்தான் அவரை சரியாக தீர்மானிக்க உதவுகின்றன.

அவரை விமர்ச்சிப்பவர்கள் இதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

பாபாவும் – சமூக நல்லிணக்கமும்

பாபா, உயர்சாதி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் இடையே வலுவான உறவையும், கூட்டணியையும் ஏற்படுத்த பாடுபட்டார்.

வன்னியர் சங்கம், நாடார் சங்கம், தேவர் பேரவை, யாதவர் சங்கம், கொங்குவேளாளர் பேரவை, உள்ளிட்ட பிற்படுப்பட்ட இயக்கங்களோடு உறவு பாராட்டினார். தலித் அமைப்புகளோடு அளவாளவினார்.

இது மதவெறி சக்திகளை தனிமைப்படுத்தி, சமூக நல்லிணக்கதையும், சமூக நீதியையும் காக்க உதவும் என நம்பினார். அவ்வாறே செயல்பட்டார். பல இடங்களில் மதக் கலவரங்கள் ஓய இது உதவியது.

பா.ஜ.க தலைவராக இருந்த முரளி மனோகர் ஜோஷி ஏக்தா (ஒற்றுமை) யாத்திரை என்ற பெயரில் குமரி முதல் காஷ்மீர் வரை ஊர்வலம் நடத்தினார்.

அப்போது அதைக் கண்டித்து ஜிஹாத்கமிட்டியும், நாடார் சங்கமும் இணைந்து சுவரொட்டி ஒட்டினர். நாடர்கள் நிறைந்த& மத வெறி சக்திகள் வலுவான குமரி மாவட்டத்தில் இது ஒரு பரபரப்பை & ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இது பாபாவின் முயற்சிக்கு கிடைத்த ஒரு வெற்றி எனலாம்.

அதுபோல் வட மாவட்டங்களில் எதிரும்&புதிருமாக இருந்த டாக்டர் ராமதாசையும் & திருமாவளவனையும் பாண்டிச்சேரியில் தனது மேடையில் ஒன்றாக அமர வைத்தார்.

தென் தமிழகத்தில் டாக்டர் கிருஷ்ண சாமியுடனும், சமீபத்தில் கொல்லப்பட்ட பசுபதி பாண்டியனோடும் நெருக்கமா இருந்து அம்மக்களின் மேம்பாட்டிற்காக குரல் கொடுத்தார்.

தமிழ் தேசிய தலைவர்களான பழ.நெடுமாறன், சுப.வீ., தோழர்.தியாகு என பலரோடும் நட்போடு இருந்தார்.

தமிழ்நாடு விடுதலைப் படையை உருவாக்கிய தமிழரசன், பொன்பரப்பியில் கொல்லப்பட்டபோது அதை பகிரங்கமாக கண்டித்தார். இருவரும் சிறைத் தோழர்களாக இருந்தவர்கள்.

பாபாவின் மொழிப்பற்றையும், தமிழ் தேசிய சிந்தனைகளையும் இப்போது மெச்சுகிறார் தோழர் சீமான். பெரிய தலைவர்களோடு அவரது உறவு இயல்பானதாக இருந்தது.

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த பாபா, புலிகள் முஸ்லிம்கள் மீது நடத்திய வன்முறைகளை கண்டித்து, புலிகளை எதிர்த்தும் முழங்கினார்.

முக்குலமுரசு, அல் முஜாஹித், புனித் பேராளி போன்ற வார இதழ்களை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தார்.

பாபா பைபிள் குறித்து எழுதிய நாவலும் இந்துஸ்தானத்திற்கு ஆபத்தா? என்ற ராமகோபால ஐயருக்கு எழுதிய மறுப்பு நூல் புகழ்பெற்றவை.

‘கர்பலா’ குறித்து அவர் ஆற்றிய உருக்கமான காவிய உரை புகழ்பெற்றது அதன் ஆதார தகவல்கள் குறித்து எனக்கு அதில் பல மறுக்கப்பட்ட கருத்துகள் இருந்ததாலும்; அவர் கையாண்ட சொல்லாடல்கள் கவனத்திற்குரியவை.

பாபாவும், சமுதாயமும்…

அவர் முஸ்லிம் லீக் தலைவராக இருந்த அப்துல் சமதுவை கடுமையாக விமர்சித்தார். அதே நேரம் 1991ல் பாமக கூட்டணியில் முஸ்லிம் லீக் இணைந்த போது அதை வரவேற்றார் பாபா இறந்த போது மணிச்சுடரில் சமது சாஹிப் எழுதிய கட்டுரை பலராலும் பாராட்டப் பெற்றது.

அதுபோல் அப்துல் லத்தீப் சாஹிப் அவர்களை விமர்சித்தார். ஒரு முறை ஆப்ரேசனுக்காக மருத்துவமனையில் சேர்த்தார் லத்தீப் சாஹிப் உடனே ஓடிச் சென்று அவரை பார்த்தார் பாபா.

பாஷா, மதனி போன்றோரோடு அவருக்கு நட்பு இருந்தது. பாம்பே, ஹாஜி மஸ்தானோடும் நெருக்கமாக இருந்தார்.

காங்கிரஸ் கட்சியை ஹாரூண் விறி பாபாவின் மீது அனுதாபம கொண்டார்.  பாமகவில் இருந்தபோது எனக்கு பல வகையிலும் பாபா அவர்கள் ஆதரவளித்தாக கூறுகிறார் குணங்குடி ஹனீபா.

வேறுபட்டவர்களோடும், மாறுபட்டவர்களோடும் நட்பை பேணினார் பாபா.

தேவிப்பட்டினம் மற்றும் தொண்டியில் தமுமுகவை பற்றி விமர்சித்தார். அது அப்போது தமுமுகவில் இருந்து குறிப்பிட்ட ஒரு தலைவருக்கும், அவருக்கும் இடையே இருந்த வருத்தங்களும், கோபங்களுமே தவிர; வோறொன்றுமில்லை.

அதே நேரம் தமுமுகவின் செயல்பாடுகளை பாபா விமர்சிக்கவில்லை. அதன் முக்கிய தலைவர்களான ஜவாஹிருல்லாஹ், ஹைதர்அலி ஆகியோரை அவர் தாக்கியதில்லை.

அவர் கடைசியாக பேட்டிக் கொடுத்தது தமுமுக சார்பில் அப்போது வெளியான ஒரு வார இதழுக்குதான். அவரை பேட்டிக் கண்டவர் காரைக்காலைச் சேர்ந்த சலீம்.

விதி என்ன தெரியுமா? அவரது பேட்டி வெளியான போது, அவரது மரணச் செய்தியும் சேர்ந்து வெளியானது.

பாபாவுக்காக பிரார்த்திக்கிறோம்….

சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் முப்பை போன்ற நகரங்களிலும் பாபா பேசியிருக்கிறார்.

பாபா சிறந்த பேச்சாளர். வசீகர எழுத்தாளர். அவர் தகுதியான இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்காமல் போனதும்,ஜிஹாத் கமிட்டியை நிர்வாக நீதியாக வலிமைப்படுத்தாமல் போனதும் அவரது மிகப் பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.

ஆயினும், பாபாவின் உரைகள் இப்போதும் CDகள் வழியாக பரப்புரையாற்றுகின்றன. பலருக்கு வாகனங்களில் பாபாவின் சிஞி&கல் தான் பயணத்துணையாக அமைகின்றன. அவரது வீடியோ உரைகள் இணைய தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

ஒரு மனிதர் இறந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு அவரது செல்வாக்கு எப்படி உள்ளது? என்பதை பார்த்த பிறகே அவரது சமூக பங்களிப்பின் வலிமையை புரிய முடியும்.

எதிர்வரும் ஜனவரி 28, 2012 தேதியுடன் பாபா ஷஹீதாகி 15 வருடங்கள் நிறைவுகிறது.

ஆயினும் பாபாவின் தாக்கம் குறையவில்லை. அவர் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களை இறைவன் மன்னித்து; அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் அழகிய சுவர்க்கத்தில் இடமளிக்க வல்லோனை பிரார்த்திப்போம்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s