கார் பராமரிப்பு மற்றும் மைலேஜ் டிப்ஸ்


ங்களின் கனவு கார் கைக்கு வந்துவிட்டதா? வாழ்த்துக்கள்! கார் வாங்கும்போது, அதற்காக நாம் எவ்வளவு நேரம் செலவழித்தோமோ, அதில் கொஞ்ச நேரம் கார் பராமரிப்புக்காகத் தினமும் செலவழித்தால்தான் காரினால் ஏற்படக் கூடிய சுகங்களை முழுமையாக அனுபவிக்க முடியும். நடு வழியில் பிரேக் டவுன் ஆகி திண்டாடுவது, லிட்டருக்கு வெறும் 8 கி.மீ மைலேஜ் கிடைத்து விழி பிதுங்கி நிற்பது, அடிக்கடி ஸ்டார்ட்டிங் பிரச்னையால் திக்குமுக்காடுவது என சிலருக்கு காரால் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டே இருக்கும். இதெல்லாம் காரால் வரும் பிரச்னைகள் என்பதைவிட, காரை அவ்வப்போது கவனிக்காமல் விட்டதால் ஏற்படும் பிரச்னைகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

 

 

காரின் பராமரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தினால், கணிசமான பணத்தை மிச்சம் செய்ய முடியும் என்பதோடு, கசப்பான அனுபவங்களில் இருந்தும் தப்பிக்கலாம்! 

 

உங்கள் காருக்கு நீங்கள்தான் டாக்டர். காரைப் பளிச்சென்று வைத்திருப்பது மட்டுமல்ல… காருக்கு சின்னச் சின்னப் பிரச்னைகள் என்றால், அதை உடனடியாக நீங்களே களைந்து, சர்வீஸ் சென்டரிடம் இருந்து ‘பெரிய பில்’ வராமல் தடுக்க முடியும். உங்கள் காரைச் சரியாகப் பராமரிக்க ஒரு ஞாயிற்றுக்கிழமை போதும்! ஒவ்வொரு வாரமும் இரண்டு மணி நேரம் செலவழித்தால், உங்கள் கார் எப்போதும் புத்தம் புதுசாக ஜொலிக்கும்!

 

கார் பராமரிப்புக்கு என்று குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் ஒதுக்குங்கள். அதை எக்காரணம் கொண்டும் வேறு எதற்காகவும் செலவு செய்யாதீர்கள். அப்போதுதான் சர்வீஸ் பில்லைப் பார்க்கும்போது, ‘இவ்வளவு பணம் கட்டணுமா?’ என்று ஷாக் ஆக மாட்டீர்கள்.

 

காரைக் கையாள்வதற்கு முன், அதன் உரிமையாளர் கையேட்டினை (யூசர் மேனுவல்) முழுவதும் படியுங்கள்.

 

எப்போதுமே குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்கில் மட்டுமே பெட்ரோல் நிரப்புவது நல்லது. என்ன பெட்ரோல் உங்கள் காருக்குச் சரியாக இருக்கும் என்று யூசர் மேனுவலிலேயே இருக்கும்.அதற்கேற்றபடியான பெட்ரோல் நிரப்புங்கள். விலை உயர்ந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதைவிட, தரமான பெட்ரோல் பங்க்கில் தொடர்ந்து பெட்ரோலை நிரப்புவதே மேல்! விலை அதிகமான பெட்ரோலை உபயோகப்படுத்துவதால், காரின் மைலேஜ் அதிகரித்துவிடாது. பர்ஸின் கனம்தான் குறையும்.

 

பெட்ரோல் நிரப்பிவிட்டு, மூடியை பங்க் ஊழியர் சரியாக மூடுகிறாரா என்று செக் செய்யுங்கள். மூடி சரியாக மூடவில்லை என்றால், பெட்ரோல் ஆவியாக வெளியேறிவிடும். அதனால் எப்போதுமே பெட்ரோல் மூடி டைட்டாக மூடப்பட்டிருக்கிறதா என்று செக் செய்யுங்கள்.

 

முடிந்தவரை காரை எப்போதுமே நிழலில் நிறுத்துங்கள். காரை வெயிலில் நிறுத்துவதால், காரின் கேபின் சூடாகி… சீட் கவர் துவங்கி பிளாஸ்டிக் கவர் வரை சீக்கிரத்திலேயே பழசாகிவிடும்.

 

அனைத்து கார்களிலுமே, ஒரு குறிப்பிட்ட கி.மீக்கு மேல் ஆயில், ஏர் ஃபில்டர், பிரேக் பேட் போன்றவற்றை மாற்ற வேண்டும் என்பது கட்டாயம்.

 

எப்போதுமே அலெர்ட்டாக இருங்கள். காருக்குள் ஏதாவது தேவையில்லாத சத்தம் வருகிறதா? அல்லது ஏதாவது ஒயர்கள் எரிவது போன்ற வாசனை வருகிறதா என்று கவனியுங்கள். இது போன்ற பிரச்னைகள் ஏதாவது இருப்பின், உடனடியாக சர்வீஸ் சென்டரை அணுகுங்கள். காரில் மியூசிக் சிஸ்டம் அல்லது வேறு எலெக்ட்ரிக்கல் விஷயங்கள் எதையாவது நீங்கள் வெளி மெக்கானிக்குகளை வைத்து மாட்டினால், தரமான ஒயர்களைப் பயன்படுத்தச் சொல்லுங்கள்.

 

இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, உங்கள் நண்பர்கள் அல்லது உங்கள் உறவினர்கள் யாரிடமாவது காரைக் கொடுத்து ஓட்டிப் பார்க்கச் சொல்லுங்கள். அப்போதுதான் உங்கள் காரில் நீங்கள் உணராத பிரச்னைகள் ஏதாவது இருக்கிறதா என்பது தெரிய வரும்!

 

ஹெட் லைட்டுகள் ஒழுங்காக ஒளிர்கின்றனவா என்று பாருங்கள். ஹெட் லைட் ஒளிரவில்லை என்றால், நீங்களே ஃப்யூஸ் போன பல்பை அகற்றிவிட்டு, புதியதைப் பொருத்திவிட முடியும். விண்ட் ஸ்கிரீன் வாஷர், பவர் ஸ்டீயரிங் ஆயில், கூலன்ட், பிரேக் ஆயில் ஆகியவை சரியான அளவு இருக்கிறதா என்று தவறாது செக் செய்யுங்கள். எச்சரிக்கை விளக்குகள் ஒளிரும் வரை காத்திருக்க வேண்டாம்.

 

வைப்பர் பிளேடுகள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். அதை தினமும் சுத்தப்படுத்துங்கள். இல்லையென்றால், அவை விண்ட் ஸ்கிரீனில் கோடுகள் போட்டு பர்ஸைப் பதம் பார்த்துவிடும். வாஷர் ஜெட்டுகள், சரியாக கண்ணாடியில்தான் தெளிக்கிறதா என்று கவனிக்கவும். இல்லையென்றால், அதை அட்ஜஸ்ட் செய்யுங்கள்.

 

இன்ஜின் பராமரிப்பு…

 

இப்போது வரும் நவீன கார்களின் இன்ஜின், முழுக்க முழுக்க எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் மூலம் இயக்கப்படுகிறது. அதனால், ட்யூனிங்… இன்ஜின் சார்ந்த விஷயங்களை நாமே செய்ய முடியாது. எனவே, இன்ஜினில் எந்தவிதமான பிரச்னைகளும் ஏற்படாமல், காரை நல்ல முறையில் ஓட்ட வேண்டும். மேலும், இன்ஜினைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். வாரத்துக்கு ஒருமுறை பானெட்டைத் திறந்து இன்ஜின் மற்றும் அதன் பாகங்களை நன்றாகச் சுத்தம் செய்யுங்கள்.

 

வாகன உரிமையாளர் கையேட்டில் குறிப்பிட்டவாறு ஆயில் மற்றும் கூலன்ட்டை மாற்றவும்.

 

உங்கள் இன்ஜினில் பொருத்தப்பட்டுள்ள ஆயில் பம்ப், இன்ஜினில் உள்ள எல்லா பாகங்களுக்கும் ஆயிலைக் கொண்டு சேர்க்க சில பல விநாடிகள் ஆகும். எனவே, காரை ஸ்டார்ட் செய்தவுடன் 30 முதல் 60 விநாடிகள் வரை ஐடிலிங்கில் வைத்திருந்து, அதன் பிறகு ஓட்ட ஆரம்பியுங்கள். இதனால் இன்ஜின் பாகங்களின் தேய்மானம் குறையும். அதேபோல் இன்ஜினை ஆஃப் செய்வதற்கு முன்பும் 30 முதல் 60 விநாடிகள் ஐடிலிங்கில் விட்டு ஆஃப் செய்வது நல்லது!

 

சூடாக இருக்கும் இன்ஜினைச் சுற்றி எந்தச் சமயத்திலும் ஈரமான துணியை வைத்துத் துடைக்காதீர்கள். இதனால், விபத்துகள் நிகழ வாய்ப்புகள் அதிகம்.

 

சமதளத்தில் காரை நிறுத்தி இன்ஜின் ஆயில் சரியான அளவுக்கு இருக்கிறதா என்று செக் செய்யுங்கள். இதற்கு ‘டிப் ஸ்டிக்’கைப் பயன்படுத்துங்கள்.

 

ஆயில் மாற்றும்போது, ஆயில் ஃபில்டரையும் சேர்த்து மாற்றிவிடுங்கள். இதனால், இன்ஜின் ஸ்மூத்தாகச் செயல்படும். இல்லையென்றால், ஃபில்டரில் தங்கி இருக்கும் பிசிறுகளால் இன்ஜின் கெட்டுப்போகும் சூழ்நிலை ஏற்படும். பிக்-அப் சரியாக இல்லை என்றாலோ, மைலேஜ் குறைந்தாலோ, சைலன்சர் வழியாக ஆயில் ஒழுகினாலோ, ஏர்ஃபில்டர் மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது என்று புரிந்துகொள்ளுங்கள்.

 

இன்ஜினில் பிரச்னைகள் வருவதற்கு முக்கியக் காரணம் ஓவர்ஹீட்! கூலன்ட் சரியான அளவு இல்லையென்றாலும், ரேடியேட்டரின் முன்பகுதியில் காற்று புகாமல் அடைத்திருந்தாலும் இன்ஜின் ஓவர்ஹீட் ஆகும்.

 

இன்ஜின் ஓவர்ஹீட் ஆனால், டேஷ்போர்டில் இருக்கும் டெம்ப்ரேச்சர் முள் எப்போதும் இல்லாத அளவுக்குக் கூடுதலாகும். ரேடியேட்டர் எலெக்ட்ரிக் மோட்டார் ஓடிக்கொண்டே இருந்தாலோ, கூலன்ட் ஒழுகினாலோ… உடனடியாக காரை சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு செல்லுங்கள்.

 

பேட்டரி சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். பேட்டரியின் ஆயுள் குறைந்தாலோ, ஒயர்கள் துண்டிக்கப்பட்டு இருந்தாலோ பேட்டரியைச் சரி பாருங்கள். டிஸ்டில்டு வாட்டர் அளவைக் கவனித்து அதை நிரப்புங்கள். கேபிள், விளக்குகள் ஏதாவது பழுதாகி இருந்தால் மாற்றி விடுங்கள். பேட்டரியில் லீக் இருந்தால், பேட்டரியையே மாற்றுங்கள்.

 

கியர் பாக்ஸ்

 

கியர் பாக்ஸ் மிக மிக முக்கியமான பாகம். டிரான்ஸ்மிஷன் ஆயில் சரியான அளவு இருக்கிறதா என்று பாருங்கள். கிளட்ச், கியர் ஷிஃப்ட் ஆகியவற்றை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

 

ஏ.ஸி

 

கார் ஏ.ஸியை ரெகுலராகக் கவனிக்க வேண்டும். காரில் இருந்து சரியான அளவுக்குக் குளிர்ந்த காற்று வரவில்லை என்றால், உடனடியாக அதைச் சரி செய்யச் சொல்லுங்கள். ஏ.ஸி காற்று ஒழுங்காக வராததற்கு கேஸ் லீக், பெல்ட் டென்ஷன், கம்ப்ரஸர் லீக் ஆகியவை காரணமாக இருக்கலாம்.

 

பிரேக்

 

மிகவும் சாஃப்ட்டான பிரேக் பெடல், பிரேக் லைட் எரியாமல் போவது, பிரேக்கில் இருந்து விதவிதமான சத்தங்கள் எழும்புவது… இதெல்லாம் பிரேக்கில் பிரச்னை இருக்கிறது என்பதற்கான அடையாளங்கள். பிரேக்கின் பாகங்களை மாற்றியோ… அல்லது பிரேக் ஆயிலை மாற்றியோ இந்தப் பிரச்னைகளைச் சரி செய்துவிட முடியும். ‘இப்போதுதானே பிரேக் ஷூ மாற்றினோம்’ என்று நினைக்கக் கூடாது. பிரேக் ஷூ, பிரேக் பேட் ஆகியவை விரைவில் தேயும் தன்மை கொண்டவை. அதனால் சத்தம் கேட்க ஆரம்பித்தவுடனே மாற்றிவிடுவது நல்லது.

 

 

உள்ளே…

 

காருக்குள் இருக்கும் தூசு, மண், குப்பைகளைச் சுத்தம் செய்யுங்கள்! தேவையில்லாத பேப்பர், டோல் டிக்கெட், சிடி என அனைத்தையும் வெளியே எடுங்கள். இப்போது காரின் உள்பக்கம் எந்த நிலையில் இருக்கிறது என்று பாருங்கள். வெறும் தூசு மட்டும்தானா அல்லது அழுக்குக் கறை, துரு ஆகியவை படிந்து மோசமான நிலையில் இருக்கிறதா என்று பாருங்கள்.

 

கார் வைத்திருக்கும் பல குடும்பங்களுக்கு… கார்தான் சிப்ஸ், சிடி, டிஃபன் பாக்ஸ் போன்ற பொருட்களை வைத்துக்கொள்ளும் இடம்! உணவுப் பொருட்கள் மற்றும் தேவையில்லாத பொருட்களை வைக்கும்போது, காருக்குள் தேவையில்லாத அழுக்குகள் சேர்ந்து விடும் என்பதோடு, காருக்குள் கெட்ட வாசனை அடிக்க ஆரம்பித்துவிடும்.

 

வெளியே…

 

கார் பராமரிப்பில் மிகவும் முக்கியமான, சுலபமான விஷயம்… கார் வாஷிங்தான்! காரைத் துடைத்துச் சுத்தமாக வைப்பதுதான் அடிப்படைப் பராமரிப்பு! வாரம் ஒருமுறை காரை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்யுங்கள்.

 

 

எப்போதுமே காரை நிழலான இடத்தில் வைத்துச் சுத்தம் செய்யுங்கள். காட்டன் டவல்களையே காரைத் துடைப்பதற்குப் பயன்படுத்துங்கள். காரின் உள்ளலங்காரத்தைக் குலைத்து விடாத வகையில், தரமான பாலீஷ் பயன்படுத்துவது அவசியம். உதாரணத்துக்கு, லெதர் சீட்டை பிளாஸ்டிக் பாலீஷ் கொண்டு சுத்தம் செய்தால் காரியமே கெட்டு விடும்!

 

முதலில் சாஃப்ட் வேக்யூமை வைத்து டேஷ் போர்டு, சென்டர் கன்ஸோல், ஏ.ஸி வென்ட், மீட்டர் டயல்களைச் சுத்தம் செய்யுங்கள். அடுத்ததாக, காரின் மேற்கூரையைச் சுத்தம் செய்யுங்கள். வேக்யூமை வைத்துச் சுத்தம் செய்தபிறகு கொஞ்சம் நனைத்த காட்டன் டவலை வைத்து டேஷ் போர்டு, சென்டர் கன்சோல் அனைத்தையும் துடைத்தெடுங்கள். கப் ஹோல்டர், சீட்டுக்கு அடியில் பெரிய வேக்யூமை வைத்து காரை முழுவதுமாகச் சுத்தப்படுத்துங்கள்.

 

ஜாம், சாஸ் போன்ற கறைகள் சீட்டில் படிந்துவிட்டால், எலுமிச்சைச் சாறில் உப்பைக் கலந்து தடவுங்கள். கறைகள் காணாமல் போய்விடும்!

 

 

காரின் பர்ஃபாமென்ஸுக்கு மிக மிக முக்கியமான விஷயம் டயர்! காரின் எடையைத் தாங்குவதோடு, மேடு பள்ளங்களில் குதித்து எழும்புவதும் டயர்களின் முக்கியமான வேலை. டயரில் பிரச்னை என்றாலும், அது இன்ஜினில் எதிரொலிக்கும். டயருக்கும், இன்ஜினுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்டால், டயர்களும் இன்ஜினும் இணைந்து இயங்கினால் தான் கார் சீராக இயங்கும்.

 

டயரை மாற்றுங்கள்: 8,000 கி.மீக்கு ஒருமுறை முன் வீல்களைப் பின் பக்கத்திலும், பின் வீல்களை முன் பக்கத்திலும் மாற்றிப் பொருத்த வேண்டும். முன் வீல்கள் சீக்கிரத்தில் தேயும். இதுபோல் மாற்றிப் பொருத்தினால், டயர்களின் ஆயுள் நீடிக்கும்!

 

டயர் பிரஷர்: வாரத்துக்கு ஒருமுறை டயரில் காற்றின் அளவு சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். காற்றின் அளவு சரியாக இல்லையென்றால், மைலேஜ், கையாளுமை மற்றும் பயண சொகுசில் சிக்கல்கள் வரும்! வேகமாகப் போகும்போது கையில் அதிர்வுகள் அதிகமாகத் தெரிந்தால், டயர்களில் காற்று குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.

 

ஓவர் வெயிட்: காருக்குள் தேவையான பொருட்களை மட்டுமே வைத்திருங்கள். தேவையில்லாத பொருட்களைப் போட்டு வைக்கும் குடோனாக காரைப் பயன்படுத்தாதீர்கள். காரின் எடை கூடக் கூட, ஓடும் காரின் டயர்கள் ஓவர் ஹீட் ஆகும். அதனால், டயர்கள் சீக்கிரத்தில் பழுதடைந்து, மைலேஜும் குறையும்.

 

ஸ்பீடு: ஓவர் ஸ்பீடும் டயர்களின் ஆயுளைப் பாதிக்கும். ஒரு குறிப்பிட்ட வேகத்தைத்தான் டயர்கள் தாக்குப் பிடிக்கும். அதிகப்படியான வேகத்தால் டயர்கள் ஓவர் ஹீட்டாகி வெடிக்கும் ஆபத்து இருக்கிறது.

 

காரை சர்வீஸ் செய்யக் கொண்டு போகும் முன், அதன் ஓனர்ஸ் மேனுவலை நன்றாகப் படியுங்கள். ஓனர்ஸ் மேனுவல், காரைத் தயாரித்த இன்ஜினீயர், டெக்னீஷியன்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும், எல்லோரும் புரிந்து கொள்ளும்படி இதில் டெக்னிக்கல் விஷயங்களைச் சுலபமாகவே விளக்கி இருப்பார்கள். அதனால், இதைப் படிப்பது சுலபமே!

 

காரை சர்வீஸ் செய்ய, நீங்களே சர்வீஸ் சென்டருக்கு காரைக் கொண்டு செல்லுங்கள்! அப்போது தான் காரில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை சர்வீஸ் அட்வைஸர்களிடம் சரியாகச் சொல்ல முடியும்! ஓனர்ஸ் மேனுவலை நீங்கள் ஒருமுறை படித்துவிட்டுப் போகும்போது, என்னென்ன விஷயங்களை மாற்ற வேண்டும்; எவற்றையெல்லாம் மாற்றத் தேவையில்லை என்பது உங்களுக்கே தெளிவாகப் புரிந்து விடும்.

 

உதாரணத்துக்கு, 20,000 கி.மீ.யில் மாற்றப்பட வேண்டிய கியர் பாக்ஸ் ஆயிலை, சர்வீஸ் அட்வைஸர் 10,000 கி.மீ.யிலேயே மாற்றச் சொன்னால், அவரை நம்பி பிரயோஜனம் இல்லை என்பதை நீங்கள் கண்டுபிடித்துவிடலாம்.

 

 

ஸ்பார்க் ப்ளக்கை மாற்றுவது எப்படி?

 

பெட்ரோல் இன்ஜினில் மட்டும்தான் ஸ்பார்க் ப்ளக்குகள் இருக்கும். டீசல் கார்களில் இருக்காது. ஸ்பார்க் ப்ளக்கினுள் தூசு, அழுக்குகள் சேர்ந்தாலோ, தனது ஆயுளின் இறுதிக் கட்டத்தில் இருந்தாலோ, கார் ஒழுங்காக ஸ்டார்ட் ஆகாமல் மிஸ் ஃபயர் ஆகும். அதனால், மைலேஜும் குறையும்; அதிகப்படியான புகையும் வெளியேறும். 15,000- 20,000 கி.மீ.யில் ஸ்பார்க் ப்ளக்குகளை மாற்றிவிடுவது நல்லது!

 

4 சிலிண்டர்கள் கொண்ட இன்ஜின் என்றால், நான்கு ஸ்பார்க் ப்ளக்குகள் இருக்கும். ஸ்பார்க் ப்ளக்கை அகற்றி விட்டு, நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். இதனால், அழுக்குகள் எதுவும் இன்ஜின் சிலிண்டருக்குள் நுழையாது.

 

 

பழுப்பு நிறம் படிந்த ஸ்பார்க் பிளக்குகள் என்றால், பிரச்னை இல்லை என்று அர்த்தம். அதுவே ஆயில் அதிகமாகப் படிந்தது என்றால், பிஸ்டனில் இருக்கும் ஆயில் கன்ட்ரோல் ரிங்ஸில் ஏதோ பிரச்னை என்று அர்த்தம். உடனடியாக இதை சர்வீஸ் சென்டரில் கொடுத்துச் சரி செய்யச் சொல்லுங்கள். ஸ்பார்க் ப்ளக் அதிக அழுக்காக இருந்தாலோ, கீறல் இருந்தாலோ உடனடியாக அதை மாற்றி விடுவது நல்லது.

 

நீங்கள் புதிதாக வாங்கிப் பொருத்தும் ஸ்பார்க் ப்ளக்கின் அளவு, பழைய ஸ்பார்க் ப்ளக்கோடு பொருந்தி இருக்கிறதா என்று ஒருமுறை செக் செய்து கொள்ளுங்கள். மீண்டும் ஸ்பார்க் ப்ளக்கை அதற்குரிய டூல்ஸ் கொண்டு மேனுவலில் குறிப்பிட்டுள்ளது போலத் திருகுங்கள்.

 

ஆயில் மாற்றுவது எப்படி?

 

எரிபொருள் – கார் இயங்குவதற்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் இன்ஜின் ஸ்மூத்தாக இயங்குவதற்கு இன்ஜின் ஆயில் மிக மிக முக்கியம்! அதனால், மேனுவலில் சொல்லி இருப்பதைப்போல, குறிப்பிட்ட கி.மீ.க்கு ஒருமுறை இன்ஜின் ஆயிலை மாற்ற மறக்காதீர்கள். முதலில் டேங்கினுள் இருக்கும் ஆயிலை வெளியேற்றுவதற்காக, காரை ஸ்டார்ட் செய்து இன்ஜினைச் சூடாக்குங்கள். இதன் மூலம் ஆயில் சூடேறி இளகிவிடும். இதனால், ஆயிலை வெளியேற்றுவது சுலபம். இன்ஜினை ஆஃப் செய்து, ஆக்ஸில் ஸ்டாண்டில் நிறுத்தி வைத்துவிட்டு, ‘ட்ரைன் நட்’டை அகற்றி ஆயிலை வெளியேற்றுங்கள். ஆயில் ஃபில்டரை, ‘ஆயில் ஃபில்டர் ரிமூவர்’ வைத்து அகற்றுங்கள்.

 

புதிய ஆயில், சரியான எடை மற்றும் விஸ்காஸிட்டி கொண்டதுதானா என்று செக் செய்துகொள்ளுங்கள். கொஞ்சம் ஆயிலை ஃபில்டர் சீலின் மீது தடவுங்கள். ஓனர்ஸ் மேனுவலில் எந்த அளவுக்கு ஆயில் நிரப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆயிலை நிரப்புங்கள்.

 

இன்ஜின் டிப் ஸ்டிக்கை எடுத்து, எவ்வளவு ஆயில் இருக்கிறது என்பதை செக் செய்து கொள்ளுங்கள். சரியான அளவு வரும் வரை ஆயிலை நிரப்புங்கள்.

 

பேட்டரியை மாற்றுவது எப்படி?

 

கார் பேட்டரியை மாற்றுவது சுலபமான விஷயம் அல்ல. ஆனால், எளிமையான வழிகளைப் பின்பற்றினால், சுலபமாக பேட்டரியை மாற்ற முடியும்.

 

முதலில், நெகட்டீவ் அதாவது மைனஸ் குறியுடன் இணைக்கப்பட்டுள்ள கேபிளின் இணைப்பை அகற்றுங்கள். அதேபோல், ப்ளஸ் குறியுடன் இணைக்கப்பட்டுள்ள சிவப்பு நிற கேபிளையும் அகற்றுங்கள்.

 

இப்போது பேட்டரியை வெளியே எடுக்கலாம். பேட்டரி கனமாக இருப்பதால் வெளியே எடுக்கும்போது கவனம் தேவை.

 

 

பேட்டரி வைத்திருந்த இடம் அழுக்காக இருந்தால், அதை நன்றாகச் சுத்தப்படுத்துங்கள்.

 

புதிய பேட்டரியை ஏற்கெனவே பேட்டரி இருந்த இடத்தில் வைத்துவிட்டு, டெர்மினல்களில் பெட்ரோலியம் ஜெல்லி தடவி, ப்ளஸ் கேபிளையும், மைனஸ் கேபிளையும் பேட்டரி டெர்மினலில் இணையுங்கள்.

 

அவசர காலத்தில் என்ன செய்ய வேண்டும்?

 

பிரேக் டவுன் ஆனால்…

 

சாலையில் சென்று கொண்டு இருக்கும்போது, திடீரென கார் பிரேக் டவுனாகி நின்றுவிட்டால், காரை ஓரமாக நிறுத்தி ‘வார்னிங் லைட்ஸ்’-ஐ ஒளிரவிடுங்கள். காருக்குள் இருப்பவர்களை சாலையின் ஓரத்தில் பாதுகாப்பான இடத்தில் நிற்க வைத்து விட்டு, கார் தயாரிப்பாளரின் எமர்ஜென்சி சர்வீஸுக்கு போன் செய்யுங்கள்!

 

டயர் வெடித்தால்…

 

காரில் போய்க் கொண்டு இருக்கும் போது, திடீரென டயர் வெடித்தாலோ அல்லது பஞ்சரானாலோ, உங்கள் கார் பஞ்சரான டயரை நோக்கித் திரும்பும். அதாவது முன் வீல் வலது பக்க டயர் பஞ்சரானால், கார் வலது பக்கமாகத் திரும்பும். பின் வீல் பஞ்சரானால் உடனடியாக அலைபாய ஆரம்பித்து விடும். அந்த நேரத்தில், காரின் ஸ்டீயரிங்கை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். கார் திரும்புகிறதே என்பதற்காக நீங்கள் ஸ்டீயரிங்கை எதிர் திசையில் திருப்பாதீர்கள். ஆக்ஸிலரேட்டரில் இருந்து உடனடியாக காலை எடுத்து விடுங்கள். காரின் கன்ட்ரோல் உங்கள் கைக்கு வந்து விட்டதென்றால், மெதுவாக பிரேக்கை அழுத்துங்கள். அப்படியே சாலையின் ஓரத்துக்கு வந்து, காரைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்துங்கள். எச்சரிக்கை விளக்குகளை ஒளிரவிட்டு, மற்ற வாகனங்களுக்கு சிக்னல் செய்யுங்கள்!

 

ஆக்ஸிலரேட்டர் மாட்டிக் கொண்டால்…

 

ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து நீங்கள் காலை எடுத்த பிறகும் கார் அதே வேகத்தில் சென்றாலோ, அல்லது இன்னும் வேகமாகச் சென்றாலோ ஆக்ஸிலரேட்டர் பெடல் ஸ்டக் ஆகிவிட்டது என்று அர்த்தம். கிளட்ச்சை அழுத்தி கியர்களை படிப்படியாகக் குறையுங்கள். ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார் என்றால், கியரை நியூட்ரலுக்குக் கொண்டு வாருங்கள். வீல்களை லாக் செய்யாமல், பிரேக்கை நன்றாக அழுத்துங்கள். அப்படியே சாலையின் ஓரத்துக்கு வந்து விடுங்கள். காரை நிறுத்திய பிறகு இன்ஜினை ஆஃப் செய்யுங்கள்.

 

திடீரென பிரேக் பிடிக்காமல் போனால்…

 

மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட காராக இருந்தாலும் சரி, ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட காராக இருந்தாலும் சரி… படிப்படியாக கியரைக் குறையுங்கள். ஃபர்ஸ்ட் கியரில், காரை குறைந்த வேகத்துக்குக் கொண்டு வாருங்கள். மெதுவாக ஹேண்ட் பிரேக்கைப் பிடியுங்கள். சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்ய ஹாரன் அல்லது எச்சரிக்கை விளக்குகளைப் போட்டுக் காண்பித்து, சாலையின் ஓரத்துக்கு வந்து விடுங்கள்.

 

உங்கள் எதிரே வேகமாக இன்னொரு வாகனம் வந்தால்..

 

வீல் ஸ்கிட் ஆகாமல் பிரேக்கை நன்றாக அழுத்திக் கொண்டே ஹாரனையும், ஃப்ளாஷ் லைட்டையும் போட்டுக் காட்டுங்கள். எதிரே வரும் வாகனத்துக்கு எவ்வளவு இடம் கொடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு இடம் கொடுங்கள். எதிரே வரும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மிகவும் வேகமாக நெருங்கி வருகிறது என்றால், உடனடியாக சாலையின் இடது ஓரத்துக்கு வந்துவிடுங்கள். சாலையைவிட்டு வெளியே வந்துவிட்டீர்கள் என்றால், மீண்டும் உடனடியாகச் சாலைக்கு வர முயற்சிக்காதீர்கள். ஸ்டீயரிங்கை க்ரிப்பாக பிடித்துக் கொண்டு, பின்னால் எந்த வாகனமும் வரவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்துகொண்ட பிறகு, மீண்டும் சாலைக்குள் செல்லுங்கள்.

 

கார், தீப்பிடித்து எரிந்தால்…

 

கார் தீப்பிடித்து எரிகிறது என்றால், 90 சதவிகிதம் எலெக்ட்ரிகல் ஒயர்களில் ஏற்படும் ஷார்ட் சர்க்யூட்தான் காரணமாக இருக்க முடியும். மெதுவாக காரை நிறுத்தி இன்ஜினை ஆஃப் செய்யுங்கள். உடனடியாக காரை விட்டு வெளியே வந்துவிடுங்கள். முடிந்தால், மற்றவர்களின் உதவியை நாடி, மண், நீர் பயன்படுத்தி தீயை அணைக்கப் பாருங்கள். கார் முழுவதுமாக எரிய ஆரம்பித்துவிட்டால் காரை விட்டு பல அடி தூரத்துக்கு வந்துவிடுங்கள். எரிபொருள் இருப்பதால், வெடிக்கும் அபாயமும் இருக்கிறது.

 

 

முதலில் பேட்டரி கனெக்ஷனைத் துண்டித்துவிடுங்கள்.

 

காருக்குள் இருந்து தேவையற்ற பொருட்களை எடுத்துவிடுங்கள். ஏனென்றால், தேவையற்ற பொருட்கள் காருக்குள் இருக்கும்போது சீட்டுகள் அழுக்காகவும், மெட்டல் பாகங்கள் துருப்பிடிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

 

சென்ட்ரல் லாக் சரியாக லாக் செய்யப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.

 

வைப்பர்களை கண்ணாடியுடன் ஒட்டாமல், தூக்கி நிறுத்திவிடுங்கள்.

 

கொஞ்சம் காற்றோட்டமான இடத்திலேயே காரை நிறுத்தி வையுங்கள்.

 

நீண்ட நாட்கள் கழித்து காரை எடுக்கும்போது…

 

டயரில் போதுமான காற்றை நிரப்புங்கள்.

 

ஆயில், சரியான அளவு இருக்கிறதா என்று பாருங்கள்.

 

பேட்டரியை சார்ஜ் செய்து மீண்டும் இணையுங்கள்.

 

மூன்று மாதங்கள் கழித்து காரை எடுக்கிறீர்கள் என்றால், சர்வீஸ் சென்டரில் ஒருமுறை கொடுத்து ஜெனரல் செக்-அப் செய்த பிறகே ஓட்டுவது நல்லது.

 

சின்னச் சின்ன பயணங்கள் வேண்டாம்!

 

10 நிமிடத்துக்கும் குறைவான பயணங்களைக் கூடுமானவரை தவிர்த்து விடுங்கள். இப்படிச் செய்யும்போது, இன்ஜின் முழுமையாக ஹீட் ஆகாது. இன்ஜின் கம்பஷனில் எரிபொருளும், காற்றும் கலந்து எரிந்து சக்தியாகக் கிடைக்கிறது. குறிப்பிட்ட வெப்பநிலைக்கு உயர்ந்த பிறகுதான் எரிபொருள் முழுமையாக எரியும். அதற்கு வெப்பம் தேவை. எரிபொருள் எரிந்து வெளியேறும்போது, புகையாக சைலன்சர் வழியாக வெளியேறும். ஆனால், குறைந்த தூரப் பயணங்கள் செய்யும்போது, எரிபொருள் சரியாக எரியாமல், இன்ஜின் மற்றும் எக்ஸாஸ்ட்டிலேயே தங்கிவிடும். அதனால், எளிதில் துருப்பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம். இன்ஜினுக்குள் தங்கிவிடும் எரிபொருள், ஆயிலின் தன்மையைக் குறைத்துவிடும்.

 

சிறிது தூரப் பயணங்களுக்கு காரை உபயோகப்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக ஜிம், மார்க்கெட் போன்ற இடங்களுக்கு காரில் போவதை விட டூவீலர் அல்லது நடந்து செல்வதே நல்லது. கார்களை நாம் அதிகப்படியாக உபயோகப் படுத்தும்போது சுற்றுச்சூழல் மாசு படுகிறது என்பதோடு,எரிபொருளும் வீணாகிக் கொண்டே இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

 

கார் துருப்பிடிக்காமல் பார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு!

 

கடற்கரை, காற்று புக முடியாத இடங்களில், காரை அதிக நாட்கள் நிற்க வைத்தால், துருப்பிடிக்க வாய்ப்புகள் அதிகம்.

 

வேகம் (15 சதவிகித சேமிப்பு)

 

குறைவான வேகத்தில் சென்றாலே எரிபொருளைச் சேமிக்க முடியும். மணிக்கு 70 கி.மீ வேகத்தில் செல்வதைவிட 50 கி.மீ வேகத்தில் சென்றால், எரிபொருள் செலவு குறையும்.

 

திட்டமிடுதல் (20 சதவிகித சேமிப்பு)

 

எந்த இடத்துக்குச் செல்கிறோமோ அதைத் திட்டமிட்டு, அங்கு செல்ல சுலபமான (கொஞ்சம் அதிக தூரம் என்றாலும் பரவாயில்லை) வழியைத் தேர்ந்தெடுத்துச் சென்றால், 20 சதவிகித எரிபொருளைச் சேமிக்க முடியும்.

 

கன்ட்ரோல் (18 சதவிகித சேமிப்பு)

 

அடிக்கடி பிரேக், கிளட்ச் ஆகியவற்றைப் பிடித்துக் கொண்டு ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

 

வெயிட் (15 சதவிகித சேமிப்பு)

 

காரில் எடையைக் கூட்டினால், எரிபொருள் வீணாகும். அதிக எடையுடன் காரிலோ, பைக்கிலோ செல்வதைத் தவிர்த்தால், எரிபொருளைச் சேமிக்க முடியும்.

 

ஏரோ டைனமிக்ஸ் (27 சதவிகித சேமிப்பு)

 

காரின் மேற்கூரையில் பொருட்கள் வைத்தால், அல்லது கதவுக் கண்ணாடிகளைத் திறந்து வைத்துச் சென்றால், காற்றினால் காரின் ஏரோ டைனமிக்ஸ் பாதிக்கப்படும். அதனால், இன்ஜின் வேகத்தை அதிகரிக்க வேண்டியது வரும். இதனால் எரிபொருள் வீணாகும்.

 

பராமரிப்பு  (8 சதவிகித சேமிப்பு)

 

வாகனத்தைச் சரியான இடைவெளியில் சர்வீஸ் செய்வதோடு, அடிக்கடி இன்ஜின் ஆயில் இருக்கிறதா? டயரில் காற்று இருக்கிறதா என்று ‘செக்’ செய்துவிட வேண்டும்.

 

எரிபொருள் (6 சதவிகித சேமிப்பு)

 

சரியான எரிபொருளைப் பார்த்து நிரப்ப வேண்டும். ஒரே வகையான பெட்ரோலை நிரப்புவதே நல்லது.

 

எலெக்ட்ரிக்கல்ஸ்  (10 சதவிகித சேமிப்பு)

 

ஏ.ஸியால் அதிக எரிபொருள் வீணாகும். அது தவிர, மியூஸிக் சிஸ்டம் முதல் வைப்பர் வரை மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்தும்போது, பேட்டரியின் ஆயுள் குறையும்.

 

ஐடிலிங்க்  (4 சதவிகித சேமிப்பு):

 

டிராஃபிக் சிக்னல்களிலோ அல்லது வேறு ஏதாவது இடங்களிலோ 30 விநாடிகளுக்கு மேல் ஒரே இடத்தில் நிற்க வேண்டி வந்தால், இன்ஜினை ஆஃப் செய்து விடுங்கள். ஆஃப் செய்துவிட்டு ‘ஆன்’ செய்யும்போது, அதிக பெட்ரோல் செலவாகாது.

 

கார் ஐடிலிங்கில் நிற்கும்போது, மணிக்கு ஒரு லிட்டர் எரிபொருள் வீணாவதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது!

 

 

‘நீங்கள் கொஞ்சம் பதற்றமாக காரை ஓட்டுகிறீர்கள்’ என்று உடன் இருப்பவர்கள் சொன்னால், அதை ஏற்றுக் கொள்ளுங்கள். யாராவது டிரைவிங்கைப் பற்றிக் குறை சொல்லும்போது, அதை மறுத்துப் பேசுபவர்கள்தான் மோசமான டிரைவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் டிரைவிங்கைத் தொடர்ந்து நீங்களே விமர்சனம் செய்யுங்கள்! மேம்பாலத்தில் ஓட்டும்போது, நான்கு முனைச் சந்திப்புகளில் திரும்பும்போது என எந்தெந்த இடங்களில் எப்படி ஓட்ட வேண்டும் என்பதை தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் முன்னால் போகும் வாகனத்துக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியாக இருக்க வேண்டும். ரேஸ் டிராக்கில் ஓட்டுவது போன்று முன்னால் செல்லும் வாகனத்தை முட்டிக்கொண்டே செல்லக் கூடாது. முன்னால் செல்லும் வாகனம் திடீரென பிரேக் பிடித்தால் சமாளிப்பது சிரமம். எக்காரணத்தைக் கொண்டும் செல்போன் பேசிக் கொண்டே காரையோ, பைக்கையோ ஓட்டாதீர்கள்!

 

 

லேன் மாறுதல்…

 

உங்களுக்கான லேனில் காரை ஓட்டுங்கள். லேன் மாறும்போது இண்டிகேட்டர் விளக்குகளை ஒளிரவிட்டபடி ஸ்டீயரிங்கைத் திருப்புங்கள். சாலையை சர்க்கஸ் மைதானமாகக் கருதி அந்த மூலைக்கும், இந்த மூலைக்கும் வாகனத்தை ஓட்டாதீர்கள். சாலையில் வேறு யாராவது இப்படி டிரைவ் செய்தால், உடனடியாக அந்த வாகனத்தின் எண்ணை போக்குவரத்து காவல்துறைக்குத் தெரிவியுங்கள். நீங்களாகவே அந்த வாகன ஓட்டுநருடன் சண்டையில் இறங்காதீர்கள். நீங்கள் மெதுவாகத் தான் கார் ஓட்டுவீர்கள் என்றால், வேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு வலது பக்கம் வழி கொடுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் வாகனத்தின் இடது பக்கமாகச் சென்று ஓவர்டேக் செய்யாதீர்கள். பக்கவாட்டுக் கண்ணாடிகளையும், ரியர் வியூ கண்ணாடியையும் சரியாக வைத்து, பின்னால் வரும் வாகனங்களைக் கவனமாகப் பாருங்கள். பின்னால் எந்த வாகனமும் வரவில்லை என்றால் மட்டுமே உடனடியாக லேன் மாறுவது, யூ-டர்ன் எடுப்பது போன்ற விஷயங்களைச் செய்ய வேண்டும்.

 

ஓவர்டேக்

 

சாலை விபத்துகள் நடப்பதற்கு முக்கியமான காரணம், முன்னால் செல்லும் வாகனங்களை ஓவர்டேக் செய்வதுதான். அதனால், ஓவர்டேக் செய்யும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். முதலில் எதிர் திசையில் வரும் வாகனங்களைக் கவனியுங்கள். உங்களுக்கு எதிர் திசையில் எந்த வாகனமும் வரவில்லை, முன்னால் செல்லும் வாகனத்தை ஓவர்டேக் செய்துவிட்டு, மீண்டும் உங்கள் பாதைக்கே திரும்ப முடியும் என்று முழு நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஓவர்டேக் செய்யவேண்டும். நீங்கள் ஓவர்டேக் செய்வதால் எதிரே வரும் வாகனத்துக்கும், முன்னால் செல்லும் வாகனத்துக்கும் பிரச்னை வரும் என்றால், ஓவர்டேக் செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். பாதசாரிகள் கடக்கும் இடம், ரயில்வே கிராஸிங், இணைப்புச் சாலைகள், மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் போன்ற இடங்களில் ஓவர்டேக் செய்யக் கூடாது. எக்காரணம் கொண்டும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், சைரன் ஒலியுடன் வரும் போலீஸ் வாகனங்கள் ஆகியவற்றை ஓவர்டேக் செய்யக் கூடாது! எப்போதுமே வலது பக்கமாகத்தான் ஓவர்டேக் செய்ய வேண்டும். இடது பக்கமாக ஓவர்டேக் செய்யக் கூடாது.

 

ஆறாவது அறிவை உபயோகப்படுத்துங்கள்!

 

கார் ஓட்டுவதற்கு மிக மிக அவசியமானது… முடிவெடுக்கும் திறன். சாலையில் செல்லும்போது உடனுக்குடன் முடிவுகளை எடுக்க வேண்டும். இடது பக்கம் திரும்பலாமா? வலது பக்கம் திரும்பலாமா? சினிமாவுக்குப் போகலாமா? பீச்சுக்குப் போகலமா என சாலையின் நடுவில் கார் ஓட்டிக்கொண்டே யோசிக்கக் கூடாது. டிராஃபிக், சாலையின் மேடு பள்ளங்கள், தட்ப வெப்பநிலை, சாலையின் அகல-நீளம் ஆகியவற்றுக்கு ஏற்ப காரை ஓட்டுவது அவசியம். சூழ்நிலைக்கு ஏற்றபடி உடனடியாக முடிவெடுத்து காரை ஓட்ட வேண்டும்!

 

விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் நான்கு! ஓவர் ஸ்பீடு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, சோர்வாக இருக்கும்போது வாகனம் ஓட்டுவது, பாதுகாப்பு விஷயங்களைக் கவனத்தில் கொள்ளாமல் (உதாரணம்: சீட் பெல்ட் அணியாமல்) வாகனம் ஓட்டுவது ஆகிய நான்கும்தான்! சாலையில் விபத்தைத் தவிர்க்கும் பொறுப்பு, வாகனத்தை ஓட்டும் டிரைவர்களிடம்தான் 90 சதவிகிதம் இருக்கிறது! வாகனம் ஓட்டும் ஒவ்வொருவருமே இந்த நான்கு விஷயங்களிலும் கவனமாக இருந்தால், விபத்தை எளிதில் தவிர்க்க முடியும்!

 

ஓவர் ஸ்பீடு

 

வாகனத்தின் வேகம் எப்போதுமே ஓட்டுபவரின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். வேகக் கட்டுப்பாடுகளை மீறினால், போலீஸிடம் மாட்டி அபராதம் கட்ட வேண்டியது இருக்கும். அல்லது மோசமான விபத்தில் சிக்க வேண்டியது இருக்கும்.

 

வேகமாக வாகனம் ஓட்டினால்…

 

அதிகபட்ச வேகத்தில் செல்லும் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துவது சிரமம். உங்கள் உயிருக்கும், சாலையில் செல்லும் மற்றவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். பாதிப்பு, கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மோசமானதாக இருக்கும். பாதசாரிகள் குறுக்கே வந்தாலோ அல்லது மற்ற வாகனங்கள் குறுக்கே வந்தாலோ, உங்களால் உடனடியாக வேகத்தைக் குறைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது!

 

மற்ற வாகனங்கள் உங்கள் மீது மோதாமல் தடுப்பதற்கு நீங்கள் தரும் நேரம் மிகக் குறைவு.

 

உங்களுக்கென வகுக்கப்பட்டு இருக்கும் வேக வரையறைக்குள் பயணம் செய்வதே பாதுகாப்பானது.

 

ஆல்கஹால்

 

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் நடக்கும் விபத்துகள்தான் தமிழகத்தில் அதிகம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது சட்டப்படி தவறு. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் உங்கள் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுவிடும்.

 

விபத்து ஏற்படப் போகிறது என்று ஒரு விநாடிக்கு முன்பு தெரிந்தால்கூட ஸ்டீயரிங்கைத் திருப்பி விபத்தைத் தடுத்துவிட முடியும். ஆனால், பெரும்பாலான விபத்துகள் ஒரு விநாடிக்கும் குறைவாக, அதாவது கண் இமைக்கும் நேரத்தில் நடப்பதால்தான் அவற்றைத் தடுக்க முடியாமல் போய் விடுகிறது. மதுவின் மயக்கத்தில் இருக்கும்போது, ஆல்கஹால் ரத்தத்துடன் கலந்து மூளையின் செயல்பாடுகளை மந்தமாக்கி விடும். இது, விபத்துக்கு வரவேற்பு(!) பண் பாடுவதாக அமையும்!

 

பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது எவ்வளவு கட்டாயமோ, அதுபோல் கார் ஓட்டுபவர் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்!

 

டிரைவர் சோர்வு…

 

நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளில் கணிசமான விபத்துகள், வாகனத்தை ஓட்டுபவர் தூங்கிக் கொண்டே ஓட்டுவதால் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பகலைவிட இரவு நேரத்தில் விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் 30 சதவிகிதம் அதிகம்!

 

சோர்வாக இருந்தால்…

 

எந்தக் காரணத்தைக் கொண்டும் இரவு பத்து மணிக்குப் பிறகு தொடர்ச்சியாக நெடுஞ்சாலையில் கார் ஓட்டாதீர்கள்.

 

மதிய உணவு சாப்பிட்ட உடனேயே காரை ஓட்டாதீர்கள். குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது ஓய்வெடுத்த பிறகு காரை ஓட்டுங்கள்.

 

உங்களின் காரின் ஓட்டும் வேகம், திடீரென எந்தக் காரணமும் இல்லாமல் கூடினாலோ, குறைந்தாலோ வாகனம் ஓட்டுவதை நிறுத்திவிடுங்கள்.

 

உங்கள் கட்டுப்பாட்டை மீறி வாகனம் சாலையில் அங்கும் இங்கும் அலை பாய்ந்தால், உடனடியாக சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி சற்று நேரம் ஓய்வெடுங்கள்.

 

தூக்கம் வருவதுபோல் இருந்தால் டீ அல்லது ஜூஸ் அருந்திவிட்டு, பதினைந்து நிமிடங்கள் ஓய்வெடுத்துவிட்டு வாகனம் ஓட்டுங்கள்!

 

கார் ஓட்டும் போது கவனம் தேவை…

 

விபத்து ஏற்பட்ட உடன் நாம் உடனே சொல்லும் காரணம், ‘அந்த வாகனத்தை நான் பார்க்கவேஇல்லை’ என்பதுதான். பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணமே கவனம் இல்லாமல் காரை ஓட்டுவதுதான். செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டுவது, காருக்குள் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, ரேடியோ கேட்பதில் அதிகக் கவனம் செலுத்துவது அல்லது பகல் கனவு கண்டு கொண்டே காரை ஓட்டுவது… விபத்து நடக்க இப்படி பல காரணங்கள் உள்ளன!

 

கார் ஓட்டும்போது இதுபோன்ற விஷயங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து காரை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பும்போது, ‘நான் எந்த வாகனத்துக்கும், எந்தப் பாதசாரிக்கும், எந்தப் பொதுச் சொத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்த மாட்டேன்’ என்று உறுதி எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்புங்கள்.

 

சாலையில் தாறுமாறாக காரை ஓட்டுகிறவர்களைச் சட்டை செய்யாதீர்கள். அவர்களுடன் சண்டை போடாதீர்கள். அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே உங்கள் மனதை விட்டு அகன்று விடும். அவர்கள் செய்கின்ற தவறை நீங்களும் செய்யாதீர்கள்.

 

நீங்கள் கார் ஓட்டும்போது பின்னால் வரும் வாகனங்களுக்குத் தொடர்ந்து சரியான சிக்னல்களைக் கொடுத்துக் கொண்டே இருங்கள். நீங்கள் திரும்பும்போது, இண்டிகேட்டர்களைப் போட்டுக் காட்ட மறக்காதீர்கள். அதேபோல், லேன் மாறும்போதும் சிக்னல் செய்யுங்கள். சாலையில் ஆட்கள் இல்லை என்றாலும் இந்தப் பழக்கத்தைப் பழகுங்கள். அப்போது தான் இது எப்போதுமே மறக்காது. பிரேக் அடிக்கும் போது, பிரேக் லைட்டுகள் ஒளிர்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

காரின் தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப பராமரிப்பு முறைகளும் மாறும். காரின் பராமரிப்பு குறித்து உங்களுக்குத் தெரியாத விஷயங்களை சர்வீஸ் சென்டரில் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

 

உங்களின் காரை முறையாகப் பராமரிக்கும்போது, அநாவசியச் செலவுகள் குறையும், காரின் மைலேஜ் அதிகரிக்கும் என்பதோடு… காரை நீங்கள் விற்கும்போதும் நல்ல விலைக்கு விற்க முடியும், அனைத்துக்கும் மேலாக நீங்கள் காரில் செல்லும்போது பாதுகாப்பாக உணர்வீர்கள்! 

 

உங்கள் பயணம் இனிதாக அமைய

கோட்டகுப்பம் இணையத்தளம் மற்றும்

FIVE ஸ்டார் நற்பணி மன்றத்தினரின் 

வாழ்த்துக்கள்!

3 comments

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s