பத்திரப் பதிவு செலவில் பகல் கொள்ளை! உஷார்!


பத்திரப் பதிவு செலவில் பகல் கொள்ளை! உஷார்!

 

மனையோ, சொத்தோ வாங்கும்போது அது ஒரிஜினல் உரிமையாளருக்குச் சொந்தமானதுதானா? வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா? என்பதைப் பார்க்கும் அதே நேரத்தில் கூடவே பத்திரப் பதிவு செலவையும் பார்க்க வேண்டியது அவசியத்திலும் அவசியமாகிவிட்டது.  

 

காரணம், சொத்து விற்பனை படுத்துவிட்ட நிலையில் பத்திரப் பதிவிலும் லாபம் பார்க்க தொடங்கி இருக்கிறார்கள், சில பலே லேண்ட் புரமோட்டர்கள் மற்றும் பில்டர்கள். பதிவுக் கட்டணத்தைவிட பல மடங்கு பணத்தைக் கேட்கிறார்கள் சில ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள் என்கிற புகார் நமக்கு வரவே, களத்தில் இறங்கி விசாரிக்கத் தொடங்கினோம்.

 

விழுப்புரம் அருகே பஞ்சாயத்து அப்ரூவல் லே-அவுட்டில் மனை வாங்கிய சுரேஷ் என்பவர் நம் கண்ணில் பட்டார். அவர் அரை கிரவுண்ட் மனை வாங்கி இருக்கிறார். அவரிடம் விசாரணையில் இறங்கினோம்.

 

அவர் வாங்கிய லே-அவுட்டில் ஒரு சதுர அடி மனையின் அரசு வழிகாட்டி மதிப்பு 45 ரூபாய். 1,200 ச.அடி.யின் மதிப்பு 54,000 ரூபாய். பத்திரப் பதிவு செலவாக 10,000 ரூபாய் கேட்டிருக்கிறார், லே-அவுட் போட்ட புரமோட்டர். தமிழ்நாட்டை பொறுத்த வரை, மனை விலையில் (அரசு வழிகாட்டி மதிப்பு) 8 சதவிகிதம் முத்திரைக் கட்டணம், 1% பதிவுக் கட்டணமாக இருக்கிறது. அதன்படி, இந்த மனைக்கு முத்திரைக் கட்டணம் ரூ.4,320, பதிவுக் கட்டணம் 540 ரூபாய் ஆக மொத்தம் 4,860 ரூபாய் தந்தாலே போதும். இதுபோக பத்திரம் எழுதும் செலவு மற்றும் ‘மேற்படி’ செலவு எல்லாம் 1,500 ரூபாய் என்று வைத்துக் கொண்டால்கூட அதிகபட்ச மொத்த செலவு சுமார் 6,400 ரூபாய் ஆகும். சுமார் 3,500 ரூபாய் புரமோட்டருக்கு லாபகரமாக இருக்கிறது.

 

அந்த வகையில், மனை வாங்குபவர்கள் லேண்ட் புரமோட்டர்கள் சொல்லும் பத்திரப்பதிவுத் தொகையை அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொள்ளாமல், அரசு வழிகாட்டி மதிப்பு மற்றும் பத்திரச் செலவு போன்றவற்றைக் கணக்கிட்டு தாங்கள் பத்திரச் செலவுக்காக கொடுக்கும் தொகை நியாயமானதா என்பதைக் கவனியுங்கள். புரமோட்டர்கள் கேட்கும் தொகை மிக அதிகமாக இருந்தால், ஏன் இவ்வளவு தொகை? என்று கேளுங்கள். கணக்கில் காட்ட முடியாதபடிக்கு அநியாயமாக கேட்கிறார்கள் எனில்,  பத்திரச் செலவைக் குறைக்க லேண்ட் புரமோட்டரிடம் தைரியமாக பேரம் பேசுங்கள். இதில் எந்த தவறும் இல்லை. நீங்கள் உழைத்த காசு, தேவை இல்லாமல் மற்றவர்களுக்கு ஏன் போக வேண்டும்?

 

பத்திரப்பதிவு செலவில் மக்கள் ஏமாறும் இன்னொரு இடம், புதிய அடுக்குமாடி குடியிருப்பு வாங்கும் போதுதான். இங்கே பில்டர், பத்திரச் செலவு 2 லட்சம் அல்லது 3 லட்ச ரூபாய் ஆகும் என்று சொல்லிவிடுவார். ஆனால், உண்மையில் அவ்வளவு பணம் செலவாகுமா என்பது கேள்விக்குறியே. காரணம், புதிய ஃபிளாட் என்கிறபோது பிரிக்கப்படாத மனையின் (யூ.டி.எஸ்.) அரசு வழிகாட்டி மதிப்புக்கு மட்டும்தான் முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் கட்ட வேண்டும்.

 

பொதுவாக, ஒரு இடத்தில் எத்தனை குடியிருப்புகள், எவ்வளவு காலி இடம் மற்றும் பொது பயன்பாட்டுக்கான இடம் விடப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து இந்த யூ.டி.எஸ். அளவு இருக்கும். வீட்டின் ச.அடி பரப்பு ஆயிரக்கணக்கில் இருக்கும்போது, இந்த யூ.டி.எஸ். நூற்றுக்கணக்கில்தான் இருக்கும். இந்த விவரம் தெரியாமல் பலரும், மொத்த விலைக்கு என நினைத்து பில்டர் கேட்கும் பணத்தைக் கொடுத்து விடுகிறார்கள். இப்படி ஏமாறாமல் இருக்க, யூ.டி.எஸ். எவ்வளவு என்று பார்த்து, மனையின் சதுர அடி மதிப்பைக் கணக்கிட்டுப் பார்ப்பது அவசியம்..!

 

இந்த புகார்களுக்கு பில்டர்கள் தரப்பில் என்ன பதில் சொல்கிறார்கள் என்பதை அறிய அவர்களையும் சந்தித்தோம்.

 

”பலரையும் மனை மற்றும் வீடு வாங்க வைக்க வேண்டும் என்பதற்காக பல நேரங்களில் பத்திரப்பதிவு கட்டணத்தை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம். இதை ஒரு வியாபார உத்தியாகவே செய்கிறோம். மேலும், மனையின் விலையை குறைத்துக் காட்டி விற்பனை செய்துவிட்டு, விடுபட்ட தொகையை பத்திரப்பதிவு செலவில் சேர்த்து வாங்கிவிடுவதும் நடக்கிறது. மனையைப் பார்க்க வருபவர்களை சைட்டுக்கு வேனில் அழைத்து சென்று காட்டுவது, பத்திரப் பதிவு அன்று காரில் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு காரில் அழைத்து செல்வது, அன்றைக்கு மதியம் அசைவ சாப்பாடு வாங்கி கொடுப்பதற்கான செலவு எல்லாவற்றையும் பத்திரப்பதிவு செலவில்தான் ஏற்ற வேண்டியிருக்கிறது” என்றார்கள்.

 

எது எப்படி இருந்தாலும், விரைவில் பத்திரப்பதிவு கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப் போகிற நிலையில், புரமோட்டர்கள் தங்கள் பங்குக்கு மக்களிடமிருந்து பணத்தைக் கறந்தால், மனை வாங்கி வீடு கட்டலாம் என கனவு கண்டு கொண்டிருக்கும் ஒன்றிரண்டு பேர்களும் மிரண்டு ஓடிவிடுவார்கள் என்பதை புரமோட்டர்கள் மறந்துவிடக்கூடாது!

 

இனியாவது மனை விலை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு விலையை கேட்கும்போது கூடவே பத்திரப்பதிவு செலவையும் கட்டாயம் கேளுங்கள்!  


வருமானம் உண்டு, வசதி இல்லை!

– பின்தங்கும் பதிவுத் துறை!

ரசுத் துறையைச் சேர்ந்த எல்லா அலுவலகங்களிலும் பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருகிறது அரசாங்கம். ஆனால், பத்திரப்பதிவு அலுவலகங்களில் மட்டும்  எந்த மாற்றமும் வந்த மாதிரி தெரியவில்லை என்கிறார்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள். பத்திரப்பதிவு அலுவலகங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார் திண்டுக்கல் ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் எஸ்.சண்முகம்.

 

”பத்திரப்பதிவு அலுவலகங்களை முதலில் முழுமையாக கணினிமயப்படுத்த வேண்டும். ஒரு பத்திரம் பதிவு செய்யப்பட்டவுடன் அதை உடனடியாக கணினியில் ஏற்றக்கூடிய அளவுக்கு நிலைமை முன்னேற வேண்டும். இந்த வசதி இல்லாததால், காலையில் ஒருவருக்கு பதிவு செய்து கொடுத்த இடத்தை மாலையில் வேறொருவருக்கு விற்றுவிடும் குளறுபடிகள் நடக்கின்றன.

 

ஒரு பத்திரத்தைப் பதிவு செய்ய பல மணி நேரம் செலவாகிறது. சில சமயங்களில் ஒருநாள் முழுக்க காத்திருக்க வேண்டியிருக்கிறது. பதிவு வேலைகளை விரைந்து முடிக்கிற அளவுக்கு போதுமான பணியாளர்கள் கிடையாது. இருக்கும் ஒரு சிலரும் தற்காலிக பணியாளர்கள் என்பதால் வேலைகளில் தாமதம் ஏற்படுகிறது. இதற்கு ஒரே வழி, நிரந்தர பணியாளர்களை அதிக எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும்.

 

ஒரு நகரத்தில் இரண்டு, மூன்று பதிவு அலுவலகங்கள் இருப்பதை ஒரே இடத்தில் கொண்டுவர வேண்டும். இதனால் வீண்அலைச்சல் குறையும்.  அரசுக்கு பெரும் வருவாய் ஈட்டித் தரும் பத்திரப்பதிவுத் துறையில் பதிவு செய்ய வருபவர்களுக்கு என்று எந்த ஒரு வசதியும் இல்லை. பல அலுவலகங்களில் பத்திரம் பதிவு செய்ய வந்தவர்கள் உட்காரக்கூட சேர் இல்லை. பதிவுக் கட்டணமாக பல ஆயிரங்களைச் செலுத்தும் மக்களுக்கு குறைந்தபட்ச வசதிகளையாவது செய்துதர வேண்டாமா?” என்று பொங்கினார் அவர்.

 

அரசுக்கு வருமானத்தை அள்ளித் தரும் பதிவுத் துறை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?


நன்றி : விகடன் 

One comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s